நிகழ்காலத்தில் வாழ்வோம்! பேராசையைக் களைவோம்! விண்ணுலகில் சொத்துக்களை சேர்ப்போம்! குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம் 29ஆம் திங்கள் 
மு.வா: எபே:2: 1-10
ப.பா: திபா 100: 1-2. 3. 4. 5 
ந.வா:லூக்: 12: 13-21

 நிகழ்காலத்தில் வாழ்வோம்! பேராசையைக் களைவோம்! விண்ணுலகில் சொத்துக்களை சேர்ப்போம்! 

காலம் பொன் போன்றது. கடவுள் ஒவ்வொரு மனிதருக்கும் கொடுத்துள்ள மிகப்பெரிய சொத்து காலம். இந்த காலத்தை சரியான முறையில் பயன்படுத்தி வாழ்ந்து நற்காரியங்கள் செய்யும் போது தான் நாம் உண்மையாக செல்வங்களைச் சேமிப்பவர்களாகிறோம். ஏனெனில் நம் வாழ்நாள் குறுகியது. அதன் முடிவை நம்மைப் படைத்த கடவுளை அன்றி யாரும் அறியார். இதை நாம் உணராமலேயே நம் வாழ்வின் பெரும் பகுதியை நாம் கழித்துவிடுகிறோம். முடியும் தருவாயில் உணர்கிறோம். இல்லை உணராமலேயே கண்களை மூடுகிறோம். இந்த உண்மையை நாம் உணர இன்றைய நற்செய்தியில் நாம் காணும் செல்வந்தர் உவமை நமக்குத் தூண்டுதலாக உள்ளது. 

செல்வந்தருக்கு எந்தக் குறையும் இல்லை. நல்ல விளைச்சலும் வந்திருக்கிறது. ஆனால் அதில் அவர் நிறைவடையாததால் நிகழ்காலத்தை மகிழ்வோடும் பயனுள்ளதாகவும் அவரால் வாழ முடியவில்லை. அவருக்குக் கவலை என்னவெனில் இவ்வளவு விளைச்சலை வைத்துக்கொண்டு தான் என்ன செய்வது என்பது தான்.களஞ்சியத்தில் நெல்லை சேமித்து வைக்க வேண்டும் என்ற எதிர்கால கவலையில் வாழ்ந்த அவருக்கு, அழிந்து போகக்கூடிய அந்த உணவுப் பொருளை எத்தனை காலம் களஞ்சியத்தில் வைக்க இயலும் என்ற நிகழ்கால யோசனை இல்லாமல் போனது வேதனைக்குரிய நிலை.

அத்தகைய சிந்தனை அவரிடம் இருந்திருந்தால் அவ்வுணவுப்பொருட்கள் கெடா வண்ணம் அதை பகிர்ந்தளிக்கவோ அல்லது குறைந்த விலைக்கு விற்கவோ அவருக்கு எண்ணம் தோன்றியிருக்குமன்றோ?

ஆம் அன்புக்குரியவர்களே. நிகழ்காலத்தின் பயனற்ற வாழ்க்கைப் போக்கு செல்வந்தரை எதிர்காலக் கவலையில் மூழ்கடித்தது. அதன் வெளிப்பாடாய் பேராசையும் சுயநலமும் அவன் மனதில் அதிகரிக்க விண்ணுலகில் அவன் ஏழையானான்.

நம்மிடம் கொடுக்கப்பட்ட செல்வங்களை செலவழிக்காது சேமிக்க எண்ணினால் அது பயனற்று போகும் என்பதற்கு செல்வந்தரின் வாழ்வு மிகச் சிறந்த உதாரணம். எனவே கடந்த கால எதிர்கால சிந்தனைகளைக் களைந்து நிகழ்கால வாழ்வில் இறைதிட்டத்தை  உணர்ந்து நமக்கும் பிறருக்கும் பயனுள்ள வாழ்வு வாழ்ந்து விண்ணுலகில் செல்வம் சேர்ப்போம். பேராசை மற்றும் சுயநல எண்ணங்களைக் களைவோம்.

 இறைவேண்டல் 
அன்பு இறைவா! எமக்கு அளிக்கப்பட்ட இக்குறுகிய காலத்தில் எம் வாழ்வை  மிகப்பெரும் சொத்தாகக் கருதி பயனுள்ள வாழ்வு வாழ்வும் ,பேராசையைக் களைந்து விண்ணுலகில் செல்வம் சேர்க்கவும் வரமருளும்.  ஆமென்.

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

3 + 2 =