நம் அழைப்பு எது என கண்டறியத் தயாரா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


ஆண்டின் பொதுக்காலம் 29ஆம் வெள்ளி
பொதுக்காலத்தின் 29 ஆம் வெள்ளி - I. எபே: 4:1-6; II. திபா 24:1-2.3-4b.5-6; III. லூக்: 12:54-59

 நம் அழைப்பு எது என கண்டறியத் தயாரா? 

"அழைப்பு " என்ற உடன் நம் மனதிற்கு தோன்றுவதெல்லாம் துறவற அல்லது குருத்துவத்திற்கான அழைப்பே. அழைப்பு என்பது அதுமட்டுமல்ல 
அன்புக்குரியவர்களே! திருமுழுக்கு பெற்ற நாம் அனைவருமே அழைக்கப்பட்டவர்கள்.  கடவுளின் பிள்ளைகளாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். நம்பிக்கையாளர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இயேசுவின் சீடர்களாக சீடத்திகளாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இயேசுவாக மாற அழைக்கப்பட்டுள்ளோம். 

இன்றைய முதல் வாசகத்திலே   
"நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கேற்ப வாழுங்கள்" என்று   கூறுகிறார் புனித பவுல். அவ்வார்த்தைகளைத் தொடர்ந்து நாம் பெற்றுக்கொண்ட அழைப்பு என்ன என்பது பற்றி அவர் கூறும் வார்த்தைகளாவன 
"முழுமனத் தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் ஒரே எதிர்நோக்குக் கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்". ,

இவ்வார்த்தைகள் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் கிறிஸ்தவளுக்கும் கொடுக்கப்பட்ட அழைப்பை மிகத் தெளிவாகச் சொல்கின்றன.

ஒரே எதிர்நோக்கு கொண்டவர்களாய் நாம் வாழ அழைக்கப்பட்டுள்ளோம். அந்த எதிர்நோக்கு எது? கடவுள்  அருளும் மீட்பே அன்றி வேறெதும் இல்லை. அந்த மீட்பை அடைய அழைக்கப்பட்டுள்ள நாம் அப்பெரிய அழைப்பை வாழ்ந்து காட்ட அதற்கு படிக்கட்டுகளாக அமையும் தாழ்ச்சி, கனிவு,பொறுமை, அன்பு, ஒருமைப்பாடு போன்ற வற்றையும் வாழ்வாக்க வேண்டும்.இந்த அழைப்பை நாம் உணர்ந்திருக்கிறோமா என சிந்திப்போம்.

இன்றைய நற்செய்தி வாசகத்திலும்  இயேசு நம்முடைய அழைப்பை சுட்டிக்காட்டுபவராக இருக்கிறார். நேர்மையாளர்களாகவும் பிணக்கத்தோடு உள்ளவர்களிடம் சமாதானம் செய்து கொண்டு வாழ்பவர்களாகவும் நாம் இருக்க வேண்டுமென அழைக்கிறார். இதனடிப்படையிலே  யூதர்களை இயேசு கடிந்துகொள்கிறார். காரணம் யூதர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்ப்பட்ட இனம். கடவுள் நீதிக்கும் நேர்மைக்கும் குரல் கொடுப்பவர். அவர் தாம் தேர்ந்தெடுத்த மக்களையும் நேர்மையாளர்களாய் வாழ அழைக்கிறார்.நேர்மையாளர்கள் என்பவர்கள் கடவுளை அன்பு செய்து அவரின் கட்டளைபடி நடப்பவர்கள். அப்படிப்பட்ட தங்கள் அழைப்பு வாழ்விலிருந்து தவறி நேர்மையானவற்றை அறிய மறுத்தார்கள் யூதர்கள்.

நேர்மையாளர்கள் துன்பங்கள் பல அனுபவிக்க நேர்ந்தாலும் இறுதியில் கடவுளின் துணையோடு வெற்றிபெறுவதை நாம் விவிலியத்தில்  காண்கிறோம். யோபு அதற்கு ஒரு சிறந்த மாதிரி. இன்றும் நாம் நேர்மையாளர்களாக வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். அவ்வாறு வாழும் போது தடைகள் வரினும் அதைத் தகர்த்தெறிய கடவுள் பலம் தருவார். கடவுளின் பிள்ளைகள் நாம். நம் அழைப்பை உணர்ந்து அதற்கேற்ப நம் வாழ்வை அமைப்போம்.  அன்பு கனிவு ,பொறுமை ,ஒருமைப்பாடு, நேர்மை இவற்றோடு ஒரே எதிர்நோக்கு கொண்டவர்களாய் நாம் வாழ பெற்றுக்கொண்ட இவ்வழைப்பை முழுமூச்சுடன் வாழ்வாக்கப் புறப்படுவோம்.

 இறைவேண்டல் 
எங்களை பெயர் சொல்லி அழைத்த இறைவா! நாங்கள் எங்களை நீர் எதற்காக அழைத்திருக்கிறீர் என்பதை உணர உமது தூய ஆவியைத் தாரும். நாங்கள் எங்கள்! அழைப்புக்கேற்ப வாழ அருள் தாரும்.ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

 

Add new comment

7 + 13 =