Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
கடவுளுக்கு வேலை செய்யத் தயாரா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
ஆண்டின் பொதுக்காலம் 30ஆம் புதன்
I: எபே: 6: 1-9
II: தி பா :145: 10-11. 12-13. 13-14
III:லூக்:13: 22-30
கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதை தன் முதற் கடனாகக் கொண்டிருந்தார் நம் ஆண்டவர் இயேசு. கடவுள் என்ன நம் அருகிலா இருக்கிறார்? நாம்செய்வதைக் கண்டு இது சரி இது தவறு என அவர் சொல்லப்போவதில்லை. அதனால் நாம் செய்கின்றவற்றை ஏனோதானோ எனச் செய்யலாம் என அவர் எண்ணவில்லை. மாறாக தான் எதைச் செய்தாலும் கடவுளுக்காகவே அவர் மகிமைக்காகவே செய்தார். இந்த மனநிலையை நமதாக்கவே நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம். ஆம் இன்று புனித பவுல் வழியாக நமக்கு கொடுக்கப்படும் அழைப்பு இதுவே."மனிதருக்காக அன்றிக் கடவுளுக்காகவே செய்வது போல நல்மனத்தோடு வேலை செய்யுங்கள்"
என்கிறது இன்றைய முதல் வாசகம்.
ஒரு அலுவலகத்தில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் பணியாளர் ஒருவர் இருந்தார். அவருடைய வேலையில் எந்தக் குறையும் காணமுடியாது. அந்த அளவுக்கு அவர் மிகச்சரியாக வேலைகளை முடித்து விடுவார். ஆனால் அவரிடம் காணப்பட்ட குறை என்ன தெரியுமா? தன் மேலாரிடம் நற்பெயர் வாங்க வேண்டும் என்ற உள்நோக்கத்திற்காக மட்டுமே அவர் வேலை செய்தார்.அதற்காக தவறையும் துணிந்து செய்வார். உண்மையான கடமை உணர்வு இல்லை. மனிதருக்காக அவர்கள் தரும் சன்மானத்திற்காக உழைத்தாரே தவிர கடவுளுக்காக தனக்குக் கொடுக்கப்பட்ட கடமை என்பதற்காக அவர் உழைக்கவில்லை. இந்த காரணத்தினால் அவரால் உண்மையான நிறைவை உணராமல் வெறுமை மட்டுமே இருந்தது.
நம்மில் எத்தனை பேர் இந்த மனநிலையைக் கொண்டிருக்கிறோம் என ஆய்வு செய்ய வேண்டும். விருப்பமில்லாமல் நமக்கு கொடுக்கப்பட்ட பணியைச் செய்வது, பெயருக்கும் புகழுக்கும் பணி செய்வது, கண்துடைப்புக்காக செய்வது இவை அனைத்தும் மனிதருக்காக நாம் வேலை செய்கிறோம் என்பதையே சுட்டிக்காட்டுகிறது. கடவுளுக்காக நாம் அனைத்தையும் செய்யும் போது உண்மையான நிறைவு கிடைக்கிறது. எதையும் சமமாகப் பார்க்கும் மனநிலை உருவாகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இடுக்கமான வாயில் வழி நுழைய நம்மை இயேசு அழைக்கிறார். கடவுளுக்காக நாம் வாழ்வதும் அவருக்காக அனைத்தையும் செய்வதும் கூட இடுக்கமான வழியில் பயணம் செய்வதற்கு சமமே. கடமை உணர்வும், நேர்மையும் மனிதர்கள் நம்மிடம் நடந்து கொள்ளும் முறைகளும் துன்பத்தை வருவிக்கக் கூடும். அவற்றையும் கடந்து நாம் தொடர்ந்து பயணிக்கும் போது கடவுள் நம்மை யார் என கண்டுகொள்வார். எனவே அனைத்தையும் அவருக்காக செய்யும் நல்மனம் வேண்டுவோம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா! உம் மகன் இயேசுவைப்போல அனைத்தையும் உமக்காகச் செய்யும் நல்மனத்தை எமக்கு அருளும்.ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment