Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
திருமணத்தின் மேன்மையை அறிய வேண்டுமா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் 19 ஆம் வெள்ளி
I: யோசு: 24: 1-13
II: திபா: 136: 1-3. 16-18. 21,22,24
III: மத்: 19: 3-12
உறவுகளுள் தலைசிறந்தது திருமண உறவு. திருமணத்தின் மேன்மையை கடவுள் தொடக்கத்தில் படைப்பின் வழியாக தெளிவுபடுத்தியுள்ளார். கடவுள் ஆணையும் பெண்ணையும் படைத்தது திருமண வாழ்விற்கு கடவுள் கொடுத்து அங்கீகாரமாக இருக்கின்றது. இந்த திருமண வாழ்வு புனிதமான ஒன்று. திருமண வாழ்வு தான் திருஅவையின் மற்ற அருள்சாதனங்களுக்கு ஆணிவேராக இருக்கின்றது. ஒரு மரத்திற்கு ஆணிவேர் பட்டுப் போனால் அந்த மரம் முழுவதும் பட்டுவிடும். அதேபோல திருமணம் என்ற அந்த வாழ்வு சரியாக இருக்க வேண்டும். அது சரியாக இல்லையென்றால் மற்ற அருள்சாதனங்களும் பாதிக்கப்படும் சூழல் இருக்கின்றது.
இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக ஆண்டவர் இயேசு திருமண வாழ்வில் வாழக்கூடியவர்களை எப்படி வாழவேண்டும் என்பதை சுட்டிக்காட்டி வழிகாட்டியுள்ளார். கணவனும் மனைவியும் ஒரே உடலாக மாற வேண்டும் என்று இயேசு அழைப்பு விடுக்கிறார். ஏனெனில் நம் உடம்பில் ஒரு பகுதியிலே வலி ஏற்படுகிறது என்றால், மற்ற பகுதிகளில் உணரமுடிகின்றது. அதேபோல கணவனுக்கு ஒரு பிரச்சனை என்றால் மனைவி அவரோடு தன் பிரச்சினையாக கருதி உடனிருக்க வேண்டும். அதேபோல மனைவிக்கு ஒரு பிரச்சனை என்றால் கணவர் தன் மனைவியின் பிரச்சினையை தன் பிரச்சினையாக ஏற்றுக்கொண்டு உடன் பயணிக்க வேண்டும். இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் உண்மையாகவும் பிரமாணிக்கமாகவும் இருப்பதுதான் உண்மையான குடும்ப வாழ்வு.
இத்தகைய அன்பும் ஒற்றுமையும் நிறைந்த கருத்தைத்தான் குடும்ப வாழ்வில் கணவன் மனைவியும் கொண்டிருக்க வேண்டும் ஆண்டவர் இயேசு சுட்டிக்காட்டியுள்ளார். எனவே திருமண வாழ்வைப் புனிதமாகக் கருதி ஒருவரை ஒருவர் மதிக்கவும் நேசிக்கவும் கணவர் மனைவியும் முயற்சி செய்ய வேண்டும். அப்பொழுது குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியும் நிறைவும் இருக்கும். எனவே திருமணத்தின் மேன்மையை நாம் அனைவரும் அறிந்து இறைவனின் கருவிகளாக மாற தேவையான அருளை வேண்டுவோம்.
இறைவேண்டல் :
வல்லமையுள்ள இறைவா! திருமணம் என்ற அருள் சாதனத்தில் வழியாக உமது இறை திருவுளத்திற்கு சான்று பகரும் நல்ல மனநிலையை கணவர் மனைவியருக்குத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment