நம்பிக்கைக்குரிய பணியாளர்களா நாம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


ஆண்டின் பொதுக்காலம் 29ஆம் புதன் 
I: எபே:  3: 2-12
II: எசா 12: 2-3. 4bஉன. 5-6
III:லூக்:12: 39-48

'நம்பிக்கைக்குரிய பணியாளர்கள் ஒருபோதும் ஓய்ந்திருப்பதில்லை. அவர்கள் தங்களுடைய பணிகளிலிருந்து வேண்டுமானால் ஓய்வு பெறலாம். ஆனால், அவர்கள் கடவுளுக்கு ஊழியம் புரிவதிலிருந்து ஒருபோதும் ஓய்வு பெறுவதில்லை' என்று ரிக்  வாரன் என்ற எழுத்தாளர் கூறியுள்ளார்.

ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். இருவரும் ஒரே இடத்தில் பிறந்து வளர்ந்து படித்தவர்கள். அவர்கள் ஒரே படிப்பை படித்தவர்கள். இரண்டு பேரும் வெவ்வேறு இடத்தில் வேலைக்கு சென்றனர். ஒருவர் தான் செய்த வேலையின் வழியாக பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்தார். நாளுக்கு நாள் ஊதிய உயர்வும் பணி உயர்வும் பெற்றார். மற்றொருவர் எந்த  வளர்ச்சியும்  பெறாமல் ஏழ்மையில் வாழ்ந்தார். வேலைக்கு சென்ற போதிலும் ஊதிய உயர்வும் பணி உயர்வும் கிடைக்காமல் அவதியுற்றார். எனவே பொருளாதாரத்தில் வளர்ந்த நண்பரை பார்த்து மற்றொரு நண்பர் "நானும் நீயும் ஒரே படிப்பை தான் படித்தோம். ஆனால் எவ்வாறு உன்னால் மட்டும் அதிக வருவாயை ஈட்ட முடிகிறது?" என்ற கேள்வியை எழுப்பினார். உடனே வளர்ச்சி அடைந்த அந்த நண்பர் "நான் பணி செய்த நிறுவனத்தில் என்னுடைய மனச்சாட்சிக்கு பயந்து என்னுடைய கடமைகளைச் செய்தேன். எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளைத் தாண்டி வித்யாசமான முன்னெடுப்புகளை என்னுடைய நிறுவனத்தில் செய்தேன். அதன் பலனாகத் தான் ஊதிய உயர்வும் பணி உயர்வும் பெற்றேன்" என்று கூறினார். இதைக் கேட்ட அந்த நண்பர் தான் பணி செய்த இடத்தில் நம்பிக்கைக்குரியவராய்  இல்லாததை உணர்ந்தார். தன் வளர்ச்சிக்கு எது தடையாக இருந்தது என்பதை அறிந்துகொண்டார். தான் வாழ்கின்ற இடத்தில் நம்பிக்கைக்குரியவராக வாழ வேண்டும் என்று முடிவெடுத்தார்.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பல நேரங்களில் நம்பிக்கைக்குரியவராக வாழ மறந்து விடுகிறோம். நாம் சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைகக்குரியவராக இருக்கும்பொழுது நிச்சயமாக நாம் பெரிய பொறுப்புகளிலும் அவ்வாறே இருப்போம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தியின் வழியாக நம்பிக்கைக்குரிய மக்களாக வாழ அழைப்பு விடுக்கிறார். சீடர்கள் இயேசுவின் வல்ல செயல்களையும் போதனைகளையும் அறிந்த பொழுதும் நம்பிக்கைக்குரியவர்களாக வாழ்ந்து அறிவுத் தெளிவு உள்ளவர்களாக செயல்பட மறந்துவிட்டனர். அவற்றைச் சுட்டிக்காட்டி நம்பகத்தன்மையோடு உழைத்து அவருக்குச் சான்று பகர இன்றைய நற்செய்தி வழியாக அறிவுறுத்தியுள்ளார். 

மேலும் இன்றைய  நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒரு நம்பிக்கைக்குரிய பணியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார். இயேசு சீடர்களை நற்செய்தியை அறிவிக்கவும் சான்றுகளாய் வாழவும் நலப்படுத்தும் பணிகளை செய்யவும் அழைத்தார். ஆனால் சீடர்கள் அவற்றை செவ்வனே ஆற்றாமல் ஒருவித மெத்தனப்போக்கில்  வாழ்ந்தனர். அத்தகைய மனநிலையிலிருந்து மாறவேண்டும் என்ற ஆழமான சிந்தனையைத் தான் இன்றைய நற்செய்தியின்  வழியாக ஆண்டவர் அறிவுறுத்தியுள்ளார்.

நம்பிக்கைக்குரிய பணியாளர் தன் தலைவர் இல்லாவிட்டாலும் தன் கடமைகளை முழு ஈடுபாட்டோடும் பொறுப்புணர்வோடும் செய்வார். தலைவர் வரும்பொழுது விழிப்புணர்வோடு தங்கள் கடமைகளை செய்யும் பணியாளர்களை உடமைகளுக்கு அதிகாரியாக அமர்த்துவார். தலைவர் காலம் தாழ்த்தும் பொழுது தங்களுடைய கடமைகளை செய்யாமல் இருக்கும் பணியாளர்களை அவர் வரும் பொழுது  கடுமையாகத் தண்டித்து நம்பிக்கை துரோகிகள் இருக்குமிடத்திற்கு தள்ளுவார். ஏனெனில் அந்த பணியாளரிடம் மிகுதியான பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

"மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாக எதிர்பார்க்கப்படும் " (லூக்கா 12:48) என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப நம்முடைய அன்றாட வாழ்விலே கடவுள் பல்வேறு பொறுப்புகளை கொடுத்துள்ளார். அவற்றை நம்பிக்கைக்குரிய முறையில் செய்துமுடிக்கும்  பொழுது மிகுதியான ஆசிர்வாதத்தை நாம் பெற்றுக்கொள்ள முடியும். கடவுள் நமக்கு கொடுத்த பொறுப்புகளுக்கு நம்பிக்கைக்குரியவர்களாய் இல்லாதபொழுது நாம் கடவுளின் அருளையும் ஆசீர்வாதத்தையும் இழக்கிறோம்.

இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத மனப்போக்கு மாற வேண்டும் என்ற மைய சிந்தனையைத் தான் இன்றைய நற்செய்தியின் வழியாக  சீடர்களுக்கு இயேசு அறிவுறுத்தியுள்ளார். இயேசுவினுடைய அழைப்புக்கும் வார்த்தைகளுக்கும் நம்பிக்கைக்குரியவர்களாக வாழ்ந்தவர்கள் இன்று புனிதர்களாக திருஅவையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

திருமுழுக்கு பெற்ற நம் ஒவ்வொருவருக்கும் கடவுள் நற்செய்தியை வாழ்ந்து அறிவிக்கும் பொறுப்பை கொடுத்துள்ளார். அவற்றை முழு ஈடுபாட்டோடு செய்ய நம்பிக்கைக்குரியவர்களாக முன்வரும்போது நிச்சயமாக நம் வாழ்வில் வசந்தத்தைக் காண முடியும் . நம்மிடம் மிகுதியாகக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை சிறந்த முறையில் செய்ய கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார். கடவுளிடம் இருந்து நாம் அன்பையும் இரக்கத்தையும் பெற்றுள்ளோம். அதே அன்பையும் இரக்கத்தையும் நம்முடைய மனிதநேய செயல்பாடுகளால் வெளிப்படுத்த அழைக்கப்பட்டுள்ளோம். நாம் வாழும் இந்த சமூகத்தில் பல்வேறு வகையில் துன்பப்படுகின்ற மக்களுக்கு  உதவி செய்யும் பொழுது மனித சேவையில் புனிதம் காணமுடியும். இதுதான் உண்மையான சீடத்துவ வாழ்வு. இத்தகைய நம்பிக்கைக்குரிய சீடத்துவ வாழ்வை வாழத்தான் நாம் ஒவ்வொருவரும் இன்றைய நாளில் அழைக்கப்பட்டுள்ளோம்.

 இறைவேண்டல்
"மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாக எதிர்பார்க்கப்படும் "என்று கூறிய இயேசுவே!  திருமுழுக்கின் வழியாக எங்களை நம்பிக்கைக்குரிய  மக்களாக வாழ அழைத்துள்ளீர். ஆனால் நாங்கள் பல நேரங்களில் நம்பிக்கைக்குரிய மக்களாக வாழ மறந்துள்ளோம். அதற்காக மன்னிப்பு கேட்கின்றோம். நாங்கள் இனி வரும் காலங்களில் நம்பிக்கைக்குரிய பணியாளர்களாக வாழ்ந்து உமக்கு சான்று பகர தேவையான அருளையும் ஞானத்தையும் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

10 + 3 =