மனத்திடனோடு பாவக்காரணிகளை விலக்கத் தயாரா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


இன்றைய வாசகங்கள்(07.11.2022) 
ஆண்டின் பொதுக்காலம் 32 வாரம் - திங்கள் 
மு.வா: தீத்து: 1: 1-9
ப.பா: தி பா :24: 1-2. 3-4. 5-6
ந.வா: லூக்: 17: 1-6

 மனத்திடனோடு பாவக்காரணிகளை விலக்கத் தயாரா? 

வேடிக்கையாக ஒரு கதை சொல்வார்கள். ஒரு இளைஞன் முன் மூன்று வய்ப்புகள் வைக்கப்பட்டதாம். முதலாவதாக ஒரு இளம் பெண் அவன்முன் கொண்டுவரப்பட்டாள். அப்பெண்ணை வன்கொடுமை செய்யவேண்டுமெனக் கூறப்பட்டது. அதற்கு அந்த இளைஞன் அது பாவம் என சொல்லி அவ்வாய்ப்பை வேண்டாம் என்றார். இரண்டாவதாக ஒரு குழந்தை அவன் முன் வைக்கப்பட்டது. அக்குழந்தையைக் கொல்ல வேண்டுமெனக் கூறப்பட்டது. அது மிகப்பெரும் பாவம் என்று சொல்லி அவ்விளைஞன் மறுத்துவிட்டான். மூன்றாவது ஒரு மது பாட்டில் கொடுக்கப்பட்டது. சற்று யோசித்தவுடன் முன்பு கூறிய இரண்டைக் காட்டிலும் இது பரவாயில்லை என்று எண்ணி மதுவைக் குடித்தான். குடித்தவன் தானாகவே முன்பு கூறிய இரண்டையும் செய்தான். 
மது அவன் செய்த அனைத்து பாவத்திற்கும் காரணமானது. மதுவை விலக்கி இருந்தால் அவன் பாவத்திலிருந்து காக்கப்பட்டிருப்பான்.

அன்புக்குரியவர்களே இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம் ஆண்டவர் பாவத்தை விலக்க அதைச் செய்யத் தூண்டும் காரணிகளை விலக்குவதே அடித்தளம் என்று கூறுகிறார். ஏவாள் பாவமின்றிதான் இருந்தாள்.  ஆனால் அவள் பாம்பு கூறிய வார்த்தைகளை விலக்கி இருந்தால் மனித வர்க்கமே பாவம் என்ற ஒன்றை அறியாமல் இருந்திருக்குமன்றோ!
நம் அன்றாட வாழ்வில் பலவித சோதனைகள் நம்முன் வைக்கப்படுகின்றன. அச்சோதனைகள் எல்லாம் முதலில் நமக்கு அழகாகவே தோன்றும். நம்மை ஈர்க்கும். அதிலே நாம் வீழ்ந்த பின்புதான் அது எவ்வளவு மோசமான விளைவுகளை நமக்கு ஏற்படுத்தும் என்பதை நம்மால் அறிய இயலும்.

நமது உடலுறுப்புகள் நம்மைப் பாவம் செய்யத் தூண்டினால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள் என்று இயேசு கூறுகிறார். அதன் உண்மையான பொருள் என்ன? நம்மைப் பாவம் செய்யத் தூண்டும் சிறு எண்ணத்தைக் கூட நாம் அறுத்தெறிய வேண்டும் என்பதுதான்.

 நம் மனதை நம் எண்ணங்களை சரியாகக் கையாளப் பழகிக்கொள்ள வேண்டும். நாம் மனதிற்கு அடிமையாகக் கூடாது என உளவியலாளர்கள் கூறுகிறார்கள். 
எனவே நம் மனதைக் கையாளக் கற்றுக்கொள்வோம். நம்மை அடிமைகளாக்கும் தீய எண்ணங்கள், பழக்கங்கள், ஏன் நண்பர்களைக் கூட விட்டு விலகக் கற்றுக்கொள்வோம். மனம் மாறுவோம். இறைவன் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்வார். நாம் மனதிலே நிலைநிறுத்த வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் நாம், பிறர்  தவறான வழியில் செல்வதற்கு வழிகாட்டக் கூடியவர்களாக இல்லாதவாறு நம்மையே காத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அது.
அதற்கான வரத்தை இறைவனிடம் கேட்போம்.

 இறைவேண்டல் 
அன்பு இறைவா! தூயவரே! எம் கண்முன்னே மலிந்து கிடக்கின்ற பாவக் காரணிகளை விட்டு விலகவும் நாங்கள் யாருக்கும் பாவத்திற்கான காரணராக இல்லாமலும் எம்மை காத்துக் கொள்வீராக. ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

3 + 5 =