Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இறைப்பணியா? குடும்பப் பின்னணியா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் 17 ஆம் வெள்ளி
I: லேவி: 23: 1, 4-11, 15-16, 27, 34b-38
II: திபா 81: 2-3. 4-5. 9-10
III: மத்: 13: 54-58
ஒரு ஊரில் ஏழை விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் மிகச் சிறந்த திறமைசாலி. படிப்பிலும் கெட்டிக்காரன். அவன் படிக்கும்போதே தன் தந்தையோடு ஒவ்வொரு நாளும் விவசாயம் செய்து கொண்டே படித்து வந்தான். தன்னுடைய திறமையாலும் முயற்சியாலும் கல்லூரி இளங்கலை படிப்பில் பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெற்றான். அவனின் அறிவுத் திறமையைக் கண்டு பல்கலைக்கழகமே வியந்து நின்றது. படித்த மேதாவிகள் கூட அவரின் அறிவுக்கூர்மையை கண்டு வியந்து பாராட்டினர். தான் வாங்கிய தங்கப்பதக்கத்தை மிகுந்த மகிழ்ச்சியோடு வீட்டிற்கு கொண்டு வந்தான். அவன் வீட்டாரும், அருகில் வசித்தவர்களும் அவரின் அறிவுக்கூர்மையும் திறமையும் பாராட்டுவதை விட்டுவிட்டு, அவன் வாங்கிய தங்கப்பதக்கத்தை விற்றால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்று பேசிக் கொண்டனர். இதைக் கண்ட அந்த சாதித்த மாணவனுக்கு வருத்தம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் அவன் இவற்றையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல், சற்றும் மனம் தளராமல் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வாழ்வில் மென்மேலும் வெற்றியடைந்து, மிகப்பெரிய வேலையில் அமர்ந்தான். அதன் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு தனது குடும்பம் மட்டுமல்லாது சுற்றி வாழ்ந்தோரின் பொருளாதாரத் தேவைகளையும் நிறைவு செய்தான்.
நம் ஆண்டவர் இயேசு இறையாட்சி பற்றிய போதனைகளை உவமைகள் வழியாகப் போதித்தார். பல வல்ல செயல்களைச் செய்தார். பல மக்கள் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டனர். மேற்கூறிய நிகழ்வில் சாதித்த மாணவரைப் பார்த்து பேராசிரியர்கள் வியந்ததைப் போல, கலிலேயாவை சுற்றியுள்ள பிற பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் வியந்தனர். குடும்பத்தினரும் சுற்றியுள்ளவர்களும் அந்த மாணவர் சாதித்து பெற்றத் தங்கப்பதக்கத்தை குறைவாக மதிப்பிட்டது போல, இயேசுவின் சொந்த ஊர் மக்களும் இயேசுவின் இறையாட்சி பணியினை குறைவாக மதிப்பிட்டனர். வளர்ந்துவரும் மக்களைப் பார்த்து குறைவாக மதிப்பிடும் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையை இன்றைய நற்செய்தி வாசகம் அறிவுறுத்துகின்றது.
இறையாட்சி பற்றிய போதனையின் வழியாக இவ்வுலகில் மாற்றுச் சமூகத்தை தோற்றுவிக்கும் கருத்தியல்களை வழங்கினார் இயேசு. மனித நேயமும் மனித மாண்பும் இம்மண்ணில் கட்டியெழுப்பப்பட அன்பு, உண்மை, நீதி, மற்றும் சமத்துவம் போன்ற சிந்தனைகளை வழங்கினார். அவர் சார்ந்திராத பிற பகுதி மக்கள் அவரை ஏற்றுக் கொண்டாலும் தன் சொந்த ஊர் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள தயங்கினர். ஒரு சில பிற பகுதி மக்களும் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு "உலகமோ அவரை அறிந்து கொள்ளவில்லை " (யோ:1:10) என்ற வார்த்தைகள் சான்றாக இருக்கிறது. மேலும் "அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை." (யோ: 1:11) என்ற வார்த்தைகள் இயேசுவின் சொந்த ஊர் மக்கள் கூட அவரின் போதனையை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற மனநிலைக்கு சான்றாக இருக்கின்றது .
இயேசு செய்த வல்ல செயல்களையும் போதனைகளையும் கண்டு கலிலியோவின் சுற்றுப்புற மக்கள் அனைவருமே வியப்பில் ஆழ்ந்தனர். அவரின் பொருட்டு மக்கள் அனைவரும் இறைத்தந்தையைப் போற்றிப் புகழ்ந்தனர். இதற்கு "இயேசுவைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது "(மாற்: 1:28) என்ற வார்த்தைகள் சான்றாக இருக்கின்றது.
இயேசுவின் சமூக மாற்றத்தை நோக்கிய போதனைகளைப் பற்றி பிற பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். ஆனால் இயேசுவின் சொந்த ஊராகிய நாசரேத்து மக்கள் அவரின் போதனைகளையும் வல்லச் செயல்களையும் ஞானத்தையும் கண்டு வியந்தாலும், அவரை அவர் குடும்பத்தோடு, குடும்ப பின்னணியோடு ஒப்பிட்டு குறுகிய வட்டத்துக்குள் சிந்தித்து அவரின் மீது அவநம்பிக்கை கொண்டிருந்தனர்.
தன் சொந்த ஊர் மக்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளாத மனநிலையை பின்வரும் கேள்விகள் நமக்கு வெளிப்படுத்துகிறது. "எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர் தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? " (மத்: 13: 54-56) போன்ற கேள்விகள் தன் சொந்த ஊர் மக்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளாத மனநிலையை சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. எனவேதான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, "தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர்கள் மதிப்புப் பெறுவர்." (மத்: 13:57) எனக் கூறுகிறார்.
நம்முடைய அன்றாட வாழ்விலே நம் சொந்த ஊரிலிருந்து இறைப் பணிக்காக சென்ற இறைப்பணி யாளர்களைச் சாதியின் பெயராலும் பொருளாதாரத்தின் பெயராலும் குடும்ப பின்னணியின் பெயராலும் குறைவாக மதிப்பிடாமல், அவர்கள் இயேசுவின் பணியைச் செய்ய வந்தவர்கள் என்று அவர்களுடைய போதனைகளையும், வாழ்க்கைச் சான்றையும் ஏற்றுக்கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். அவர்கள் இயேசுவின் பணியாளர்கள் என நம்பி அவர்களின் போதனைகளை ஏற்றுக்கொள்ளும் பொழுது, நிச்சயமாக கடவுளுடைய வல்லச் செயல்களையும் அருளையும் சுவைக்க முடியும். "அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் இயேசு அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை "(மத்: 13:58) என்ற வார்த்தைகள் இயேசுவினுடைய வார்த்தைகள் மீது நம்பிக்கை கொள்ளும் பொழுதுதான் வல்ல செயல்கள் நடைபெறும் என்ற சிந்தனையைச் சுட்டிக்காட்டுகிறது. எனவே நம் ஊரை சார்ந்த இறை பணியாளர்களையும் பிற ஊரிலிருந்து வந்து நமது ஊரில் இறை பணியாற்றும் இறைப் பணியாளர்களையும் சாதி, பணம், குடும்ப பின்னணி போன்ற வற்றைக் கண்டு அவர்களை மதிப்பிடாமல் , அவர்களை இயேசுவின் இறை கருவிகளாக பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள இறையருள் வேண்டுவோம். பிறருடைய வளர்ச்சியைக் குறைவாக மதிப்பிடாமலும் பொறாமைப்படாமலும் இருக்கும் மனப்பக்குவத்தை வேண்டுவோம். இதன் வழியாக நாம் இயேசுவின் பிள்ளையாக உருமாறி, அவரின் வல்ல செயல்களை அனுபவிக்க முடியும்.
இறைவேண்டல் :
வல்லமையுள்ள இறைவா! நாங்கள் பிறருடைய வளர்ச்சியை கண்டு குறைவாக மதிப்பிடாமலும் பொறாமைப்படாமலும் இருக்க நல்ல மனதை தாரும். எங்கள் ஊரிலிருந்து இறைப்பணி செய்ய நீர் அழைத்த எல்லோருக்கும் ஞானத்தையும் அறிவுக்கூர்மையும் தந்தருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment