Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
குடும்பமாய் இறை உளத்திற்கு பணிவோம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
திருக்குடும்பம் பெருவிழா
I: சீஞா: 3:2-7, 12-14
II: திபா: 128: 1-2. 3. 4-5
III: கொலோ: 3: 12-21
IV: மத்: 2: 13-15,19-23
குடும்பம் என்பது மனிதரை உருவாக்கும் பல்கலைக்கழகம். ஒவ்வொரு மனிதனும் குடும்பத்தில் இருந்துதான் அனைத்தையும் கற்றுக் கொள்கின்றான். ஒரு மனிதனை நல்லவனாகவும் தவறு செய்பவனாகவும் மாற்றுவது குடும்பம். எனவேதான் திருத்தந்தை "குடும்பம் ஒரு குட்டித் திருச்சபை "எனச் சுட்டிக்காட்டுகிறார். குடும்பம் என்ற ஒன்று நற்செய்தி விழுமியங்களை வாழ்ந்தால் மட்டுமே இந்த அகிலத் திருஅவை நற்செய்தி விழுமியத்தின் படி வாழ முடியும்.நல்ல குடும்பமே நல்ல சமூகத்தை உருவாக்கும்.
இன்று திருஅவையோடு இணைந்து நாம் திருக்குடும்பவிழாவைக் கொண்டாடுகிறோம்.யோசேப்புவை குடும்பத்தலைவராகவும் மரியாவை குடும்பத் தலைவியாகவும் இவர்களின் புதல்வனாக இயேசுவையும் உள்ளடக்கிய, நம் குடும்பங்களைப் போன்ற ஒரு சாதாரண குடும்பம்தான் அது. 2000 வருடங்களுக்கு முன் பாலஸ்தீன நாட்டில் நாசரேத்து ஊரில் வாழ்ந்த மிகச் சாதாரணமான ஒரு குடும்பம் "திரு "என்ற அடைமொழியோடு அழைக்கப்படுவதேன்? இறைமகன் இயேசு பிறந்ததால் மட்டுமா? இல்லை இறைமகன் இயேசு பிறப்பதற்கு ஏற்ப தன்னை தயாரித்ததாலா? இன்னும் ஆழமாக யோசித்தால் நமக்கு "இறை திருஉளத்தை வாழ்வாக்கியதால் " என்ற விடை நமக்குக் கிடைக்கிறது.
யோசேப்பு, மரியா, இயேசு என மூவரும் போட்டி போட்டுக்கொண்டல்லவா இறைசித்தத்திற்கு பணிந்தார்கள்."இதோ ஆண்டவனின் அடிமை "எனமொழிந்து கன்னியாக இறைமகனை கருவிலே தாங்கி ஆண்டவனுக்கு பணிந்தாள் மரியா. கனவிலே இறைசித்தத்தை உணர்ந்து அதை வெறும் கனவென்று உதாசீனப்படுத்தாமல் சொன்னவற்றை எல்லாம் செய்தார் யோசேப்பு. இறைமகன் என்ற நிலையைப் பற்றிக்கொள்ளாமல் மனிதனாய்ப் பிறந்து விண்ணகத் தந்தையின் புதல்வனாய் மட்டும் அல்லாமல் தன் மண்ணகப் பெற்றோரையும் இறைசித்தத்திற்கேற்ப மதித்து பணிந்து வாழ்ந்தார் இயேசு. இதனால்தானே இக்குடும்பம் திருக்குடும்பமானது.
இறைதிருஉளம் இவர்களுக்கு மகிழ்ச்சியான சொகுசான வாழ்க்கையைத் தரவில்லை. வறுமை, துன்பம்,பிரச்சினைகளுக்கு பஞ்சமில்லை இவர்கள் வாழ்வில். அத்தனையும் ஏற்றுக்கொண்டார்கள் இறைவனைப் பணிந்து.
இறைசித்தத்திற்கு பணிந்ததால் இத்திருக்குடும்பத்தில் ஒருவர் மற்றவர் மீது கொண்டுள்ள அன்பு, புரிதல், விட்டுக்கொடுத்தல், மன்னித்தல் போன்ற அத்தனை பண்புகளும் முழுமை அடைந்தன.
நம்முடைய குடும்பங்களை திருக்குடும்பத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்போமா ?இறைசித்தம் நம் குடும்பங்களில் மேலோங்கி நிற்கிறதா? நம்மிடைய உள்ள அன்பு, புரிதல், விட்டுக்கொடுத்தல், மன்னித்தல் போன்ற பண்புகள் முழுமையடைகிறதா?
ஆம் என்றால் இந்நிலை தொடர செபிப்போம். இல்லை என்றால் இனிமேல் திருக்குடும்பமாக மாற முயலுவோம்.
கணவன், மனைவி, பிள்ளைகள் கொண்டது மட்டும் குடும்பமல்ல. திருஅவை ஒரு குடும்பம். அன்பியம் ஒரு குடும்பம். பக்த சபைகளும் குடும்பங்களே. பங்கு ஒரு குடும்பம். துறவற த்தார் சேர்ந்து வாழும் குழுமங்களும் குடும்பங்களே. மூவொரு இறைவனை அடித்தளமாகவும், திருக்குடும்பத்தை முன்மாதிரியாகவும் கொண்டு நாம் அனைவரும் குடும்பமாக இறைதிருஉளத்தை நிறைவேற்ற ஒவ்வொருநாளும் முயற்சி செய்யத் தயாராவோம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா! திருக்குடும்பத்தை முன்மாதிரியாக எங்கள் குடும்பங்களில் இறைச்சித்தத்திற்கு பணிந்து வாழ வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment