Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
வெளிவேடத்தைக் களைந்து அகத்தோற்றத்தையே புறத்திலும் பிரதிபலிப்போம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலம், வாரம் 21 புதன்
I: 1 தெச: 2: 9-13
II: திபா: 139: 7-8. 9-10. 11-12
III: மத்: 23: 27-32
ஒரே வகுப்பைச் சார்ந்த சில மாணவர்கள் அவ்வகுப்பிலே உள்ள குறிப்பிட்ட ஒரு மாணவரைப்பற்றி வகுப்பு ஆசிரியரிடம் புகார் செய்தனர். அம்மாணவன் வகுப்பறையில் பல சேட்டைகள் செய்வதாகச் சொல்லி அம்மாணவனின் குறும்புகளை பெரிய பட்டியல் போட்டுக் காட்டினர். ஆனால் ஆசிரியர் தன்னைப் பொறுத்தவரை அம்மாணவர் வகுப்பில் நன்னடத்தையோடு தான் இருக்கிறார் எனவும் வீணாக யாரையும் பற்றி புகார் செய்ய வேண்டாம் எனவும் கூறி மற்ற மாணவர்களை அனுப்பிவிட்டார். ஆயினும் இத்தனைபேர் வந்து புகார் செய்ததால் அம்மாணவர் மேல் ஒரு கண்வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. சில நாட்கள் சென்றன. ஒரு நாள் ஆசிரியர் வகுப்புக்கு வரச் சற்று தாமதமாயிற்று. அச்சமயத்தில் அம்மாணவன் தன் சேட்டைகளைத் தொடங்கினான். மற்ற மாணவர்களை அடிப்பதும் கேலி செய்வதுமாக இருந்த அம்மாணவனை ஆசிரியர் பார்த்துக்கொண்டிருந்தார் என்பதை அவன் உணரவில்லை. திடீரென ஆசிரியரைக் கண்ட அம்மாணவன் தன்னுடைய வேடம் கலைந்துவிட்டது என்பதை உணர்ந்தவனாய் அமைதியுடன் இருக்கையிலிருந்து எழுந்தான். அவனைப் பார்த்து ஆசிரியர் " உலகை ஏமாற்றுவதாய் எண்ணி உன்னை ஏமாற்றாதே. எப்படியும் ஒருநாள் வேடம் கலைந்துவிடும்" என்று கூறிச் சென்றார்.
அன்பு நண்பர்களே இச்சிறுநிகழ்வில் நாம் கண்ட மாணவனின் குணம் இவ்வுலகையே நமக்குப் படம் பிடித்து காட்டுவதை நம்மால் உணரமுடிகிறதா? . நமது அன்றாட கொச்சைத் தமிழ் வழக்கில் ஒரு பழமொழி உண்டு. "வெளியே மினுக்கடி. உள்ளே புழுக்கடி " என்பது தான் அது. அதாவது பிறர்முன் நல்லவர்கள் போன்று பிதற்றிக்கொண்டு உள்ளே எல்லா தீய எண்ணங்களையும் கொண்டிருத்தல் என்பதே அதன் பொருள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இதைத்தான் இயேசு "வெள்ளையடிக்கப்பட் ட கல்லறை " என்று கூறுகிறார். இன்னும் தெளிவாகச் சொன்னால் அசுத்த சிந்தனைகளை மனதிலே கொண்டு வெளிப்புறத்தில் இவரைப்போல புனிதருண்டா என பிறர் சொல்லும்படி நடிப்பது.
இம்மனநிலையை யூதர்கள் மட்டும் கொண்டிருக்கவில்லை. மாறாக பல வேளைகளில் நாமும் இப்படித்தான் . உள்ளொன்றும் புறமொன்றுமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இடத்திற்கும் ஆட்களுக்கும் சூழ்நிலைக்கும் ஏற்றார் போல முகமூடிகள் அணிந்து நமது சுயத்தை இழந்து பொய்யான வாழ்க்கையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
இதனால் நமக்கு பயனொன்றும் இல்லை. மாறாக இழப்புதான் ஏற்படுகிறது. நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்கிறோம். இறுதியில் வெறுமைக்குத் தள்ளப்படுகிறோம்.
ஆம். அன்புக்குரியவர்களே நாம் எண்ணுவது போல வாழ்கின்ற போதுதான் நம்மைப்பற்றி நம்மால் அறிய முடியும். நம்மையே நாம் அறிந்தால்தான் ஏற்றுக்கொள்ள முடியும். ஏற்றுக்கொண்டால் தான் நம்மால் சீரமைக்க முடியும்.இயேசு உள்ளும் புறமும் ஒன்றாக அதாவது தூயவராக நல்லவராக இருந்தார். நாமும் அவரைப்போல வாழ முயல்வோம். நமது அகத்தையே புறமாக்குவோம்.
இறைவேண்டல்
அன்பு இயேசுவே வெளிவேடத்தைக் களைந்து எம் அகமும் புறமும் ஒன்றுபோல் அமைந்து நன்மையை மட்டுமே பிரதிபலிக்க வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment