Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
எளிமையும் எதார்த்தமுமே இறையாட்சி! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
ஆண்டின் பொதுக்காலம் 30ஆம் செவ்வாய்
I: எபே: 5:21-33
II: தி பா :128:1-2, 3, 4-5
III:லூக்:13: 18-21
இன்றைய நற்செய்தியில் இயேசு இறையாட்சியை ஒரு சிறிய கடுகு விதைக்கும் புளிப்பு மாவுக்கும் ஒப்பிட்டுக் கூறுகிறார். கடுகு விதையானது சிறியதாக இருந்தாலும் வளர்ந்து பறவைகள் தங்குமளவிற்கு பெரியதாகிறது. அதே போல புளிப்பு மாவானது புளிப்பற்ற மாவுடன் கலக்கப்படும் போது புளிப்பற்ற மாவும் புளிப்பேறி சமைப்பதற்கு உகந்ததாய் மாறுகிறது. இயேசு இந்த எளிமையான எதார்த்தமான உவமைகளைக் கூறி இறையாட்சி என்பது ஏதோ மிகப்பெரிய, நம் அறிவுக்கு எட்டாத காரியமல்ல என்பதையும் நம்முடைய எளிமையான எதார்த்தமான நற்செயல்களால் இறையாட்சியைக் கட்டி எழுப்பமுடியும் என்பதையும் உணர்த்துகிறார்.
எளிமையான எதார்த்தமான இறையாட்சியை உருவாக்க நாம் என்ன செய்யலாம் ?
நம்முடைய சிந்தனைகளைச் சீர்படுத்த வேண்டும்.நாம் எந்த காரியத்தைச் செய்தாலும் நம் உள்ளுணர்வை ஆராய வேண்டும். நாம் செய்யும் காரியங்கள் நமக்குப் புகழ் சேர்க்க வேண்டுமென எண்ணுவதைத் தவிர்த்து மற்றவர்களையும் அந்நற்செயலை செய்யத் தூண்டுவதாய் அமைய வேண்டும். சிறு துளி பெருவெள்ளம் என்பதைப் போல பெரிய காரியத்தையும் கூட எளிமையாக பெருமை பிதற்றாமல் செய்ய வேண்டும். அனைத்திற்கும் மேலாக இறைவன் நமக்குள் இருக்கிறார், இறையாட்சியே நாம் தான் என்ற உன்னத உணர்வைத் தாங்கியவர்களாக அவ்வுணர்வை மற்றவர்களுக்கும் கடத்துபவர்களாக நாம் வாழ வேண்டும்.
இந்த இறையாட்சி திருமண உறவு போன்றது. கணவன் மனைவி ஒருவரைஒருவர் அன்பு செய்யவும் மதிக்கவுமே ஒன்றிணைக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து வாழவேண்டுமென புனித பவுல் தனது மடலில் கூறுகிறார். மேலும் இவ்வுறவு கிறிஸ்துவுக்கும் திருஅவைக்கும் இடையே உள்ள உறவை ஒத்ததாக இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார். குடும்பம் சமூகத்தின் ஒரு சிறிய அலகாயினும், அன்பாலும் ஒற்றுமையாலும் இறைவேண்டலாலும் பிணைக்கப்பட்டு எடுத்துக்காட்டாய் வாழும் போது அக்குடும்பத்தால் சமூகத்தில் நல்ல மாற்றங்களைக் கொணர இயலும் என்பதை நாம் இன்று உணர்ந்து கொள்ள வேண்டும். கடுகு விதையாக, புளிப்பு மாவாக நம் கிறிஸ்தவ குடும்பங்கள் வாழ்ந்து இறையாட்சியை மண்ணில் விதைக்க வேண்டும் என்று இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.
எனவே கிறிஸ்துவால் இறையாட்சியின் மனிதர்களாக அழைக்கபட்டுள்ள நாம் இறையாட்சி நமக்குள் உள்ளது என்பதை உணர்ந்தவர்களாய் அன்பு, கீழ்படிதல், மரியாதையுடன் கிறிஸ்து அன்பு செய்தது போல அன்பு செய்வோம். புளிப்பு மாவு மற்றெல்லா மாவையும் புளிப்பேறச் செய்வது போல நற்செயல் புரிபவர்களாய் மற்றவர்களையும் அவ்வாறே செய்யத்தூண்டுவோம். கடுகு விதை வளர்ந்து நிழல் தருவது போல நம்முடைய பிரசன்னத்தில் பிறர் அன்பை சுவைக்கும் வண்ணம் நம் வாழ்வை அமைப்போம். எளிமையும் எதார்த்தமுமான வாழ்க்கையால் இறையாட்சியை உருவாக்குவோம். அதற்கான வரத்தை கடவுளிடம் கேட்போம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா எங்களுக்குள்ளே தான் இறையாட்சி இருக்கிறது என்பதை உணரச்செய்துள்ளீர். அதற்காக நன்றிகூறுகிறோம். அந்த இறையாட்சியை எங்களுடைய எளிமையான எதார்த்தமான நற்செயல்களால் அனைவருக்கும் பரப்ப கடுகு விதைபோலவும் புளிப்பு மாவைப் போலவும் நாங்கள் செயல்பட உமதருள் தாரும். குடும்பங்களிலும் சமூகத்திலும் ஒருவரை ஒருவர் அன்பு செய்யவும் மதிக்கவும் நல்மனம் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment