Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
கடவுளின் ஊழியனுக்குரிய பண்புகள் என்னிடம் உள்ளதா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
தவக்காலம் -புனித வாரம் திங்கள்
I:எசா: 42: 1-7
II: திபா 27: 1, 2, 3, 13-14
III:யோவா: 12: 1-11
நாம் அனைவரும் புனித வாரத்தில் இருக்கிறோம். கடந்த சில நாட்களாகவே நாம் நற்செயல்களை துணிச்சலுடன் செய்வது, இன்னல்களுக்கும் சவால்களுக்கும் மத்தியிலும் நேர்மையாளர்களாய் வாழ்வது,ஆண்டவர் பெயரால் துன்பங்கள் வழி ஆசிபெற்றவராய் வாழ்வது போன்ற கருத்துக்களை சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். அதே வரிசையில் இன்றும் நாம் கடவுளின் ஊழியரைப் பற்றி சிந்திக்கிறோம். அதுவும் சாதாரண ஊழியனல்ல அவருடைய பணிக்காக துன்புறும் ஊழியர்.
இன்றைய முதல்வாசகத்தில் கடவுள் தன் ஊழியருடைய பண்களை அழகாக இறைவாக்கினர் எசாயா மூலம் எடுத்துக்கூறுகிறார். நீதியை நிலைநாட்டுவதே கடவுளின் ஊழியனுடைய உண்மையான முதன்மையான பணி. அவர் தன்குரலை சத்தமாக உயர்த்துவதில்லை. அவருள் கடவுளின் ஆவி தங்கும். நீதியை நிலைநாட்டாமல் அவர் மனம் சோர்வடைய மாட்டார். மனம் தளரவும் மாட்டார் என துன்புறும் ஊழியரின் பண்பு நலன்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
இத்தனை குணநலன்களும் இயேசுவின் வாழ்விலே அப்படியே வெளிப்படுத்தப்படுவதை நாம் காண்கிறோம். இயேசு நீதியை நிலைநாட்டப் போராடிய சிறந்த போராளி. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட புறந்தள்ளப்பட்ட ஏழை எளிய மக்களுக்காக போராடினார். அவர்களோடு உடன் நடந்தார். அவர்களுக்கு அறிவு புகட்டினார். அவருடைய குரலை யாரிடமும் எங்கும் அவர் உயர்த்தியதில்லை. அதே வேளையில் தன் உயிருக்கே ஆபத்து என்ற நிலையிலும் அவர் சோர்ந்து போகமல் நீதி நிலைநாட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாய் இருந்தார்.
அன்புக்குரியவர்களே நாமும் நீதியை நிலைநாட்டவே அழைக்கப்பட்டுள்ளோம். நீதியின் பால் பசிதாகமுள்ளோர் பேறுபெற்றோர் எனவும் நீதியின் பொருட்டு துன்புறுவோர் பேறுபெற்றோர் எனவும் இயேசு தன் மலைப்பொழிவில் கூறியுள்ளார். நாம் நீதிக்காக குரல் கொடுக்கும் போது உண்மையில் கடவுளின் சீடர்களாகிறோம். இன்றும் நம் மத்தியில் நீதிக்காக குரல்கொடுப்பவர்கள் ஏராளம். சிறுபான்மையினருக்கெதிரான சட்டத்திற்காக, விவசாயிகளுக்கு எதிரான சட்டத்திற்காக, அத்தியா அவசிய பொருட்களின் விலை உயர்வுக்காக, பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளுக்காக, இயற்கை அழிப்பு, பழங்குடி மக்களின் வாழ்வாதாரக்கு எதிரான கொடுமைகள் என பல பிரச்சனைகளை எதிர்த்து நம் நாட்டிலும் ஊரிலும் எத்தனையோ நீதிக்கான போராட்டங்கள் நடக்கின்றன. அவற்றில் நமது பங்கேற்பு என்ன? நமது குரலும் நீதிக்காக ஓங்குகிறதா? சிந்திப்போம். உண்மையன இறை ஊழியானாக வாழ முயற்சிப்போம்.
இறைவேண்டல்
நீதியின் தேவனே! உமது நீதியை நிலைநாட்டும் ஊழியனாக வாழ எமக்கு உமது ஆவியின் வல்லமையைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment