Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
கீழ்படிதலில் அருள்வாழ்வா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலம், வாரம் 5 வெள்ளி
I: தொநூ: 3:1-8
II: திபா 32:1-2, 5, 6, 7
III: மாற்: 7: 31-37
கீழ்ப்படிதல் என்ற பண்பானது மனித வாழ்வில் முக்கியமான பண்பாகக் கருதப்படுகின்றது. எல்லா துறைகளிலும் கீழ்படிதலின் மேன்மையையும் முக்கியத்துவத்தையும் அறிய முடிகின்றது. குறிப்பாக பெற்றோருக்கும் பெரியோருக்கும் கீழ்படியும் பிள்ளைகள் ஒழுக்கத்தையும் அறிவையும் ஞானத்தையும் பெற்றுக்கொள்ளமுடியும். ஆசிரியருக்கு கீழ்ப்படியும் மாணவர்கள் வாழ்வில் ஒழுக்கத்தையும் அறிவையும் முன்னேற்றத்தையும் காணமுடியும். சமூகத்தில் எத்தனையோ அரசு மற்றும் தனியார் துறைகள் இருக்கின்றன. அவற்றில் உயரதிகாரியாக கூடியவர்களுக்கு அவருக்கு கீழுள்ள அதிகாரிகளும் பணியாளர்களும் கீழ்படியும் பொழுது, அந்த துறையானது வெற்றியின் பாதை நோக்கி செல்லும்.
நம் நாட்டைக் காக்கின்ற ராணுவத் துறையினர் தங்களது உயர் அதிகாரிகளுக்கு கீழ்படியவில்லை என்றால் நம் நாட்டை எளிமையாக பிற நாடுகள் தாக்க நேரிடும். நம்முடைய வாழ்வில் எந்த ஒரு செயலாக இருந்தாலும் கீழ்படிதல் என்பது மிகச்சிறந்த ஒரு அறநெறி மதிப்பீடாக இருக்கின்றது. கீழ்ப்படிதல் நிறைந்த வாழ்வுதான் நமக்கு நிறைவான வாழ்வையும் வெற்றியையும் நல்ல வழிகாட்டுதலையும் கொடுக்கும். அதிலும் குறிப்பாக கீழ்ப்படிதல் யாருக்கு என்பதும் அவை நல்லதா கெட்டதா என்று தேர்ந்து தெளிவது நமக்கு மிகவும் அவசியம். கீழ்ப்படிதல் வாழ்வு அறநெறியும் நேரிய பாதையிலும் நல்ல நோக்கத்திலும் இருக்கின்றதா? என்பதிலும் தெளிவு பெறுதல் வேண்டும். அதற்கு இறைவேண்டல் மட்டுமே நமக்கு உதவி செய்யும். ஆண்டவர் இயேசு இறைவேண்டலின் வழியாகத்தான் இலக்குத் தெளிவினைப் பெற்றார். இறைமகனாகிய இயேசுவுக்கே இலக்கு தெளிவினை பெற இறைவேண்டல் தேவைப்படுகின்றது என்றால் நாம் எந்த அளவுக்கு இறைவேண்டல் செய்ய வேண்டும் என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளோம்.
