Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அண்டை நாட்டில் தமிழ் வளர்க்கும் அருட்சகோதரி!
'தமிழ்ப் பேச்சு எந்தன் மூச்சு' என்ற காலம் மாறி 'தமிழுக்கு என்ன ஆச்சு' என்று வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்கு மத்தியில், மியான்மார் நாட்டில் பள்ளி செல்லும் பிள்ளைகளுக்குக் கோடை விடுமுறை நாட்களில் தமிழ்க் கல்வி கற்று கொடுத்து வருகிறார், அருட்சதோதரி விக்டோரியா அவர்கள். வேரித்தாஸ் தமிழ்ப்பணியினர் அவருடன்அலைபேசி மூலம் கலந்துரையாடியபோது அருட்சகோதரி விக்டோரியா கூறியவை:
துறவற சபையில் எப்படி இணைந்தீர்கள்?
எனது 13 வயதில் துறவற சபையில் சேர்ந்தேன். அம்மா என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் புனித சூசையப்பரிடம் வேண்டிக்கொள்வதற்காக எனது அம்மாவுடன் கோவிலுக்கு சென்றபோது ஏற்கனவே துறவறத்தில் சேர்ந்த எனது தோழிகளை அங்கு சந்தித்தவுடன் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தேன். அவர்களை பார்த்தவுடன் எனக்கும் துறவறத்தில் சேர ஆசை வந்தது. எனினும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல், புனித சூசையப்பரிடம் வேண்டிக்கொண்டு வீடு திரும்பிவிட்டேன். அன்றே புனித சூசையப்பர் எனது கனவில் தோன்றி, "நீ ஏன் மரியின் சபையில் சேர்ந்து பணி செய்ய கூடாது?" என்று கேட்டார். மறுநாள் காலையில், நடந்த அனைத்தையும் எனது தாயாரிடம் கூறினேன். மேலும், மரியின் சபையில் சேர்வதற்கான எனது விருப்பத்தையும் கூறினேன். முதலில் தயங்கிய எனது தாயார், பிறகு முழு மனதுடன் என்னை அனுப்பிவைத்தார். 1989 ஆம் ஆண்டு, ஜனவரி 4 அன்று எனது முதல் வார்த்தைப்பாட்டினை கொடுத்தேன்.
நீங்கள் மியான்மார் சென்றது எப்போது?
எனது தாத்தா பாட்டி அனைவரும் தமிழகத்திலுள்ள ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள். பிழைப்பிற்காக பர்மா (இன்றைய மியான்மார்) வந்தவர்கள் இங்கேயே வாழ்ந்துவிட்டார்கள். எனது அப்பா அம்மா இங்கு (மியான்மரில்) பிறந்தவர்கள் தான். நானும் இங்கு தான் பிறந்தேன். என்னுடன் சேர்த்து எங்கள் வீட்டில் 8 பெண்பிள்ளைகள் மற்றும் 2 ஆண் பிள்ளைகள். அதில் இருவர் இரட்டைச் சகோதரிகள். நாங்கள் அனைவருமே இங்கு தான் பிறந்து வளர்ந்தோம்.
மியான்மரில் பிறந்த உங்களுக்கு தமிழ் மொழி மீது ஆர்வம் வந்தது எப்படி?
நாங்கள் படித்த பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் பர்மீஸ் ஆகிய மொழிகள் மட்டுமே கற்றுத்தரப்பட்டன. எனினும், சிறு வயது முதல், மாலையில் வீட்டிற்கு அருகாமையில் இருந்த தமிழ் தெரிந்தவர்கள் எங்களுக்கு தமிழ் கற்று கொடுத்தனர். அப்படிதான் தமிழ் மொழியின் மீது பற்று வந்தது.
நீங்கள் எவ்வளவு ஆண்டுகளாக இப்படி பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுகொடுக்கிறீர்கள்?
கடந்த 5 ஆண்டுகளாக தமிழ் கற்றுக்கொடுத்து வந்தேன். கோடை விடுமுறை நாட்களில் பிள்ளைகளுக்கு தமிழ் வகுப்புகள் எடுப்போம். இப்போது நான் இடம் மாற்றம் பெற்றதால் என்னால் வகுப்புகள் எடுக்க முடியவில்லை. ஏனென்றால், இங்கு தமிழ் குடும்பங்கள் மிகவும் குறைவு. எனினும் எங்காவது தமிழ் கற்று கொடுக்க வேண்டும் என்றால் முதலில் என் பெயரை கொடுத்து விடுவேன்.
நீங்கள் கற்பிக்கும்போது நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை பற்றி கூறுங்கள்.
பிள்ளைகள் பள்ளியில் ஆங்கிலமும் பர்மீசும் கற்பதால் அவர்கள் தமிழ் பேசும்போது அந்த சுபாவம் அவர்களையும் மீறி வந்துடும். அதுவும் ஒரு விதமான அழகாகத்தான் இருக்கும். பொதுவாக வகுப்புகள் முடிவுபெற்றவுடன் பிள்ளைகளுக்கு தேர்வுகள் வைப்பது வழக்கம். பிள்ளைகளை ஊக்குவிக்கும் வகையில், தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெரும் மாணவர்களுக்கு தமிழ் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சங்கத்திலிருந்து பரிசுகள் வழங்குவார்கள். இவையனைத்தையும்விட வகுப்புகளில் கற்ற மாணவர்கள் திருப்பலிகளில் வாசகம், மன்றாட்டு முதலியன வாசிக்கும்போதும் அவர்களின் தமிழை கேட்க ஆனந்தமாக இருக்கும். இதுவே எங்களுக்கு சுவாரசியம் தான்.
உங்களிடம் கிறிஸ்தவ பிள்ளைகள் மட்டும் தான் தமிழ் கற்று கொள்வார்களா?
தமிழ் மொழியை கற்று கொள்ள ஆர்வம் உள்ள அனைத்து பிள்ளைகளும் எங்களிடம் தமிழ் கற்க மிகுந்த மகிழ்ச்சியுடன் வருவார்கள்.
மியான்மரில் கிறிஸ்தவர்களின் விசுவாசம் எந்த அளவிற்கு உள்ளது?
மிகவும் பக்தியாக இருப்பார்கள். குறிப்பாக நவநாட்களில் உபவாசம் இருந்து ஜெபிப்பது, காவி உடைகள் அணிவது போன்ற பக்தி முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.
குழந்தைகளுக்கு தமிழ்க கற்றுக்கொடுப்பதில் உங்கள் அனுபவம் பற்றி கூறுங்கள்.
நமது மொழியை இங்குள்ள பிள்ளைகளுக்கு கற்று கொடுப்பதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தமிழ் கற்றுக்கொடுக்கும் இந்த நற்பணியை கண்டிப்பாக செய்வேன்.
இவ்வாறு அருட்சகோதரி விக்டோரியா அவர்கள் கூறினார்கள். அவருக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.
ஆங்கிலமே வாழ்க்கை என்று மாறிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் தாய்மொழித் தமிழை மற்ற நாடுகளில் பறைசாற்றும் அருட்சகோதரி விக்டோரியா போன்றவர்களின் சேவையை பாராட்டுவோம். அவர்களின் பணி சிறக்க அவர்களுக்காக ஜெபிப்போம்.
நாம் நம் அன்றாட வாழ்வில் தமிழ் மொழியை கற்கிறோமா? கற்பிக்கிறோமா? சிந்திப்போம்…..
Comments
என் இனிய நல்வாழ்த்துக்கள்!
அருட்சகோதரியின் தமிழ் மொழி ஆர்வமும் அவரது செயல்பாட்டிற்க்கும் என் இனிய நல்வாழ்த்துக்கள்!
Add new comment