நம்பிக்கையோடு கடவுளின் ஆலயத்தை கட்டி எழுப்புவோம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


இன்றைய வாசகங்கள்(18.11.2022) 
ஆண்டின் பொதுக்காலம் 33 வாரம் - வெள்ளி 
மு.வா: தி.ப 28: 11-16, 30-31
ப.பா: திபா 98: 1. 2-3. 4. 5-6
ந.வா: மத் 14: 22-23

 நம்பிக்கையோடு கடவுளின் ஆலயத்தை கட்டி எழுப்புவோம்! 

இன்று நாம் திருத்தூதர்களான பேதுரு மற்றும் பவுல் -ன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடுகிறோம்.உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள் என்ற இயேசுவின் கட்டளையை ஏற்று அன்றைய காலத்தில் உலகின் கடை எல்லாயாக கருதப்பட்ட  உரோமைக்கு நற்செய்தி அறிவிக்கச் சென்று அங்கேயே மறைசாட்சிகளாக இறந்த பேதுரு மற்றும் பவுலின் கல்லறைகளின் மேல் கட்டப்பட்ட பேராலயங்களின் அர்ச்சிப்பு நாள் இன்று. "உன் பெயர் பாறை;இந்த பாறையின் மேல் திருச்சபையைக் கட்டுவேன் " என்ற இயேசுவின் வார்த்தைகள் இங்கு நிறைவேறுகின்றன எனக் கூறினால் அது மிகையாகாது. இன்றைய நாள் விழா நமக்கு விடுக்கும் அழைப்பு யாதெனில், நாமும் கடவுளின் ஆலயங்களைக் கட்டிஎழுப்பும் அடித்தளங்களாகத் திகழ வேண்டும் என்பதே.

கிறிஸ்தவனாக கிறிஸ்தவளாக வாழ்வதென்பது சற்று கடினமான பயணம்தான். அதிலும் கடினமானது நம்பிக்கையை பிறரில் வளர்த்தெடுக்கும் அடித்தளமாகத் திகழ்வது. இன்றைய இருவாசகங்களும் இக்கருத்தை நமக்குத் தெளிவாக விளக்குகிறது. 

முதல் வாசகத்தில் பவுல் மால்தா தீவிலிருந்து கப்பலில் பயணிப்பதாகத் தரப்பட்டுள்ளது. காற்று வீசும் திசைகளில் கப்பல் சென்றதாகவும் நாம் வாசிக்கிறோம். அதே போல நற்செய்தி வாசகத்தில் சீடர்கள் படகிலேறி அக்கரைக்குச் சென்றார்கள் என வாசிக்கிறோம். அப்போது அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது எனவும் நாம் வாசிக்கிறோம்.நீரில் செய்யப்படும் பயணம் பாதுகாப்பானதாக இருக்காது. ஏனெனில் நீர் நிலைகளில் ஏற்படும் வேறுபாடுகளை நாம் அறிவது சற்று கடினம்தான்.  அதுபோலத்தான் நம்பிக்கைப் பயணமும்.

 பவுலின் பயணமும் சரி சீடர்களில் முதல்வரான பேதுருவின் பயணமும் சரி சுலபமான அல்லது இனிமையான பயணம் அல்ல. மாறாக கடினமான சவாலான பயணமே. இந்த இரு பயணமும் அவர்கள் திரு அவையைக் கட்டி எழுப்ப மேற்கொண்ட கடினமான பயணத்தை நமக்குத் தெளிவாக உணர்த்தி திருஅவையைத்  தொடர்ந்து கட்டி எழுப்ப நாமும் சவாலான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற அழைப்பை நமக்குத் தருவதாக உள்ளது.

பேதுரு கடல்மீது நடக்க முயன்ற போது மூழ்கும் அபாயம் ஏற்பட்டது போல நமது பயணத்திலும் சவால்கள் துன்பங்கள் என்னும் அலைகளால் அலைக்கழிக்கப்பட்டு மூழ்கும் நிலை வரலாம்.  அப்போது கூட பேதுருவைப்போல இயேசுவிடம் தஞ்சம் புகும் போது நம்மாலும் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு துணிவுடன் நடக்க முடியும். நம்பிக்கையோடு திருஅவையைக் கட்டி எழுப்ப அடித்தளமாய் விளங்க முடியும். கடவுளின் ஆலயமாம் திரு அவையை நம்பிக்கையோடு கட்டி எழுப்ப புறப்படுவோமா!

 இறைவேண்டல் 
இறைவா!  உம் ஆலயமாம் திரு அவையைக் கட்டி எழுப்பும் நம்பிக்கையுள்ள சீடர்களாக வாழ எமக்கு அருள் புரியும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

13 + 0 =