கதவைத் திறப்போம்! மீட்பு அடைவோம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


இன்றைய வாசகங்கள்(15.11.2022) 
ஆண்டின் பொதுக்காலம் 33 வாரம் - செவ்வாய்
மு.வா: திருவெளி 3:1-6,14-22
ப.பா: தி பா : 14:2-5
ந.வா: லூக்: 19:1-10

 கதவைத் திறப்போம்! மீட்பு அடைவோம்! 

"இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்"  இன்று நமக்கு கொடுக்கப்பட்ட இவ்வார்த்தைகள் நமக்கு எவ்வளவு ஆறுதலாக உள்ளது. நம் உள்ளம் என்ற இல்லத்தில் வந்து தங்க ஆசையாய் இருக்கும் இறைவனின் அன்பு மனதை இன்றைய இரு வாசகங்களும் நமக்கு காட்டுகின்றன. இந்த அன்பு கடவுளை நம் உள்ளத்தில் ஏற்க நாம் இதயக் கதவுகளைத் திறக்க தயாராக இருக்கிறோமா என சிந்திக்க நாம் இன்று அழைக்கப்பட்டுள்ளோம். 

கடவுள் நம் மனக்கதவைத் தட்டும் சத்தத்தை கேட்டு திறப்பதற்கு நமக்கு தேவையானது உண்மையான மனமாற்றம். இன்றைய முதல் வாசகத்தில்  கற்றவைகளையும் கேட்டவைகளையும் நினைவு கூர்ந்து  செயல்கள் அனைத்தையும் நிறைவுள்ளதாக்கி மனம் மாற வேண்டுமென சர்த்தை திருச்சபை மக்களுக்கு அறிவுரை வழங்கப்படுவதாக நாம் வாசிக்கிறோம். இவ்வார்த்தைகள் 

இன்றைய காலகட்டதிலும் நமக்கும் மிகப் பொருந்தும். ஏனெனில் நாம் கற்ற மற்றும்  கேட்ட நல்லவைகளை மறந்து தேவையற்ற வழிகளில் செல்வதால் இறைவன் அழைக்கும் ஒலியை நம்மால் கேட்க இயல்வதில்லை. எனவே நாம் மனம் மாற வேண்டும். ஏனெனில் மனமாற்றமே கடவுளைக் கண்டடையவும் அவர் தட்டும் ஒலியைக் கேட்கவும் நமக்கு வழிவகுக்கும்.மீட்பைப் பெற நமக்கு உதவும். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் சக்கேயு மனம் மாறி இயேசுவுக்காய் தன் வீட்டின் கதவுகளை மட்டும் அல்ல தன் இதயக் கதவுகளைத் திறந்தார் . பணம் பதவி மோகம் போன்ற போதைகளில் மூழ்கியவராய் இருந்த சக்கேயு இயேசுவைக் காண ஆர்வம் மிகுந்தவராய் எடுத்த முயற்சி தான் அவருடைய இதயக் கதவுகளை இறைவன் தட்டுவதை உணர்த்தியது. இன்று இவ்வீட்டில் நான் தங்க வேண்டும் என்று இயேசு கூறிய வார்த்தைகளால் முழுவதும் மனம் மாறி கடவுள் அருளிய மீட்பை தனதாக்கிக் கொண்டார் சக்கேயு.

நாமும் அவரைப்போல கடவுள் நம் உள்ளக்கதவைத் தட்டும் சத்தத்தைக் கேட்க முயற்சி எடுப்போம். அவர் நம் உள்ளத்தில் வந்து தங்கிவிட்டால் நம் வாழ்வுப் பாதை மாறும்.நாமும் மீட்புக்கு சொந்தக்காரர்கள் ஆகலாம். இறைவனுக்காய் இதயத்தைத் திறக்கத் தயாரா?

 இறைவேண்டல் 
அன்பு இறைவா! எம் இதயக் கதவுகளை நீர் விடாது தட்டிக் கொண்டிருப்பதை உணர்ந்து மனம் மாறி உமக்காய் கதவுகளைத் திறந்திட எம்மை வழிநடத்தும். ஆமென்.

 

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 6 =