Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நன்மைகளின் கடவுளிடம் நம்பிக்கையோடு செல்வோமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
இன்றைய வாசகங்கள்(06.02.2023)
ஆண்டின் பொதுக்காலம், வாரம் 5 திங்கள்
மு.வா: தொநூ: 1: 1-19
ப.பா: திபா: 104: 1-2. 5-6. 10-12. 24,35
ந.வா: மாற்: 6: 53-56
நம் ஆண்டவர் நன்மைகள் நிறைந்தவர். அவர் படைத்ததெல்லாம் நல்லவையே. நன்மைகளின் ஆதாரமே கடவுள் தான். இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் தான் படைத்தது அனைத்தையுமே நல்லதெனக் கண்டார் என வாசிக்கிறோம். இவ்வாறாக நாம் அனைத்திலுமே நன்மைகளை மட்டுமே காண அழைக்கப்பட்டவர்கள். ஆனால் பல வேளைகளில் நன்மைகளைக் காண நாம் மறக்கிறோம். நன்மைகளின் இறைவனை அணுகிச் செல்ல மறுக்கிறோம். எனவே நாம் வாழ்வில் நன்மைகளை இழக்கிறோம். இத்தகைய நிலை மாற நாம் நன்மைகளின் இறைவனை நம்பிக்கையோடு நாடித் தேட வேண்டும்.
நன்மைகளை இழந்த மனிதகுலம் மீண்டும் நன்மைகளைப் பெற்று வாழ வேண்டும் என்பதற்காகவே கடவுள் இயேசுவை உலகிற்கு அனுப்பினார்.இயேசுவை எல்லாரும் உணர்ந்து கொள்ளவில்லை. அவரைக் கடவுளின் மனிதராக உணர்ந்த சிலர் மட்டுமே அவரை நம்பிக்கையோடு அணுகி அவருடைய அருளைப் பெற்றனர். நன்மைகளை அடைந்தனர்.இன்றைய நற்செய்தி வாசகமானது நம்பிக்கையோடு நம் கடவுளை அணுகிச் செல்ல வேண்டும் என்பதை விளக்குகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கனசரேத்து பகுதியில் வந்த உடன் மக்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டு அந்தச் செய்தியை அருகிலுள்ள பலருக்கும் எடுத்துரைத்தனர். நோயாளர்களையெல்லாம் அவரிடம் அழைத்து வந்தனர். அவருடைய மேலுடையைத் தொட்டால் கூட போதும் நலமடைந்து விடலாம் என்ற அளவுக்கு நம்பிக்கையோடு அவரைத் தேடி வந்தனர். அவர்கள் நிச்சயம் நன்மைகளை அடைந்திருப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பனிரெண்டு ஆண்டுகளாய் வாழ்வில் நல்லதையே அறிந்திராத பெண் இயேசுவின் ஆடையைத் தொட்டு இழந்த நல்வாழ்வை மீட்டுக்கொண்டார் அன்றோ. படுக்கையோடு தூக்கிவரப்பட்ட முடக்குவாத முற்றவர் குணம்பெற்றார் அன்றோ. ஏன்? அவர்கள் நம்பிக்கையோடு நன்மைகளின் இறைவனை நாடியதால்.
நாம் கடவுளின் படைப்புகள். நன்மையானவர்கள். நல்லவர்கள். ஆனால் நாம் பல சூழல்களில் நம் பலவீனத்தால் நன்மைகளை நம் வாழ்வில் இழந்திருக்கலாம்.இருப்பினும் நம்பிக்கையோடு நன்மைகளின் இறைவனை நாடினால் நிச்சயம் பயன் பெறமுடியும். இதை உணர்ந்தவர்களாய் நன்மைகளின் கடவுளை நம்பிக்கையோடு நாடுவோம்.
இறைவேண்டல்
நன்மைகளின் ஊற்றே இறைவா! நம்பிக்கையோடு உம்மிடம் வந்து வாழ்வில் இழந்த நன்மைகளையெல்லாம் மீண்டும் பெற்றுக்கொள்ள வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment