Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நற்செய்தியை பரப்புவோம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பாஸ்கா காலம்-மூன்றாம் செவ்வாய்
I: திப:7: 51 - 8: 1
II: திபா :31: 2-3. 5,6-7. 16,20
III:யோவான் :6: 30-35
இன்று புனித மாற்கு நற்செய்தியாளரின் விழாவை நாம் கொண்டாடுகிறோம். இவர் திரு அவை பாரம்பரியத்தின்படி மாற்கு நற்செய்தியின் ஆசிரியராக கருதப்படுகிறார். முதன்முதலாக எழுதப்பட்ட நற்செய்தி இதுவாகும். மேலும் இவர் இயேசுவின் எழுபத்திரண்டு சீடர்களுள் ஒருவராகவும் கருதப்படுகிறார்.உயிர்த்த இயேசு விண்ணேற்றம் அடையும் போது உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள் என போதித்தார். அதனை தன் எழுதும் திறன் மூலமாக செய்தவர் புனித மாற்கு. இயேசு எனும் நற்செய்தியை உலகெங்கும் பறைசாற்ற இவருடைய பங்கேற்பு மிக முக்கியம்.
புனித மாற்கு நற்செய்தியாளரின் விழாவைக் கொண்டாடும் நாம் எல்லாரும் நற்செய்தி அறிவிப்பு பணியில் நாம் எந்த அளவுக்கு நமது பங்களிப்பை அளிக்கிறோம் என சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.நற்செய்தி அறிவிக்க வேண்டியது நமது கடமை எனக் கூறுகிறார் பவுலடியார். ஆம் இன்றைய நற்செய்தியில் நாம் வாசிப்பதைப் போல உயிர்த்த இயேசுவின் கட்டளையும் அதுதான். ஆனால் அக்கட்டளையை நாம் கடைபிடிப்பதில்லை என்பதுதான் உண்மை.
ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் சிலபேர் சேர்ந்து ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி மிகுந்த ஆர்வத்துடன் பேசிக்கொண்டும் அரட்டை அடித்துக்கொண்டும் இருந்தனர். தன்னைப் பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என உணர்ந்த அக்குழுவில் சேராத அலுவலருக்கு மற்றவர்களின் செய்கை மிகுந்த வருத்தத்தை அளித்தது. தாங்க முடியாத வருத்தத்தில் அந்த நபர் ஒருநாள் உண்மையை விளக்க வேண்டிய சூழல் உருவானது. அப்போதுதான் மற்றவர்கள் புரிந்துகொண்டார்கள் இத்தனை நாளும் தவறாக ஒரு விஷயத்தை தாங்கள் பரப்பியும் விமர்சித்தும் வந்ததை.
ஆம். நாமும் அப்படித்தான். நல்ல செய்திகளைத் தவிர மற்றவைகளை மிகுந்த ஆர்வத்தோடு பறைசாற்றுகிறோம். திரித்துக் கூறுகிறோம். புறணி பேசுகிறோம். இதனால் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கிறோம். மாறாக நமது இறைஅனுபவங்கள், செப அனுபவங்கள், நல்ல செய்திகள், கடவுள் நமக்கு தந்த ஆசிர்வாதங்கள் போன்றவற்றை நாம் பகிர்ந்தார்தால் அது எவ்வளவு நன்மை பயக்கும். உலகெல்லாம் சென்று நற்செய்தி அறிவிக்க நம்மால் இயலாவிட்டாலும் நாம் இருக்கும் இடத்தில் ஆன்மீக காரியங்களை, நாம் அனுபவிக்கும் இயேசுவைப் பகிர முயற்சிப்போமா ! மாற்கு நற்செய்தியாளர் தன் எழுத்தால் நற்செய்தி அறிவித்ததைப் போல நாமும் நம்மிடம் உள்ள இசை, எழுத்து, பேச்சு திறமைகள் மூலமாகவும் நாம் எழும்ப இயலாத வண்ணம் மூழ்கிக் கிடக்கும் ஊடகத்தின் மூலமாகவும் நற்செய்தியை பரப்ப முன்வருவோமா!
இறைவேண்டல்
அன்பு இயேசுவே! புனித மாற்கு நற்செய்தியாளரைப்போல எங்களையும் நற்செய்தியைப் பரப்புபவர்களாக மாற்றும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment