வேரித்தாஸ் செய்திகள் | 11.10.2022 | VeritasTamil


1. பேரன்பும் பேரழகும்

காண்போர் மனதை கொள்ளை கொள்ளும்வண்ணம் தனது பேரன்பை வெளிப்படுத்திய மாற்றுத்திறனாளி சிறுவன்

மதுரையில் கடந்த 10ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர் சூ .வெங்கடேசன் தலைமையில்  நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும், நிகழ்ச்சியில்  தனக்கு மட்டும்  இன்றி பிறருக்கும் உதவிகள் கிடைக்க வேண்டும் என்று எண்ணிய சிறுவனின் மாண்பு.

மதுரை மாநகரில் மேலூரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சிக்கு அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு மதுரையின் பல பகுதிகளில் இருந்து எண்ணற்ற மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அதில் மனவளர்ச்சி குன்றிய ஒரு சிறுவன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தான்.  தருண்சோலை அறிவுசார் குறை உடைய சிறுவன் மேலூரில் இருந்து தனது தாயுடன் அடையாள அட்டை பெறுவதற்காக  இந்த நிகழ்ச்சிக்கு வந்து இருந்தபோது அங்கு இருந்த அனைவருடனும் பாசத்துடன் பழக ஆரம்பித்துவிட்டான். இவர்களோடு காவ்யா என்ற அறிவுசார்க்குறைபாடு உடைய மற்றொரு சிறுமியும் தனது தாயுடன் வந்து இருந்தார். அடையாள அட்டை பெறும்போது நாடாளுமன்ற உறுப்பினர்க்கு மிக மகிழ்ச்சியுடன் நன்றி கூறியது மட்டும் அல்லாமல் தனது தோழி காவ்யாவிற்கும் அடையாள அட்டை கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சூ. வெங்கடேசனிடம் கோரிக்கை வைத்தது அங்கு வந்து இருந்த அனைவர்க்கும் ஆச்சரியமாகவும்

ஆனந்தமாகவும்  இருந்தது. மேலும் இதனை கண்ட அனைவர் கண்களும் கண்ணீரால் நிரம்பியது.ஒரு அறிவுசார் குறைபாடு கொண்ட குழந்தை தான் பெற்றுக்கொண்ட அடையாள அட்டைக்கு நன்றி கூறியது மட்டும் அல்லாமல் தன்னைப்போல இருக்கின்ற குழந்தைக்கும்  அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று வைத்த கோரிக்கை இவை எல்லாம் பார்க்கும்போது நாமும் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பதையும் மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் மாற வேண்டும் என்றும் நமக்கு  உணர்த்தியுள்ளான் இந்த சிறுவன்.

Source: Twitter

2. இருளர் சமூகத்தில் இருந்து ஓங்கி ஒலிக்கும் குரல்

இருளர் சமுதாயத்தின் முதல் பெண் வழக்கறிஞர் செல்வி காளியம்மாள் அவர்கள் அக்டோபர் 10  ஆம் தேதி  அன்று     மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

கடைக்கோடியில் வசிக்கும் மக்களுக்கு கல்வியறிவு என்பது இன்றும் எட்டாக்கனியாகவே உள்ளது என்பதற்கு சான்றாக இருக்கிறார் பழங்குடியின பெண் காளியம்மாள்.

தமிழக – கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோபனாரி மலைக்கிராமம். சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதியான இங்கு சில இருளர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். ஆடு மாடு மேய்த்தல், விவசாயம், வனப்பகுதிக்குள் தேன் எடுத்தல், கிழங்கு எடுத்தலை தங்கள் தொழிலாக செய்து வருகின்றனர்.

இங்குள்ள மருதன் – ஆண்டிச்சி தம்பதியின் ஒரே மகள் காளியம்மாள்(30). இவர் தனது கல்வியை 5வது வரை கோபனாரி ஊராட்சி ஒன்றிய பள்ளியிலும், 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆனைகட்டி உயர்நிலைப்பள்ளியிலும் பயின்றுள்ளார்.

இந்த கிராமம், தமிழக – கேரள எல்லைப்பகுதியில் உள்ளதால் ஆற்றை கடந்து கேரள மாநிலம் மட்டத்துக்காடு சென்று அங்கிருந்து ஆனைகட்டி செல்ல வேண்டும். அப்படி சென்றுதான் காளியம்மாள் 10வது வரை படித்தார். தொடர்ந்து 11 முதல் 12 ஆம் வகுப்பு வரை, சீலியூர் பள்ளியில் பயின்றார்.

காளியம்மாள் வெற்றியை கொண்டாடும் கோபனாரி கிராம மக்கள்

பிறகு சமூக ஆர்வலர்களின் உதவியுடன், பல்வேறு கடின சூழ்நிலைகளை தாண்டி கோவை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படிப்பை முடித்தார்.

 

 

அதன் பின்னர் அதே சமூக ஆர்வலர்களின் உதவியுடன் சட்டம் பயில விண்ணப்பித்துள்ளார். கலந்தாய்விற்காக சென்றபோது மதுரை அரசு சட்டக்கல்லூரியில் காளியம்மாளுக்கு இடம் கிடைத்துள்ளது. இதனிடையே தந்தை மருதனுக்கு பக்கவாதத்தால் இரு கைகளும், கால்களும் செயலிழந்தன.

 

காளியம்மாள் வசிக்கும் கிராமம்

இதனால் குடும்ப சூழ்நிலை காரணமாக சட்டப்படிப்பை மதுரையில் தொடர முடியாமல் இருந்தவரை சமூக ஆர்வலர்கள் கோவை அரசு சட்டக்கல்லூரிக்கு மாற்றி, அவரது தந்தைக்கும் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்தனர்.

இத்தனை கஷ்டமான சூழ்நிலையிலும், காளியம்மாள் தனது சட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்து இப்போது பார் கவுன்சிலில் உறுப்பினராக பதிவு செய்துள்ளார். இருளர் இனத்தின் முதல் வழக்கறிஞர் என்பதால் அப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களின் ஓர் அடையாளமாகவே மாறிவிட்டார் காளியம்மாள்.

 

இருளர்  பழங்குடியினத்தில் முதல் வழக்கறிஞராக காளியம்மாள் இருப்பது தங்களது கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக கோபனாரி கிராமத்தினர் மன மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றனர்.

- News Source: Indian Express

Image : Twitter

3. இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் குடும்ப நல செயலராக நியமிக்கப்பட்ட அருட்தந்தை அருள்ராஜ் .

பெங்களூரில் அக்டோபர் 7 அன்று திருச்சிலுவை சபையை சார்ந்த அருட்தந்தை அருள்ராஜ் காலி  அவர்கள் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் குடும்ப நல செயலராக நியமிக்கட்டுள்ளார். இவர் தென் இந்திய மாகாணத்தை சேர்ந்தவர். செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி அன்று பெங்களூரில் நடந்த இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் உறுப்பினர் கூட்டத்தில் தந்தை அவர்கள் குடும்ப நல துறையின் செயலராக அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அருள்தந்தை அருள்ராஜ் 1953 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் மானாம்பதி கண்டிகையில் மிக சிறந்த விசுவாசம் உள்ள கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு தனது இறை அழைப்பை உணர்ந்து திருச்சிலுவை சபையில் இணைந்தார். தென் இந்திய மாகாணத்தில் 1975 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி தனது முதல் வார்த்தைப்பாட்டினை எடுத்து சபையின் சட்ட திட்டங்களை பின்பற்றி 1980 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அன்று தனது இறுதி வார்த்தைப்பாட்டினை எடுத்து சபையின் நிரந்தர உறுப்பினர் ஆனார். அதன்பின் 1981 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி அன்று குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார் .

இவர் புகழ்பெற்ற திருச்சி புனித ஜோசப் பள்ளியின்  முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.   மேலும் இவர் தனது கல்லூரிபடிப்பை பெங்களூரில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் படித்துள்ளார். தனது தத்துவவியல் மற்றும் இறையியல் படிப்பினை புனேயில் உள்ள ஞான தீப கல்லூரியில் நிறைவு செய்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

1981 முதல் 1987 வரை கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அய்மானம் குருமடத்தில் அதிபராக பணியாற்றி உள்ளார். அதன்பிறகு 1987 முதல் 1989 வரை திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம்பட்டியில் உள்ள குருமடத்தில் அதிபராக பணியாற்றினார். 1991 முதல் 1998 வரை சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் உள்ள நவசந்நியாச மடத்தில் நவசன்யாச மாணவர்களுக்கு பயிற்சியாளராக பணியாற்றினார்.

அதன் பின்பு 1998 முதல் 2004 வரை ரோம் நாட்டில் உள்ள திருச்சிலுவை  சபையின் தலைமை அலுவலகத்தில்  பணியாற்றினார். 2011 முதல் 2020 வரை திருச்சிலுவை குடும்பத்தின் பணிகளின் இயக்குனராக பெங்களூரில் பணியாற்றினார். மேலும் பெய்டன் குடும்ப இயக்குனரத்தின் இயக்குனராக 2020 முதல் 2022 வரை சிறப்பாக பணியாற்றி உள்ளார் . மேலும் இவர் 2007 முதல் 2011 வரை இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையில் உள்ள குடும்ப நலதுறையில் செயலராக பணியாற்றியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க வேண்டியது.

மீண்டும் தனது அயராத உழைப்பினால் செயலராக பணியாற்ற வாய்ப்பு பெற்றுள்ள தந்தை அவர்கள் டிசம்பர் மாதம் முதல் கோவாவில் உள்ள இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் அலுவலத்தில் இருந்து பணிபுரிய தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Add new comment

4 + 0 =