கீழ்ப்படிதல் நம் வாழ்வை அருள்வாழ்வுக்கு வழிகாட்டும். இன்றைய முதல் வாசகத்தில் மனித குலம் எவ்வாறு பாவத்திற்கு உள்ளானது என்பது எடுத்துக் கூறப்பட்டுள்ளது. பாவம் இம்மண்ணில் நுழைந்ததற்கு அடிப்படைக் காரணம் கீழ்படிதல் இல்லாமையே ஆகும். கடவுள் இந்த உலகத்தைப் படைக்கும் பொழுது அனைத்தையும் நல்லதெனக் கண்டார். கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்ட மனிதர்கள் கடவுளின் நம்பிக்கையை கீழ்படியாமை என்ற பாவத்தால் உடைத்தனர். தங்களுடைய நன்மை தன்மையை இழந்தனர். இதன் வழியாக அவர்கள் கடவுளின் அருளை இழந்தனர்.நன்மை தீமை அறியும் பழத்தை கடவுளைப் போல மாற வேண்டுமென்ற சுயநலத்தால் உண்டனர். எனவே கடவுளின் அருளை இழந்தனர். பழத்தை உண்ணும் வரை அவர்கள் ஆடை இல்லாமல் இருந்தனர். அது அவர்களுக்கு வெட்கத்தை தரவில்லை. ஆனால் பழத்தை உண்ட பின் கடவுள் தோட்டத்திற்கு வந்த பொழுது, வெட்கத்தால் அவர்கள் அத்தி இலையை தங்களுக்கு ஆடைகளாக செய்துகொண்டனர். இங்கு வெட்கம் என்பது அவர்கள் கடவுளின் அருளை இழந்ததையும் குற்றவுணர்வையும் சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது.
முதல் பெற்றோரின் கீழ்படியாமை என்ற பாவம் மனித குலத்திற்கே சாபமாக இருந்தாலும் அது நமக்கு மிகச் சிறந்த வாழ்வியல் பாடத்தை புகட்டுகின்றது. நாம் நல்லவர்களாக வாழவேண்டுமென்றும் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழவேண்டுமென்றும் எவ்வளவு முயற்சி செய்தாலும் பாம்பாகிய சாத்தான் எவ்வாறு பாவம் செய்ய சூழலை ஏற்படுத்தியதோ அதே போல நமக்கும் பாவம் செய்யும் சூழல் ஏற்படும். அதற்கு நாம் கொடுக்காமல் மன உறுதியோடு கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற கீழ்ப்படிதல் உள்ளவர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம்.
கீழ்ப்படிதல் வாழ்வு எந்த அளவுக்கு மனித குலத்திற்கு மீட்பையும் கடவுளின் அருளையும் கொடுத்திருக்கின்றது என்பதை பற்றி விவிலிய பின்னணியில் ஒரு சிலவற்றை காண்போம். பழைய ஏற்பாட்டில் ஆபிரகாமை கடவுள் அழைத்தபோது அவர் நம்பிக்கையோடு கடவுளுக்கு கீழ்படிந்தார். எனவே கடவுளை அவருடைய வழித்தோன்றல் அனைத்தையுமே ஆசீர்வதித்தார். மோசே 480 ஆண்டுகளுக்கு மேலாக எகிப்தில் அடிமையாகயாக இருந்த இஸ்ரேல் மக்களை பார்வோன் மன்னனிடமிருந்து விடுவிக்க அழைத்த பொழுது, தொடக்கத்தில் தன்னுடைய பலவீனத்தின் பொருட்டு மறுப்பு தெரிவித்தாலும் பின்பு கடவுளுக்கு கீழ்படிந்தார். எனவே கடவுளின் அருளை இஸ்ரேல் மக்கள் பெற்று விடுதலையைப் பெற்றனர். தாவீதை கடவுள் அழைத்த பொழுது அவர் கடவுளுக்கு கீழ்ப்படிந்தார். எனவே கடவுள் அவரை இஸ்ரயேல் மக்களுக்கு மிகச் சிறந்த அரசராக மாற அருள்பொழிவு செய்தார். கடவுள் எரேமியாவை அழைத்த பொழுது, முதலில் சிறுபிள்ளை என்று மறுப்பு தெரிவித்தாலும் பின்பு கடவுளின் அழைப்பை கீழ்படிதலோடு ஏற்றுக்கொண்டார். இதன் வழியாக பல்வேறு துன்பங்களுக்கு மத்தியிலும் மிகச் சிறப்பான முறையில் இறைவாக்கினர் பணியினைச் செய்தார்.
புதிய ஏற்பாட்டில் அன்னை மரியாள் கடவுளின் மீட்புத் திட்டத்திற்கு கீழ்படிந்ததால் இயேசுவின் மீட்பு நம் அனைவருக்கும் கிடைத்துள்ளது. இயேசு இறைமகனாக இருந்த போதிலும், அவர் தனது தந்தையின் திருவுளத்திற்கு கீழ்ப்படிந்து கொடூரமான சிலுவைச் சாவின் வழியாக நம்மை மீட்டுள்ளார். சீடர்களை இயேசு அழைத்த பொழுது கீழ்ப்படிந்த அனைவரும் இயேசுவின் சீடர்களாக மாறி மிகச்சிறந்த இறையாட்சி பணியினைச் செய்தனர்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட ஒரு வல்லச்செயலை இயேசு செய்துள்ளார். காது கேளாதவரும் திக்கி பேசுபவருமான ஒருவரை இயேசு குணப்படுத்தினார். இதற்கு அடிப்படையாக இருப்பது அவர் நம்பிக்கை. நம்பிக்கைக்கு அடிப்படையாக இருப்பது கீழ்ப்படிதல். நாம் கடவுளை நம்புகிறோமென்றால் அது கடவுளிடம் நாம் கொண்டுள்ள கீழ்ப்படிதலால் மட்டுமே ஆகும்.
நம்முடைய கத்தோலிக்கத் திருஅவை 2000 ஆண்டுகளுக்கு மேலாகவும் உயிர்த்துடிப்போடு இருக்கிறதென்றால் அதற்கு காரணம் கீழ்படிதல். கடவுளுக்கு அவர் மகன் இயேசு கீழ்படிந்தார். ஆண்டவர் இயேசுவுக்கு திருஅவை வழிநடத்திய திருத்தந்தையர்கள் கீழ்ப்படித்தனர். திருத்தந்தைக்கு கர்தினார்கள் கீழ்ப்படிகின்றனர். கர்தினார்களுக்கு பேராயர்கள் கீழ்ப்படிகின்றனர். பேராயர்களுக்கு ஆயர்கள் கீழ்ப்படிகின்றனர். ஆயர்களுக்கு குருக்களும் துறவறத்தாரும் பொதுநிலையினரும் கீழ்ப்படிகின்றனர். ஆயரின் பதிலாளியாக பங்குகளில் பணி செய்கின்ற குருக்களுக்கும் பொதுநிலையினர் கீழ்ப்படிகின்றனர். இவ்வாறாக திருச்சபையின் ஆட்சி அமைப்பு முறையே கீழ்ப்படிதல் முறையில்தான் அமைந்துள்ளது.
எனவே கடவுளின் அருளைப் பெற்றுக் கொள்வதற்கு கீழ்ப்படிதல் என்ற உன்னதமான பண்பு மிகவும் அவசியம். நம்முடைய முதல் தாய் ஏவாள் கீழ்ப்படியாததால் கடவுளின் அருளை இழந்தார். அதுவே பாவம் இம்மண்ணில் உருவாக அடித்தளமாக இருந்தது. ஆனால் அன்னை மரியாவின் கீழ்படிதல் இந்தப் பாவத்தில் இருந்து அனைவரும் மீட்பு பெற்று நிறைவான வாழ்வை பெற்றுக்கொள்ள அடிப்படையாக இருந்தது. கிறிஸ்தவர்களாகிய நாம் கீழ்படிதல் என்ற உன்னதமான பண்பை பெற்றுக்கொள்ள மனித குலத்தின் முதல் தாயான ஏவாளிடமிருந்து கீழ்ப்படிதல் வாழ்வில் எப்படி இருக்ககூடாது என்ற வாழ்வியல் படத்தையும் அன்னை மரியாவிடம் இருந்து கீழ்ப்படிதல் வாழ்வில் எவ்வாறு சிறந்து விளங்க வேண்டும் என்பது பற்றியும் கற்றுக்கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். கீழ்ப்படிதல் வழியாக கடவுளின் அருளைப் பெற்றுக் கொள்ளத் தேவையான அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! கீழ்ப்படிதல் என்ற உன்னதமான பண்பின் வழியாக உமது அருளை நிறைவாகப் பெற்றுக் கொள்ள தேவையான அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment