Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நம்பிக்கைக்குரிய அறிவுள்ள பணியாளராய் வாழத் தயாரா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலம், வாரம் 21 வியாழன்
I: 1 தெச: 3: 7-13
II: திபா: 90: 3-4. 12-13. 14,17
III: மத்: 24: 42-51
இன்றைய வாசகங்கள் ஆண்டவரின் வருகைக்கு எந்நேரமும் தயாராக இருக்கும் உண்மையுள்ள நம்பிக்கைக்குரிய அறிவுள்ள பணியாளர்களாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கின்றன. அதை எளிதில் விளக்கும் வண்ணம் நம் ஆண்டவர் இயேசு கூறிய உவமை அமைகிறது.இவ்வுவமையை சற்று ஆழமாகச் சிந்தித்துப்பார்ப்போம்.
முதலாவதாக வேலையாளருக்கு வேளாவேளை உணவு பரிமாறும் பொறுப்பு என்பது மிக முக்கியமான ஒரு பணி. இப்பணியைச் செய்ய அமர்த்தப்பட்டவர் நம்பிக்கைக்குரியவராக இருப்பது அவசியம்.ஏனெனில் இவர் இப்பணியைச் சிறப்பாகவும் நேரமும் நேர்மையும் தவறாமல் நிறைவேற்றினால் தான் மற்ற பணியாளர் சோர்வடையமாட்டார்கள். அவர்களுடைய உடல் நலம் சரிவரப் பேணப்பட்டால்தான் வீட்டு உரிமையாளர் ஒப்படைத்த பணிகள் சிறப்பாகச் செய்யப்படும்.
மாறாக உணவு பரிமாறும் பணியாளர் அலட்சியமாக இருந்து மற்ற பணியாளருக்கு உணவு வழங்காமல் அவர்களைத் துன்புறுத்தினால், நிச்சயமாக அவர்கள் சோர்வடைவர். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை அவர்களால் நிறைவேற்ற இயலாது. மேலும் உரிமையாளரின் வீட்டுப் பணிகள் தடைபடும் பொழுது நிச்சயமாக பணியாளர்கள் அவரது கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளாவர். எந்த ஒரு பணியாளர் இதை உணர்ந்து செயல்படுகிறாரோ அவரே அறிவுள்ள பணியாளராவார்.அவர் வேலைக்கு அமர்த்தியவரின் பாராட்டைப் பெறுவார்.
இரண்டாவதாக அவ்பணியாளர் தலைவர் இருக்கும் போது வேலையை செய்வதும் இல்லாத போது செய்யாமல் அலட்சியமாக விடுவதும் அப்பணியாளரின் நம்பிக்கையற்ற நேர்மையற்ற மனநிலையை விளக்குகிறது. நேர்மையான அல்லது நம்பிக்கைக்குரிய பணியாளர் தன்னை வேலைக்கு அமர்த்தியவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன் கடமையைச் சரியாக செய்து அவர் தன்னுடைய நேர்மைக்குரிய கையாறை நிச்சயமாகப் பெறுவார்.
அன்புக்குரியவர்களே, கடவுள் நம் வாழ்வின் உரிமையாளர். அவர் நமக்குத் தந்த இந்த வாழ்வை சிறப்பாக வாழ்வது நமக்குக் கொடுக்கப்பட்ட கடமை. இவ்வாழ்வை அதற்கான நியமப்படி வாழ்வதும் அவ்வாறு வாழாமல் போனால் நமக்கு ஏற்படும் அவல நிலையை உணர்ந்து அதைத் தவிர்ப்பதும் நமது அறிவைச் சார்ந்தது. அதேபோல நம்மைக் கண்காணிக்க யாருமில்லை என வாழாமல் மனச்சான்றுக்கும் கடவுளுக்கும் பயந்து சிறப்பாக வாழ்ந்து காட்டுவது நமது நம்பகத்தன்மை. இயேசு நம்மிடம் இவை இரண்டையுமே எதிர்பார்க்கிறார். அவ்வாறு வாழ்ந்தால்தான் ஆண்டவரை எதிர்கொள்ள இயலும். சிந்திப்போம். நம்பிக்கைக்குரிய அறிவுள்ள பணியாளராய் வாழ்வோம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா! நம்பிக்குரியவராகவும் அறிவுடையவராகவும் வாழ்ந்து உமது வருகைக்கு எப்போதும் தயாராக இருக்கும் மனநிலையைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment