வியப்புக்குரிய நம்பிக்கை என்னிடம் உள்ளதா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


இன்றைய வாசகங்கள்(28.11.2022) 
திருவருகைக் காலம் முதல் திங்கள் 
மு.வா: எசா:  4: 2-6
ப.பா:  திபா 122: 1-2. 4-5. 6-7. 8-9
ந.வா: மத்: 8: 5-11

 வியப்புக்குரிய நம்பிக்கை என்னிடம் உள்ளதா? 

நம்பிக்கை" என்பது அறிவிற்கு அப்பால் ஏற்படும் உளம் சார்ந்த வெளிப்பாடு.இந்த நம்பிக்கை மனித வாழ்க்கைக்கு அடித்தளமாக இருக்கிறது. எத்தனை முறை நாம் நம்பிக்கையைப் பற்றி சிந்தித்தாலும் நம்பிக்கையின் பொருளை ஒருவராலும் சரியாக முழுமையாக வரையறுக்க இயலாது. ஏனெனில் நம்பிக்கை என்பது கண்களுக்கு புலப்படுவது அல்ல. உள்ளத்தால் உணர்ந்து செயல்படுத்தக் கூடியது. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முன்னே நகர்வதற்கு மிகப்பெரிய உந்து சக்தியாக அமைவது நம்பிக்கை எனலாம்.

திருவருகைக் காலத்தின் முதல் வாரத்தின் திங்கள் கிழமையன்று நமக்கெல்லாம் தரப்பட்டுள்ள அழைப்பு இறைவனை எதிர்கொள்ள இறை  நம்பிக்கையில் வளரவேண்டும் என்பதே.அதுவும் இறைவனே வியக்கத்தக்க வகையில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற மேலான அழைப்பு நமக்குத் தரப்பட்டுள்ளது. திருவருகைக் காலத்தின் சாராம்சமே விழிப்பாகவும் ஆயத்தமாகவும் மானிட மகனை எதிர்கொள்ளக் காத்திருத்தலே. இந்த காத்திருப்பில் நம்பிக்கை இல்லாது போனால் அந்தக் காத்திருப்புக்கு அர்த்தம் இல்லாது போய்விடுமன்றோ.

இன்றைய நற்செய்தியானது நாம் வியக்கத்தக்க இறைநம்பிக்கையில் வளர "நூற்றுவர் தலைவனை "நமக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் தந்துள்ளது. அவரின் நம்பிக்கையை இயேசு வியக்க காரணம் என்ன? நீர் என் இல்லத்திற்கு வரவேண்டாம். ஒரு வார்த்தை மட்டும் சொல்லும் எனறு நூற்றுவர் தலைவன் கூறியதா? அல்லது யாவே இறைவன் மீது நம்பிக்கை கொள்ளாத புற இனத்தார் அந்த இறைவனையே போதிக்கும் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு உதவி கேட்ட செயலா?

இவற்றையும் தாண்டிய ஒரு அருங்குணம் நூற்றுவர் தலைவனிடம் உள்ளது. நான் வருகிறேன் என்று இயேசு சொன்ன போதும் தன் தகுதியற்ற நிலையை இயேசுவிடம் கூறினார் அந்த நூற்றுவர் தலைவன். இதிலென்ன வியப்பு இருக்கிறது என நாம் யோசிக்கலாம். தன் தகுதியற்ற நிலையை வெளிப்படையாய்க் கூறிய பின்னரும் இயேசு தன் கோரிக்கையை நிறைவேற்றுவார் என்ற நூற்றுவர் தலைவனின் துணிச்சலான உறுதியான  நம்பிக்கையே இயேசுவை வியப்புக்குள்ளாக்கியது.

ஆண்டவரே என் உள்ளத்தில் நீர் வர நான் தகுதியற்றவன் என ஒவ்வொருமுறையும் திருப்பலியில் நாம் அறிக்கையிட்டு, நம் நிலையை உணர்ந்தவர்களாய் இயேசு நம்மை நிராகரிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் நாம் அவரை உட்கொள்கிறோமே! நம்மையும் பார்த்து இயேசு நிச்சயம் வியப்பாரன்றோ! இதை நாம் என்றாவது உணர்ந்ததுண்டா?

அன்புக்குரியவர்களே வியக்கத்தக்க நம்பிக்கை இதுதான். தகுதியற்ற நமக்கும் இயேசு தன் மனதைத் திறப்பார் என்ற உறுதியான நம்பிக்கையோடு நாம் அவரை அணுகினால் நமக்கு அவர் எல்லாம் செய்வார். ஆண்டவர் பிறப்புக்காய் ஆயத்தம் செய்யும் நாம் தகுதியற்ற நம் நிலையை தாழ்ச்சியோடு அவரிடம் கூறி அவரை அழைத்தால் நம் உள்ளங்களில் அவர் நிச்சயம் பிறப்பார். அதனால் நம் வாழ்வு மாறும்.இத்தகைய நம்பிக்கையில் நாம் வளர முயலுவோமா?

 இறைவேண்டல் 
அன்பு இறைவா நாள்தோறும் நாங்கள் நீரே வியக்கும் அளவுக்கு நம்பிக்கையில் வளர துணை செய்யும் ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

8 + 2 =