Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
பெறுவதில் அல்ல; கொடுப்பதில் தான் நிறைவா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் 20 ஆம் திங்கள்
I: நீதி: 2: 11-19
II: திபா: 106: 34-35. 36-37. 39-40. 43,44
III: மத்: 19: 16-22
நாம் வாழும் இந்த சமூகத்தில் மனிதன் எதிலும் முழுமையை தேடி செல்லுகிறான். தான் பார்க்கின்ற அனைத்திலும் முழுமையை நிறைவை காண முயற்சி செய்கிறான். ஆனால் முழுமையான விடுதலையை பெற முடிவதில்லை. காரணம் அனைத்தையும் தானே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சுயநலப்போக்கு. பிறரிடமிருந்து பெறுவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, பிறருக்கு கொடுக்கும் மனநிலைக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உண்மையான இழத்தலில் தான் வாழ்வின் நிறைவையும் முழுமையும் சுவைக்க முடியும்.
இன்றைய நற்செய்தியில் செல்வரான இளைஞருக்கு ஒரு வகையான தேடல் இருந்தது. நிச்சயமாக அவர் ஆண்டவர் இயேசு செய்த வல்லச் செயல்களையும் போதனைகளையும் தன் கண்களால் கண்டிருப்பார். அவரிடம் செல்வம் இருந்தும் அவருக்கு பேரும் புகழும் இல்லை. எனவே இயேசுவின் பின்னால் சென்றால் தனக்கு பேரும் புகழும் கிடைக்கும் என அவர் நினைத்திருக்கலாம். எனவேதான் அந்த செல்வந்தர்"போதகரே, நிலைவாழ்வைப் பெற்றுக் கொள்வதற்கு நாள் என்ன நன்மை செய்ய வேண்டும்? "என்று கேட்டார். இந்த செல்வந்தரின்பணப் பெருமையை சுட்டிக்காட்டுகிறது. மேலும் மற்றவர்கள் முன்பாக தன்னை நல்லவனாக காட்டிக்கொள்ளும் மனநிலையையும் சுட்டிக்காட்டுகிறது. அந்த மனநிலையை தெளிவாக புரிந்து கொண்ட நம் ஆண்டவர் இயேசு அந்த செல்வந்தரான இளைஞரிடம் "நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும் "என்று கூறினார்.
ஆண்டவர் இயேசு இந்த வார்த்தைகளை சொன்னபொழுது அந்த செல்வரான இளைஞர் அமைதியாக வருத்தத்தோடு அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டார். ஏனென்றால் அந்த செல்வந்தரான இளைஞருக்கு ஏராளமான சொத்துக்கள் இருந்தன. இவ்வுலகம் சார்ந்த செல்வங்களை துறக்க முன் வராதவர்கள், இயேசுவின் இறையாட்சி மதிப்பீடுகளை பின்பற்ற முடியாது. நிலைவாழ்வின் சுவையை அனுபவிக்க முடியாது. உண்மையான இறை ஆசீரும் அருளும் பெறுவதில் அல்ல; இழப்பதில் தான் இருக்கின்றது. பிறர் நமக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என நாம் நினைக்கிறோமோ, அவற்றை நாம் பிறருக்கு செய்யும் பொழுது நம் வாழ்வில் நிறைவையும் மகிழ்வையும் சுவைக்க முடியும்.
நம்முடைய அன்றாட வாழ்விலும் யோசித்துப் பார்ப்போம். நாம் பல நேரங்களில் இயேசுவின் சீடராக வாழ நினைக்கிறோம். நிலை வாழ்வை பெற்று இறை மகிழ்ச்சியில் நிலைக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் அவற்றை முழுமையாக நாம் அனுபவிக்க முடிவதில்லை. காரணம் நம்மிடம் பிறருக்காக இழக்கும் மனநிலை இல்லாமையே ஆகும். மெழுகு தன்னை இழப்பதால் இருள் நிறைந்த இடத்தில் ஒளியை கொடுக்கின்றது. பழ மரங்கள் தன்னை இழப்பதால் உன்ன பழங்கள் கொடுக்கின்றன. ஆனால் நாம் பல நேரங்களில் பிறருக்கு பலன் கொடுக்காததற்கு காரணம் பிறருக்காக இழக்கும் மனநிலை இல்லாமையே ஆகும்.
பிறர் மகிழ்வில் மகிழ்வது தான் உண்மையான நிலை வாழ்வு. நாம் வாழும் இந்த உலகத்திலே ஏதோ வந்து வாழ்ந்தோம் என்று வாழாமல், நம்மால் பலர் வாழ்ந்தனர் என்ற நிறைவோடு செல்வதுதான் நிலைவாழ்வு. உலகத்தில் எத்தனை நபர்கள் வாழ்ந்தார்கள் இறந்தார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் நினைவில் கூறப்படுவதில்லை. பிறர் வாழ்வுக்கு ஒளியாக இருந்து வழிகாட்டிய ஒரு சிலர் மட்டுமே நினைவு கூறப்படுகின்றனர். இதுதான் நிலைவாழ்வு. ஆண்டவர் இயேசு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்து இறந்து விண்ணகம் சென்றாலும் அவர் விட்டுச்சென்ற இறையாட்சி மதிப்பீடுகள் இன்றளவும் நினைவு கூறப்படுகின்றன. இதுதான் நிலைவாழ்வு. எனவே நிலைவாழ்வு என்பது பிறரிடமிருந்து நன்மைகளைப் பெறுவதல்ல ; பிறர் வாழ்வு வளம் பெற நம்மிடம் நிறைவாக இருப்பதை இழப்பது. இழத்தல் துன்பம் அல்ல ; அது சுகமான உணர்வு. அதை அனுபவித்து பார்த்தவர்கள் நிலை வாழ்வின் முன் சுவையை அனுபவித்துள்ளனர். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் புனித அன்னை தெரசா. ஆடம்பரமான அந்த வாழ்வை விட்டுவிட்டு ஏழை எளிய மக்கள் வாழ்வு பெற வேண்டுமென்று அனைத்தையும் இழந்து அந்த மக்களுக்கு வாழ்வு கொடுத்தார். எனவேதான் அவர் இன்றளவும் உலகம் போற்றும் புனிதையாக வலம் வருகிறார். எனவே நம்முடைய அன்றாட வாழ்விலும் நிலை வாழ்வின் முன் சுவையை இந்த மண்ணகத்தில் அனுபவிக்க வேண்டுமா? பிறரிடமிருந்து பெறுவதை விட்டுவிட்டு ; நம்மால் இயன்றதை பிறருக்கு கொடுக்கும் மனநிலையை வளர்த்துக் கொள்வோம். அத்தகைய மனநிலை இருக்கின்ற பொழுது நாம் கிறிஸ்துவின் மனநிலையுள்ள மக்களாக மாறுகின்றோம்.
இறைவேண்டல் :
அன்பான இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் பகிர்தல் என்ற நல்ல மனநிலையை வளர்த்து பிறருக்கு வாழ்வு கொடுக்கும் நல்ல உள்ளங்களாக நாங்கள் மாறிட அருளைத் தாரும். ஏழைகளின் சிரிப்பில் எந்நாளும் உம்மை கான நல்ல மனநிலையைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment