இயேசு தரும் அமைதி வேண்டுமா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


இன்றைய வாசகங்கள்(17.11.2022) 
ஆண்டின் பொதுக்காலம் 33 வாரம் - வியாழன்
மு.வா: திவெ:  5: 1-10
ப.பா: திபா: 149: 1-2. 3-4. 5-6,9
ந.வா: லூக்: 19: 41-44

 இயேசு தரும் அமைதி வேண்டுமா! 

நான் திருச்சி புனித குருத்துவக் கல்லூரியில் இறையியல் படித்துக்கொண்டிருந்த பொழுது 3 ஆண்டுகள் திருச்சி மறைமாவட்டத்தோடு இணைந்து  சிறைப்பணி செய்தேன். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை திருச்சி மத்திய சிறைச்சாலை சென்று அங்குள்ள இல்லவாசிகளைச் (சிறைவாசிகளை) சந்திப்பது வழக்கம். ஒரு வாரம் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட இல்லவாசிகள் உள்ள வளாகத்திற்கு சந்திப்பிற்காக சென்றிருந்தேன். அங்கு ஒரு இல்லவாசியைச் சந்தித்தேன்.

அவர் மிகவும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார். நான் அவரோடு பேச முயற்சி செய்தேன். முதல் வாரம் என்னோடு ஒன்றும் பேசவில்லை. எனவே அடுத்த வாரமும் நான் அவரை சந்திக்க சென்றிருந்தேன். அவரோடு பேச முயற்சித்தபோது அவர் தனது பெயரை மட்டும் சொன்னார். மூன்றாவது வாரமும் அவரை சந்தித்தேன். அவரோடு பேச முயற்சித்தபோது கண்ணீர் விட்டு அழத்தொடங்கினார். அவரோடு உடனிருந்து அவரின் உணர்வைப் புரிந்து கொண்டேன். பிறகு தனது உள்ளத்திலுள்ள மனக்கவலைகளையெல்லாம் பகிர ஆரம்பித்தார்.

"தனது வாழ்வே அமைதியற்ற நிலையில் தான் இருந்து வருகின்றது. நான் இவ்வளவு துன்பப்படுவதற்கு காரணம். என்னோடு இருந்தவர்களே . என்னைப் பெற்ற பெற்றோர்களிடம் இருந்து நான் அன்பை பெறவில்லை. என்னோடு உடன் பிறந்தவர்களிடம்  நான் அன்பை பெறவில்லை.  என் நண்பர்கள் என்னை சுயநலத்தோடு பயன்படுத்தினார்கள். அவர்கள் செய்த தவறுக்காக நான் தண்டனை  அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்" என கண்ணீரோடு பகிர்ந்து கொண்டார். அவர் ஏன் அமைதியற்ற நிலையில் உளவியல்  ரீதியாக துன்பப்படுகிறார்? என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அதன்பிறகு நான் அவரோடு பேச ஆரம்பித்தேன்.

"கடந்ததை நினைத்து கவலைப்படாதீர்கள். அதிகமாக கவலைப்பட்டால் நீங்கள் பல்வேறு மன உளைச்சலுக்கு உள்ளாகலாம். இந்த சிறையை தாண்டியும் உங்களுக்கு ஒரு வாழ்வு உண்டு என்பதை மறவாதீர்கள். உங்களுக்குத் தீங்கு செய்தவர்களை மன்னிக்க முயற்சி செய்யுங்கள். உங்களைப் படைத்த கடவுள்  அன்பு செய்கிறார். என்னாலும் நீங்கள் அன்பு செய்யப்படுகிறீர்கள்" எனக்கூறி அவரைத் திடப்படுத்தினேன். அதன்பிறகு "நன்றி சகோதரரே! இப்பொழுதுதான் எனக்கு மன அமைதி கிடைத்தது போல் இருக்கின்றது. நிச்சயமாக விடுதலைப் பெற்று புது மனிதனாக அனைவரையும் மன்னித்து வாழுவேன்" என்று தன்னம்பிக்கையோடு என்னிடம் பகிர்ந்து கொண்டார். அன்று முதல் அவர் மனரீதியாக நலம் அடைந்தார். அனைவருடனும் சிரித்த முகத்துடன் பேசி பழக ஆரம்பித்தார். இவருடைய மாற்றத்தை கண்ட காவலர்கள் இவரை மற்ற இல்லவாசிகள் இருக்கும் இடத்திற்கு மாற்றினார்கள். சிறிது நாட்களுக்குப் பிறகு விடுதலை அடைந்து வெளியே சென்று மகிழ்ச்சியான புது வாழ்வை தொடங்க ஆரம்பித்தார்.

இந்த உண்மை நிகழ்வு எதை சுட்டிக்காட்டுகிறது என்றால் மன அமைதி தான் உண்மையான மகிழ்ச்சியை தரும். அன்று நான் அந்த சகோதரரை சந்திக்காமல் இருந்தேன் என்றால் சிறையிலேயே மனரீதியாக பாதிக்கப்பட்டு தனது வாழ்வை முடித்துக்கொள்ள கூட துணிந்து இருப்பார். ஆனால் அவர் அமைதி பெறவேண்டும் என்று நான் உணர்ந்து அவரோடு நேரம் செலவிட்டு பேச ஆரம்பித்ததால் இன்று ஒரு புது மனிதனாக மாறியுள்ளார். இந்த நிகழ்வு எனக்கு ஒரு மிகச்சிறந்த வாழ்வியல் பாடத்தைக் கொடுத்தது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு மனுவுரு எடுத்து பிறந்தது நாம் அனைவரும் அமைதியை பெற்று மீட்படைய வேண்டும் என்பதற்காகவே. உண்மையான மீட்பு இயேசுவில் தான் உள்ளது என்பதை பல நேரங்களில் நாம் மறந்து இருக்கிறோம். எனவேதான் நாம் அமைதியற்ற நிலையில் பல நேரங்களில் வாழ்ந்து வருகிறோம். நான் அந்த இல்லவாசியை தேடிச்சென்று ஒவ்வொரு வாரமும் பேசியதால் அவர் மன ரீதியில் விடுதலை பெற்று ஒரு நல்ல ஒரு மனிதராக மாறினார். அதேபோல்தான் நம் ஆண்டவர் இயேசு நாம் நம்முடைய பாவ வாழ்விலிருந்து விடுதலை பெற்று மீட்பின் கனியை சுவைக்க வேண்டும் என்பதற்காக ஒரு மனிதராக நம்மைத் தேடி வந்தார்.

நான் தேடி அந்த இல்லவாசியை சந்தித்தேன். முதல் முறையும் இரண்டாம் முறையும் ஏற்றுக்கொள்ளவில்லை. மூன்றாம் முறை சென்ற போது அவர் என்னுடைய அன்பை ஏற்றுக் கொண்டார். அதேபோலத்தான் நம் ஆண்டவர் இயேசு நாம் அவரை விட்டு விலகிச் சென்றாலும் நம்மைத் தேடி வந்து கொண்டே இருக்கிறார். அவரின் வருகையை உணர்ந்து அவரின் குரலுக்கு செவி கொடுக்கும் பொழுது நாம் புது வாழ்வைப் பெறுகிறோம். அவரின் குரலுக்கு செவிசாய்க்காதபோது மன உளைச்சலுக்கு உள்ளாகிறோம்.

மனிதனைப் படைத்த கடவுள் மனிதர்கள் மீட்பைச் சுவைத்து  அமைதியோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இறைவாக்கினர்கள், நீதித்தலைவர்கள், அரசர்கள் போன்றோர்கள் வழியாக மக்களை வழிநடத்த திருவுளம் கொண்டார். ஆனால் மனிதர்கள் தன்னுடைய பலவீனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பாவம் மோக வாழ்விலே வாழ்ந்து வந்தனர். கடவுள் தான் பெரும் பலம் என்பதை மறந்து பல்வேறு அடிமைத் தனங்களை அனுபவித்தனர்.  இனிமேல் தான் கடவுள் மனிதர்கள் மீது கொண்ட அன்பின் காரணமாக தனது ஒரே மகனையே இவ்வுலகிற்கு பாவக்கழுவாயாக அனுப்பி மனிதர்கள் மீட்பைச் சுவைத்து நிலையான அமைதியைப் பெற வழிகாட்டினார். ஆனால் இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் மனிதர்கள்மீட்பின் கனிகளைச் சுவைக்க அவர்களின் வாழ்வு தகுதி உள்ளதாக இல்லை. அவர்களின் உள்ளம் கடவுளை விட்டு வெகு தொலைவில் இருந்தது. கடவுளோடு இருப்பவர்கள் மட்டுமே அவர் தரும் உண்மையான அமைதியை அனுபவிக்க முடியும். நம்மைத் தேடி வந்த இறைவனை நம் உள்ளத்திலே வரவேற்று அவரின் வழிகாட்டுதலின்படி நடக்கும் பொழுது நாம்  மீட்பினைப் பெற்று நிறைவான அமைதியை அனுபவிக்க முடியும். இதற்கு பின்வரும் நிகழ்வு நமக்கு பாடமாக இருக்கின்றது.

இயந்திரங்களின் நடுவிலே பணி செய்யும் கூலித்தொழிலாளி ஒருவர் அவ்விரைச்சல் ஒலியைக் கேட்டுக் கேட்டு வெறுப்புக்குள்ளானார். எவ்வித ஒலியும் கேட்காத அமைதியான இடத்திற்குச் சென்று இளைப்பாற வேண்டும் என்பது அவருடைய ஆசை. வேலைமுடிந்து வீட்டிற்குச் சென்று அமைதியாக இளைப்பாற வேண்டும் என்று நினைப்பார். ஆனால் வீட்டிலே பிள்ளைகள் விளையாடும் சத்தமும்,
தொலைக்காட்சிப் பெட்டியின் சத்தங்களும் அவரை மீண்டும் வெறுப்புக்குள்ளாக்கியது. சரி எங்காவது பூங்காவிற்கு சென்று அமரலாம் என்றால் வாகனங்கள் எழுப்பும் ஒலி அவர் அமைதியை இன்னும் அதிகமாகவே குலைத்தது. அமைதியான சூழலைத் தேடி அலைந்த அவருக்கு எஞ்சியது ஏமாற்றங்கள். இவ்வாறு வெளிப்புற அமைதியைத் தேடித் தேடி மன அமைதியைத் தொலைத்தார் அவர். ஒரு நாள் தன் குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்றார். சென்ற போதுதான் அவர் விரும்பிய அந்த அமைதியான இடம் கோவில் என உணர்ந்தார்.கடவுள் இருக்கும் இடத்தில் புற அமைதி மட்டுமல்ல மன அமைதியையும் சேர்த்துப் பெறலாம் என உணர்ந்தார். "அமைதியான இடத்தைத் தேடி இத்தனைகாலமாய் அலைந்த நான் கோவிலை மறந்துவிட்டேனே" என எண்ணி வருந்தினார். இதயத்தின் ஆழத்தில் இறைவன் தரும் அமைதியை உணர்ந்தார். அதன் பிறகு எத்தகைய இரைச்சலிலும் ஏன் வாழ்வின் அமைதியற்ற சூழலிலும் புற அமைதியையும் அக அமைதியையும் இழக்காதவராய் வாழ்ந்தார். 

பரபரப்பான இவ்வுலகத்தில் நாம் அனைவரும் வேண்டுவது அமைதி. எங்கு பார்த்தாலும் அமைதியற்ற நிலையைக் காண்கிறோம். குடும்பங்களிலும் அமைதியற்ற தன்மை. நாடுகளுக்கு இடையே அமைதியற்ற நிலை. ஏன் ஒரு தனிமனித வாழ்விலும் கூட அமைதியிழந்த நிலை இருப்பதை நாம் காண்கிறோம். உணர்கிறோம். அமைதி என்பது வெளிப்புறத்தில் ஒலிகள் எதுவும் இல்லாத நிலையைக் குறிப்பதல்ல. மாறாக நம் ஆழ்மனத்தில் சலனமில்லாத ஒரு நிலையைக் குறிப்பதாகும். இது ஆழகடலில் நிலவும் அமைதியைப் போன்றது. நம்மைச் சுற்றியும் நமக்குள்ளும் எவ்வளவுதான் போராட்டங்களும் பிரச்சினைகளும் எழுந்தாலும் நம் மனது சலனப்படாமல், நம் இயல்பு வாழ்வு பாதிக்கப்படாமல் நடுநிலையுடன் வாழவழிவகுப்பதே உண்மையான அமைதி. இத்தகைய அமைதி கடவுளிடமிருந்து மட்டுமே வருகிறது.

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு எருசலேமின் அமைதியற்ற நிலையைக் கண்டு வருந்துகிறார். இஸ்ரயேல் மக்களின் தலைநகரமாக, ஆண்டவரின் இல்லத்தைக் கட்டி எழுப்பத் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரமாக விளங்கிய எருசலேம் தன் அமைதியை இழந்ததை எண்ணி தன் வருத்தத்தைத் தெரியப்படுத்துகிறார் இயேசு. பாவ வாழ்வால் கடவுளின் உடனிருப்பை இழந்த இஸ்ரயேல் மக்கள், தங்களை அடிமைப்படுத்திய அந்நிய அரசிகளிடமிருந்து மீட்பைத் தரவல்ல மெசியாவை எதிர்பார்த்தார்கள். 

ஆனால் இயேசுதான் மெசியா எனத் தெரிந்து கொள்ளவில்லை. அவர் அருகிருக்கும் போது கூட உணர இயலாதவர்களாய் அமைதியற்று இருந்தனர். இதுவே இயேசு எருசலேம் நகரைப் பார்த்து வருந்தி அழ காரணமானது. உலகம் சார்ந்த வாழ்வும், அந்நிய அரசுகளின் ஆட்சிமுறையும் கடவுள் தேர்ந்தெடுத்த நகரையும் மக்களையும் அமைதியிழக்கச் செய்தது. 

எனவே நம் தனிப்பட்ட வாழ்வில் இறைவன் இயேசு தருகின்ற உண்மையான அமைதியை அடைய விடாமல் நம் வாழ்வைக் குலைப்பன எவை என நாம் சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். நம்முடைய உலக நாட்டங்கள், பலவீனங்கள், கடவுளின் உடனிருப்பைக் கண்டுணராத நிலை போன்ற பல காரணங்களால் நிறைவான அமைதியை இழந்து தவிக்கிறோம். அத்தைகைய நிலையை மாற்ற கடவுள் நம் அருகில் இருக்கிறார் என உணர வேண்டும். இறைவேண்டலில் நிலைத்திருந்து அவருடைய உடனிருப்பை உணரும் போது நம் மனது சலனப்படாமல் புற அமைதியோடு அக அமைதியும் முழுமையாக உணரப்படும் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை. அத்தைகைய இயேசு தரும் அமைதியைப் பெற நம் வாழ்வைப் பக்குவப்படுத்துவோம்.

 இறைவேண்டல் 

அமைதியின் தெய்வமே இறைவா! எங்களுக்கு மீட்பின் வழியாக அமைதியை வழங்க உம் திருமகனை இவ்வுலகிற்கு அனுப்பினீர். அதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆண்டவர் இயேசு இந்த உலகிற்கு கொண்டு வந்த அமைதியை  எங்களுடைய உண்மையான வாழ்வால் உணர்ந்து நற்செய்தி மதிப்பீட்டுக்கு சான்று பகர்ந்து மீட்பின் கனியை சுவைத்து முழு விடுதலை பெற அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

3 + 0 =