இறைவனை வரவேற்க நம்மைத் தயார் செய்வோம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


இன்றைய வாசகங்கள்(22.11.2022) 
ஆண்டின் 34ஆம் வாரம் செவ்வாய்
மு.வா: திவெ: 14: 14-20
ப.பா:  திபா: 96: 10. 11-12. 13
ந.வா: லூக்: 21: 5-11

 இறைவனை வரவேற்க நம்மைத் தயார் செய்வோம்! 

பொதுக்காலத்தின் இறுதி வாரத்தில் நாம் இருக்கிறோம். திருவருகைக் காலத்திற்கு நம்மையே தயார் செய்யும்விதமாக இந்த வாரம் முழுதும் நாம் சிந்திக்கின்ற வாசகங்கள் அனைத்தும் நமக்கு உதவுவதாய் உள்ளன. மானிட மகனின் வருகையை எதிர்கொள்ளவும் அவர் வரும் போது  நம்மைச் சுற்றி ஏற்படும் அடையாளங்களைப் புரிந்து கொண்டு நம் வாழ்வைச் சீரமைத்துக் கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம்.

 இன்றைய நற்செய்தி நமக்குக் கூறும் செய்தியும் இதுவே.மானிட மகனின் வருகை நாம் நினையாத நேரத்தில் இருந்தாலும் அது நிகழும் முன்பு பல அடையாளங்களும் அறிகுறிகளும் உண்டாகும்.அவை நமக்குத் தரப்படுவது எதற்காக? நாம் கறிஸ்துவின் வருகைக்காக நமது மீட்புக்காக நம்மையே சரியான விதத்தில் தகுதியான முறையில் தயார் படுத்திக் கொள்வதற்காக.இதை நாம் புரிந்து கொண்டு நம் வாழ்வின் பாதையை சீரமைக்க வேண்டும். 

இன்று தாய் திருஅவையோடு இணைந்து புனித செசிலியாவின் விழாவை நாம் கொண்டாடுகிறோம். இவர் பாடகர்குழுவின் பாதுகாவலியாகத் திகழ்கிறார்.இதற்கு காரணம் அவர் சிறுவயதிலிருந்தே இசையில் தேர்ச்சி பெற்று இறைவனைப் பாடி புகழ்வதில் ஆர்வமுள்ளவராய் இருந்தார். உரோமையில் வேதகலாபனை காலத்தில் வாழ்ந்த இவர், இறைவன்பால் அதிக பற்றுள்ளவராய் இருந்தார். சிறுவயதுமுதலே தன் கன்னிமையை கடவுளுக்கு அர்ப்பணம் செய்திருந்தார். விருப்பமில்லாமல் கட்டாய்த்தின் பேரில் வலேரியன் என்னும் இறையச்சமில்லாதவரை மணமுடித்தார். ஆயினும் தன்னுடைய உறுதியான நிலைப்பாட்டால் தன் கணவரையும் நம்பிக்கையாளராக மாற்றினார். அதன் விளைவாக வலேரியனின் சகோதரனும் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவரானார். தூய உள்ளத்தோடு கிறிஸ்துவுக்கு பணிபுரிந்தனர் இவர்கள் மூவரும். 

தன்னுடைய நம்பிக்கை வாழ்வால் உரோமை மன்னரை கடவுளாக வழிபட்ட பலருடைய மனங்களை கிறிஸ்துவின் பால் திருப்பினார். அவரும் மன்னர்களையும் சிலைகளையும் வணங்க மறுத்தார்.  இதற்காக மரண தண்டனை பெற்றார். மூச்சு திணறி இறக்க வேண்டுமென்பதே அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை. அதிகப்படியான நெருப்பு மூட்டப்பட்டு புகை மூட்டப்பட்ட போதும் செசிலியா இறக்கவில்லை. இறுதியில் தலை வெட்டப்பட்டது. தான் இறக்கும் தருவாயிலும் கூட இறைவனுக்கு புகழ் பாடிக்கொண்டேதான் இறந்தார். இறைவனுக்கு சாட்சியானார். 

இறைவருகைக்காக தயாரிக்க அழைக்கப்பட்டுள்ள நமக்கெல்லாம் இப்புனிதையின் வாழ்க்கை பெரும் உந்துதலாக அமைகிறது. இவர் எப்போதும் தயார் நிலையில் இருந்து தன் வாழ்வை செம்மைப்படுத்தியதோடு பிறரையும் ஊக்குவித்தார் .அதுபோல நாமும் இறைவருகைக்கு நம்மை தயார் செய்வோம். இறைவனை எப்போதும் பாடிப் புகழ்வோம்.

 இறைவேண்டல் 
அன்பு இறைவா!  உம்மை வரவேற்க எங்கள் வாழ்வை சீர்படுத்திக்கொள்ளவும் புனித செசிலியாவைப் போல நம்பிக்கை வாழ்வால் உமக்கு புகழ்சாற்றவும் வரமருளும். ஆமென்

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

2 + 2 =