உள்ளதைப் பெருக்கிக்கொள்வோம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


இன்றைய வாசகங்கள்(16.11.2022) 
ஆண்டின் பொதுக்காலம் 33 வாரம் - புதன்
மு.வா: திவெ:  4: 1-11
ப.பா: திபா 150: 1-2. 3-4. 5-6
ந.வா: லூக்: 19: 11-28

உள்ளதைப் பெருக்கிக்கொள்வோம்!

ஒரு வகுப்பிலே இரண்டு மாணவர்கள் நன்கு படிக்கக் கூடியவர்கள். நல்ல மதிப்பெண் எடுப்பவர்கள். ஒரு நாள் ஆசிரியர் அவர்கள் இருவரையும் அழைத்து அந்த வகுப்பிலே உள்ள மேலும் இரு மாணவர்கள் கற்றலில் சிரமப்படுவதால் அவர்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அவ்விருவருள் ஒரு மாணவர் உதவி செய்ய ஒத்துக்கொண்டார். மற்றவரோ தனக்கு படிக்க அதிகம் நேரம் தேவை. இவர்களுக்கு உதவி செய்து என்னுடைய படிப்பை கெடுக்க விரும்பவில்லை எனப் பதிலளித்தார். அவருடைய மனதில் சொல்லிக்கொடுப்பதால் நேரம் வீணாகும் மதிப்பெண் குறையும் என்ற மனநிலை இருந்தது. தான் எப்போதும் முதலாவதாக இருக்க வேண்டும் என்ற சுயநலமும் இருந்தது.

சில நாட்களில் தேர்வுகள் வந்தன. விடைத்தாள்கள் கொடுக்கப்பட்டன. தானும் படித்து பின்தங்கியவர்களுக்கு கற்று கொடுத்த மாணவன் அதிக மதிப்பெண் பெற்றான். தான் மட்டுமே கற்க வேண்டும் என்று எண்ணிய மாணவன் பின்தங்கினான். இவர்கள் இருவரும் சந்தித்து உரையாடிய போது அதிக மதிப்பெண் பெற்ற மாணவன், " தான் கற்றதை மற்றவருக்கு சொல்லித்தரும் போது தனக்கு அதிக தெளிவும் நினைவுத்திறனும் கூடியதாக சொன்னான் ". வாய்ப்பை நழுவ விட்டுவிட்டோமே என சுயநலமாக எண்ணிய மாணவன் வருத்தமுற்றான்.

 
இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் மினா நாணய உவமையை தியானிக்கிறோம். மத்தேயு நற்செய்தியாளரும் இதற்கொப்புமையாக தாலந்து உவமையைக் கூறியுள்ளார். இவ்வுவமை நமக்கு தரும் சிந்தனை என்ன? உள்ளதைப் பயன்படுத்தி பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதே. எந்த ஒரு பொருளையும் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அது குப்பைக்கு சமம். அது இருந்தும் இல்லாதது போன்றதுதான். மாறாக பயன்படுத்தினால் தான் அதன் பலன் நமக்குக் கிடைக்கும். அதனால் நன்மைகள் உண்டாகும். அது போலத்தான் நமக்கு கடவுள் வாழ்வைக் கொடையாகத் தந்துள்ளார். அவ்வாழ்வை நமக்கு மட்டுமல்ல பிறருக்கும் பயனுள்ளதாய்  வாழ்வதற்கு பல திறமைகளை, மதிப்பீடுகளை தந்துள்ளார்.அவற்றை நல்முறையில் பயன்படுத்தும் போது நம் வாழ்வு பயனுள்ளதாய் மாறும். நம் நற்குணங்களும் பெருகும்.

உவமையின் இறுதியில் இயேசு கூறிய வார்த்தைகள் யாதெனில் "உள்ளவனுக்கு கொடுக்கப்படும். இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்" என்பவையாகும். இங்கே உள்ளது, இல்லாதது என இயேசு குறிப்பிடுவது பொருட்களையோ செல்வத்தையோ அல்ல. மாறாக அவற்றை தனக்கும் பிறருக்கும் பயன்தரும் வகையில் பயன்படுத்தும் மனதை.  இத்தகைய மனமிருந்தால் நம்மிடம் உள்ளவை பெருகும். இத்தகைய மனமில்லாவிட்டால் இருப்பதும் இல்லாததாக ஆகும். எனவே உள்ளதை பெருக்கிக் கொள்ளும் வித்தையை இன்றைய உவமை மூலம் கற்றுக்கொள்வோம். நம்மிடம் உள்ளதை பயன்படுத்துவோம். கொடுப்போம். இறைவனின் பாராட்டைப் பெற முயற்சிப்போம்.

இறைவேண்டல்

அன்பு இறைவா நீர் அளித்த கொடைகளை நல்முறையில் பயன்படுத்தி பெருகச் செய்திட வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

6 + 0 =