அமைதியின் தூதுவர்களாக மாற பெல்ஜியம் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை| வேரித்தாஸ் செய்திகள்


நொறுங்கிய உலகில் அமைதியின் தூதுவர்களாக மாற பெல்ஜியம் இளைஞர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

இளமையான திருஅவை

அக்டோபர் 10 ஆம் தேதி அன்று பெல்ஜியன் பங்குகளில் இருந்து திருப்பயணமாக வந்து இருந்த 300 இளைஞர், இளம்பெண்களுடன் உரையாடும்போது அவர்களின் கிறிஸ்துவ சாட்சிய வாழ்வு மற்றும் அவர்களின் அர்ப்பணிப்பு வாழ்வினை பாராட்டி பேசியதுடன் இன்றைய நவீன உலகில் மாறிவரும் சமுதாய சூழலில் இந்த இளைய சமுதாயம் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் இவர்களின் சேவையும் ஆர்வமும் கூடிய மனம் இந்த உலகம் அமைதியுடன் வாழ தேவை என்று அவர்களின் அர்ப்பணிப்பு உள்ளத்தை பாராட்டியுள்ளார். இன்றைய இளைஞர்கள்தான் இன்றைய மற்றும் நாளைய திருஅவையின் எதிர்காலம் என்று குறிப்பிட்டார். மேலும் அவர்களிடம் தாராள மனப்பான்மை, மகிழ்ச்சி, சகோதரத்துவம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கொண்ட ஒரு புதிய உலகை உருவாக்கிட உங்களின் விருப்பத்தை திருஅவை எதிர்பார்க்கிறது என்று கூறினார்.

தடைகள் நம்மை வளர செய்யும்

தடைகள், கடினமான சூழல்கள் நம்மை வளர்க்கும் காரணிகள். யேசுகிறிஸ்துவுடன் உங்கள் உறவை உருவாக்குங்கள் அவர் ஒரு போதும் உங்களை கைவிடமாட்டார். நம் பலவீனங்களை தாழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு பயமின்றி வாழ அவர் துணை செய்கிறார். உங்கள் வாழ்க்கைக்கு சுதந்திரமான, உண்மையாக உள்ள மனிதர்கள் மட்டுமே தேவை கதாநாயகர்கள் இல்லை.

மேலும் தெருவில் வாழும் இளையோருடனும், தனிமையின் பிடியில் சோகத்துடன் வாழும் இளையோருடனும், அகதிகள் மற்றும் புலம் பெயர்ந்த இளையோருடனும், தங்கள் வயதினை கொண்ட இளையோருடனும் நல்ல உறவினை ஏற்படுத்த திருத்தந்தை வலியுறுத்தினார்.

முதியோருடன் உரையாடுங்கள்

உண்மையான மற்றும் மகிழ்ச்சியான திரு அவைக்கு அடித்தளம் முதியவர்கள். அவர்களின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலை பெற அவர்களோடு உரையாட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் முதியவர்களுடன் உரையாடலை வளர்ப்பதன் மூலம், நமது அன்றாட போராட்டங்களுக்கு ஒரு திடமான ஆளுமையை உருவாக்க முடியும் என்று அவர் கூறினார். அவர்கள் தங்கள் நம்பிக்கையையும் மத நம்பிக்கையையும் உங்களுக்கு உணர்த்துவார்கள் என்று கூறினார்.

அமைதியின் ஓவியர்களாக இருங்கள்

உங்களைச் சுற்றியும் உங்களுக்குள்ளும் அமைதியின் ஓவியர்களாக அமைதியின் தூதர்களாக இருங்கள், அதனால் உலகம் அன்பின் அழகை, ஒன்றாக வாழ்வதன், சகோதரத்துவத்தின், ஒற்றுமையின் அழகை மீண்டும் கண்டுபிடிக்கும் என்று திருத்தந்தை கூறினார்.

நற்செய்தியை கொண்டுசெல்வதில் களைப்படைந்து விடாதீர்கள்

மேலும் திருத்தந்தை அங்கு கூடி இருந்த பெல்ஜிய இளையோருக்கு நற்செய்தியை கொண்டு செல்வதில் ஒருபோதும் களைப்படைந்து விடாதீர்கள் உங்களது குறிக்கோள் இயேசுகிறிஸ்துவினுடைய நட்பினை பெறுவதில் கருத்தாய் இருங்கள் என்றும் இறுதியில் அன்னை மரியின் தாய்மையுள்ள  அன்பையும், ஜெபமாலையின் அவசியத்தையும் உணர்த்திய அவர் “ஜெபமாலை”- செபங்களுக்கும் நம் வாழ்க்கைக்கும் பலவற்றைக் கற்றுக்கொடுக்கும் பள்ளி அதுவே என்று கூறி அனைவர்க்கும் ஆசி வழங்கினார்.

-அருட்பணி .வி. ஜான்சன் SdC

 

Add new comment

2 + 15 =