Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
புனித வாழ்வுக்கு சான்று பகர்வதா! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் 20 ஆம் வியாழன்
புனித பார்த்தலோமேயு திருநாள்
I: திவெ: 21: 9b-14
II: திபா: 145: 10-11. 12-13. 17-18
III: யோவா: 1: 45-51
இன்று தாய் திருஅவையோடு இணைந்து திருத்தூதரான புனித பர்த்தலமேயு அவர்களின் திருவிழாவை நாம் கொண்டாடுகின்றோம். பர்த்தலமேயு என்ற பெயருக்கு "தொலமேயுவின் மகன் "என்று பொருள். இவரின் இயற்பெயர் "நத்தனியேல் "ஆகும். இந்தப் பெயருக்கு "இறைவனின் கொடை" என்று பொருள் . இன்றைய புனிதர் நம்முடைய இந்திய நாட்டிற்கு வந்து கல்யான் என்ற பகுதியில் நற்செய்தி அறிவித்துவிட்டு, பின்பு அர்மேனியா நாடு சென்று மறைசாட்சியாக மரித்தார் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர் .
இன்றைய நற்செய்தியில் வருவதுபோல பர்த்தலமேயு என்ற நத்தனியேல் ஆன்மீக அனுபவத்திற்காக தேடலில் இருந்ததாக நாம் அறிய முடிகின்றது. இவரிடம் முழுமையாக ஆன்மீகத் தேடல் இருந்தது என்பதை இன்றைய நற்செய்திசுட்டிக்காட்டுகின்றது.
முதலாவதாக, பிலிப்பு நத்தனியேலுக்கு இயேசுவை மெசியா என்று அறிமுகம் செய்து வைக்கின்றார். நம்முடைய அன்றாட வாழ்விலே பெரும்பாலும் நமக்கு அறிமுகமானவர்களையும் தெரிந்தவர்களை மட்டுமே அறிமுகம் செய்து வைப்போம். இன்றைய நற்செய்தியில் பிலிப்பு நத்தனியேலுக்கு இயேசுவை அறிமுகம் செய்து வைக்கிறார். அந்த அளவுக்கு நத்தனியேல் ஒரு ஆன்மீக தேடலை கொண்டவராக வாழ்ந்து வந்தார். மெசியாவாகிய இயேசுவை கண்டு அவரைப் பின்பற்றி நற்செய்தி மதிப்பீட்டின்படி வாழும் அளவுக்கு நத்தனியேலுக்கு நற்பண்புகள் இருந்ததால் பிலிப்பு மெசியாவாக இயேசுவை அறிமுகம் செய்து வைத்தார்.
இரண்டாவதாக, இயேசு தம்மிடம் வந்த நத்தனியேலைப் பார்த்து "இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர் " என்று கூறினார். இது நத்தனியேலின் தூய்மையான மனநிலையையும் சான்று பகர கூடிய வாழ்வையும் சுட்டிக்காட்டுகிறது. பெரும்பாலும் கபடற்ற என்ற வார்த்தை தூய மனநிலையை சுட்டிக்காட்டுகிறது. உண்மையான இஸ்ரயேலர் என்ற வார்த்தை கடவுளின் கட்டளைகளையும் இறை விருப்பத்தையும் வாழ்வாகிய வாழ்வை சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. இவர் கடவுளின் கட்டளைகளை கடைபிடித்த மனிதராக வாழ்ந்ததால் தான் இயேசு இவரை பாராட்டுகிறார்.
மூன்றாவதாக, இவர் அத்திமரத்தின் கீழ் அமர்ந்ததாக இன்றைய நற்செய்தியானது சுட்டிக்காட்டுகின்றது. யூதர்களைப் பொறுத்த வரையில் அத்தி மரம் என்பது அமைதியின் அடையாளமாக கருதப்பட்டது. அத்தி மரம் அடர்ந்த கிளைகளை கொண்டிருப்பதால் அந்த நிழலில் யூதர்களின் கடவுளின் வார்த்தையை தியானிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். நத்தனியேல் ஒவ்வொரு நாளும் அத்தி மரத்தின் அடியில் கடவுளின் வார்த்தையை தியானித்தவராய் வாழ்ந்தார். எனவேதான் இயேசு இவரை கபடற்றவர் என்றும் உண்மையான இஸ்ரயேலர் என்றும் கூறினார். கடவுளின் வார்த்தைக்கு செவிமடுத்து அதை தியானித்து அதனை வாழ்வாக்கும் மனிதர்களே உண்மையான இஸ்ரயேலராக கருதப்பட்டனர்.
இவை மூன்றும் இன்றைய நாள் புனிதரின் சிறப்பு பண்புகளாக சுட்டிக்காட்டப்படுகிறது. இன்றைய நாள் புனிதர் நமக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கின்றார். மெசியாவாகிய இயேசுவை நாம் அறிந்துகொள்ளும் அளவுக்கு நம்மிடையே ஆன்மீகத் தேடல் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்க அழைக்கப்பட்டுள்ளோம். நம்மையே தீய வாழ்வை விட்டுவிட்டு தூய வாழ்வின் வழியாக தகுதிப்படுத்தும் பொழுது நாமும் இயேசுவால் பாராட்டப்பட்டு அங்கீகரிக்கப்படுவோம். அத்தி மரத்தின் அடியில் ஒவ்வொரு நாளும் இறைவார்த்தையை இன்றைய புனிதர் தியானித்தது போல, நாமும் தியானிக்கும் பொழுது இயேசுவின் சீடர்களாக உருமாறி அவரின் நற்செய்தி மதிப்பீட்டிற்கு நம் சொல்லாலும் செயலாலும் சான்று பகர முடியும்.
பர்த்தலமேயு இயேசு உயிர்த்தெழுந்த பிறகு இயேசுவின் நற்செய்தியை மிகவும் வல்லமையோடு அறிவித்தார். தன் உயிரையும் பெரிதாக பொருட்படுத்தாமல் மறைச்சாட்சியாக இரத்தம் சிந்தி நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர்ந்தார். எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் புனித பர்த்தலமேயுவைப் போல நாமும் தூயவர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இறைவார்த்தை ஒவ்வொருநாளும் தியானித்து அதை வாழ்வாக அழைக்கப்பட்டுள்ளோம். தனது உயிரினும் மேலாக இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டை பிறருக்கு வழங்க அழைக்கப்பட்டுள்ளோம். அவ்வாறு வாழும் பொழுது "வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் " என்று இயேசு உறுதியாகக் கூறியதை நம் மண்ணுலக வாழ்விலும் விண்ணுலக வாழ்விலும் உணரமுடியும். புனித வாழ்வின் வழியாக ஆன்மீக அனுபவத்தை பெற தேவையான அருளை இறைவேண்டல் செய்வோம்.
இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! உம் திருமகனின் திருத்தூதராகிய பர்த்தலமேயுவைப் போல நாங்கள் புனித வாழ்விலும் இறைவார்த்தையை தியானிப்பதிலும் அதன்படி வாழ்வதிலும் கருத்தாய் இருக்க தேவையான அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment