Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இயேசுவின் இதய அன்பும் புனித அருளானந்தரும்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலம், வாரம் நான்காம் சனி
புனித அருளானந்தர் விழா
I: எபி 13:15-17,20-21
II: திபா 23:1-3,4-5,6
III: யோவான் 12:24-26
இயேசுவின் இதய அன்பு இந்த மனுகுலத்திற்காக பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இறைச்சாயலில் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரையும் அரவணைக்கக் கூடியதாக இருக்கிறது. நாம் எவ்வளவு தான் பாவிகளாகவும் பலவீனர்களாகவும் இருந்தாலும் நமக்கு மன்னிப்பையும் புது வாழ்வையும் தரக்கூடியதாக இருக்கிறது.
" நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்." என்று யோவான் 10:10 லே இயேசு கூறிய வார்த்தைக்கு முழு அர்த்தம் கொடுப்பதாக உள்ளது அவரது திரு இதயம். இயேசுவின் இதயம் நமக்காக பற்றி எரிவதைப் போலவே நம்முடைய இதயங்களும் இயேசுவுக்காகவும் பிறருக்காகவும் பற்றி எரிய வேண்டும். இதுதான் அவரது இதய அன்பை சுவைப்பதன் முழுமை. இந்த முழுமையை வாழ்வில் உணர்ந்தவர்தான் புனித அருளானந்தர். இயேசுவின் இதய அன்பை புனித அருளானந்தர் எவ்வாறு வாழ்வாக்கினார் என்பதை உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்கிறேன்.
செம்மண் புனிதரான புனித அருளானந்தர்
இயேசுவின் இதய அன்பை தம் சிறுவயது முதலே உணர்ந்தவராய் இறையழைத்தலுக்கு செவிமடுத்தார். இயேசுவின் மனநிலையை தன் பணிவாழ்வில் வெளிப்படுத்தினார். இயேசு சென்ற இடமெல்லாம் நன்மை செய்தது போல அருளானந்தரும் சென்ற இடமெல்லாம் நன்மை செய்தார். தன் சொந்த நாட்டை விட்டு இந்திய நாட்டிற்கு வந்து தன் போதனையாலும் நற்செயல்களாலும் சாட்சியமாய் இவர் வாழ்ந்ததே இதற்கு சான்று.இயேசுவின் இதய அன்பு புனித அருளானந்தர் வாழ்வில் வெளிப்பட்டுள்ளது என்பதை தொடர்ந்து காண்போம்.
முதலாவதாக இயேசுவின் இதய அன்பு தந்தையாம் கடவுளை நோக்கி இருந்தது. தன்னுடைய பணிச்சுமையின் மத்தியிலும் இயேசு தனிமையில் இறைவனோடு உறவாடினார். அதுவே அவருடைய பணிவாழ்விற்கு பலம் சேர்த்தது.புனித அருளானந்தரும் கடும் செபத்திலும் கடும் தவத்திலும் தன்னை ஈடுபடுத்தி கடவுளோடு நல்லுறவு கொண்டார்.இதன் வெளிப்பாடே அவரது அர்த்தமுள்ள துறவு வாழ்வு. கடவுளோடு இணைந்து இருந்ததாலேயே தனது பதினைந்து வயதிலேயே அவர் இறையழைத்தலை உணர்ந்தவராய் இருந்தார்.இயேசுவுக்கும் தந்தைக்கும் இருந்த உறவு இயேசுவை தந்தையின் திருஉளத்தை தவிர வேறு எதையும் சிந்திக்கத் தூண்டவில்லை. இறைதிருஉளத்தை நிறைவேற்றுவதே தனக்கு உணவு என்றார் . அவ்வாறே புனித அருளானந்தரும் இறைதிருஉளத்தை நிறைவேற்றுவதை தனது உயிர்மூச்சாகக் கொண்டார் என்றால் அது மிகையாகாது.அத்திருஉளத்தை ஏற்றவராய் முன்பின் தெரியாத நாட்டிற்கு இறைபணி செய்ய அவர் துணிந்தார்.
இரண்டாவதாக இயேசுவின் இதய அன்பு மக்களை நோக்கி இருந்தது.
"ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்
ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்" (லூக் 4:18-19) என்ற எசாயா இறைவாக்கினரின் வார்த்தைகளை வாழ்வாக்கியவர் இயேசு.
சமூகத்தில் ஒடுக்கப்பட்டோர், ஓரங்கட்டப்பட்டோர், விளிம்பு நிலையில் உள்ளோர், நோயாளர்கள் ,பாவிகள், ஏழை எளியவர்கள் போன்றோரை நாடித் தேடிச் சென்றது இயேசுவின் இதய அன்பு. இயேசு யாருக்காக பணிசெய்தாரோ அவர்களோடு தன்னையும் ஒருவராக இணைத்துக்கொண்டார்.
இயேசுவின் இந்த மனநிலையைத் தனதாக்கி புனித அருளானந்தரும் மக்களைத் தேடிச் சென்று பணிசெய்தவராய் வாழ்ந்தார்.
புனித அருளானந்தர் போர்த்துகல்லில் பிறந்தவர். மறைபரப்பு பணிக்காக இந்திய நாட்டிலுள்ள தமிழ் மாநிலத்திற்கு வந்த அவர் அம்மக்களின் கலாச்சாரம், பண்பாடு, மொழி, பழக்க வழக்கங்கள் என அனைத்தையும் ஏற்றுக்கொண்டு மக்களோடு தன்னை இணைத்துக்கொண்டார். படிப்பறிவில் பின்தங்கிய மக்களின் நிலைக்கு இறங்கி நற்செய்தியை போதித்து பலரை மனமாற்றினார். ஏழை எளியவரோடு அன்பாய் பழகினார். தன்னுடைய செய வலிமையால் ஏராளமான நோயாளர்களை குணப்படுத்தி இயேசுவின் குணமளிக்கும் இதய அன்பிற்கு சான்று பகர்ந்தார்.
மூன்றாவதாக இயேசுவின் இதய அன்பு தந்தையையும் மக்களையும் இணைப்பதாக இருந்தது. இயேசு பாவிகளோடு விருந்துண்டார். பாவிகளாகக் கருதப்பட்ட மத்தேயு, சக்கேயு, மகதலா மரியா போன்றவர்களை தனக்கு சீடர்களாக மாற்றினார். புனித அருளானந்தரும் தன் போதனையாலும் சாட்சியமுள்ள வாழ்வாலும் பலரை மனமாற்றி இயேசுவை ஏற்றுக்கொள்ளச் செய்தார். புனித அருளானந்தரால் குணம் பெற்ற தடியத்தேவர் கிறிஸ்தவ மறையைத் தழுவ விரும்பிய போது அவருடைய பாவ நிலையை அருளானந்தர் சுட்டிக் காட்டி மனந்திரும்ப வழிகாட்டினார். தடியத்தேவரும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார் என அவரது வாழ்க்கை வரலாறு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.
நான்காவதாக இயேசுவின் இதய அன்பு துன்பங்களையும் பாடுகளையும் தந்தையின் மகிமைக்காகவும் உலகின் மீட்புக்காகவும் ஏற்றுக்கொண்டது.
"கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" (யோவான் 12:24) என்று இயேசு மொழிந்ததை நாம் அறிவோம். அவ்வார்த்தைகளை இயேசு வாழ்வாக்கி சிலுவையிலே மடிந்தார். அதன் விளைவாகவே நிலைவாழ்வு எனும் பலன் உலகிற்கு கிடைத்தது.
இதே மனப்பாங்கை தன்னகத்தே கொண்ட புனித அருளானந்தரும் துன்பங்களையும் பாடுகளையும் இறைமாட்சிக்காக ஏற்கத் துணிந்தார். இடுக்கமான வாயில் வழி நடந்தார். தன் சிலுவையைத் தூக்கிக்கொண்டு இயேசுவைப் பின்தொடர்ந்தார். தடியத்தேவரின் மனமாற்றத்தால் வெகுண்டெழுந்த அரசரின் கோபத்திற்கு ஆளான அருளானந்தர், பலவித சிலுவைகளை சுமக்க நேரிட்டது. சிறைதண்டனைகள் , தண்ணீரில் மூழ்கடிக்கப்படுதல் போன்ற தண்டனைகளின் கொடுமுடியாக சிரைசேதம் செய்யப்பட்டு இரத்தம் சிந்தி இறந்தார். மறைசாட்சிகளின் இரத்தம் நம்பிக்கையின் வித்து என்பதை எண்பிக்கும் வண்ணம் மடிந்த கோதுமைமணியாம் அருளானந்தரின் இரத்தம் இன்று சிவகங்கை மறைமாவட்டத்திற்கே நம்பிக்கையின் வித்தாக அமைந்தது.
ஆம் இயேசுவின் இதய அன்பு தந்தையை நோக்கி இருந்தது. மக்களை நோக்கி இருந்தது. தந்தையையும் மக்களையும் இணைப்பதாய் இருந்தது. துன்பங்க ளை மகிழ்வுடன் ஏற்றது. அவ்வாறே புனித அருளானந்தரின் இதயமும் இறைவனை நோக்கியதாக, மக்கள் பணியை நாடியதாக, மக்களை இறை உறவில் வளர்த்தெடுத்ததாக, சிலுவைகளை சுமக்கும் சீடத்துவத்தின் சாட்சியாக இருந்தது.அவருடைய நம்பிக்கை வழியில் பயணிக்கும் நாமும் இயேசுவின் இதய அன்பை வாழ்ந்த அருளானந்தரைப்போல வாழ முயற்சிப்போம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா! புனித அருளானந்தரைப் போல நற்செய்தியை உலகெங்கும் பரப்பி இயேசுவின் இதய அன்பை உலகிற்கு உணர்த்திட எங்களுக்கு வரமருளும்.ஆமென்
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment