Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
மனிதமே புனிதம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
அனைத்து புனிதர்கள் பெருவிழா
I: திவெளி: 7: 2-4, 9-14;
II: திபா: 24: 1-2. 3-4ab. 5-6
III: 1 யோவான்24: 1-2. 3-4ab. 5-6
IV: மத் 5:1-12
இன்று நம் தாய் திருஅவையானது எல்லாப் புனிதர்களுடைய பெருவிழாவைக் கொண்டாடுகிறது. இப்புனிதர்கள் அனைவரும் கடவுளின் திருவுளப்படி வாழ்ந்தவர்கள். இயேசுவை தம்மில் வெளிக்காட்டியவர்கள். நம்மைப் போல மனிதர்களாய்ப் பிறந்தவர்கள் தாம். பலவீனர்கள் தாம். ஆயினும் தம் பலவீனங்களையெல்லாம் கடவுள் அருளிய பலத்தால் வென்றவர்கள். நற்செய்திக்குச் சான்று பகர்ந்தவர்கள். உலகிற்கு எடுத்துக்காட்டாய் விளங்கியவர்கள். அனைத்தையும் தாண்டி நல்ல மனிதர்களாய் வாழ்ந்தவர்கள். ஆம் நல்ல மனிதர்களாக நாம் வாழ முயல்வதே உண்மையான புனிதத்துவம் தான்.
கடவுள் இவ்வுலகைப் படைத்த போது ஒளி உண்டாகுக, நீர் உண்டாகுக என அனைத்தையும் தன் வார்த்தையால் படைத்தார். ஆனால் மனிதனைப் படைக்க நேரம் எடுத்து தன் உடலுழைப்பைக் கொடுத்து தன் உயிர்மூச்சைக் கொடுத்து உருவாக்கினார். அதுவும் தன் உருவிலும் தன் சாயலிலும் படைத்தார் என தொடக்கநூலில் நாம் வாசிக்கிறோம் அல்லவா. புனிதத்தின் உச்சமே கடவுள்தான் எனில் அவருடைய சாயலாகப் படைக்கப்பட்ட நாமும் அப்புனிதத்தை நம்மிலே கொண்டுள்ளோம் என்பதை உணரவே இவ்விழா நம்மை அழைக்கிறது.
அப்புனிதத்தை நம்முடைய அன்றாட மனித வாழ்வில் வெளிப்படுத்த வேண்டும் என்பதே அனைத்துப் புனிதர்களும் நமக்கு வழங்கும் செய்தி.
ஒரு பழைய திரைப்படப் பாடல் வரிகள் இவ்வாறாக அமைகின்றன. " பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக செந்நீரும் சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன் " என்பதே அவ்வரிகள். ஆம் நம் அடுத்திருப்போரின் துன்பத்தில் அவர்களுக்காக நாம் சிந்தும் ஒருதுளி கண்ணீர்கூட நம் மனிதத்தையும் அதில் அடங்கியுள்ள புனிதத்தையும் எடுத்துரைக்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகம் நாம் எவ்வாறு மனிதர்களாய் வாழ வேண்டும் என்பதற்கான வரையறையை நமக்குத் தருகின்றது.
இந்நற்செய்திப் பகுதியை ஆங்கிலத்தில் " Beattitudes " எனக் கூறுவர். அப்படியேன்றால் பேரின்பம் அல்லது பாக்கியம் என்பது பொருள். அதாவது பேறுபெற்ற நிலையை நாம் அடைவதற்கு நாம் கொண்டிருக்க வேண்டிய மனநிலை என நாம் எடுத்துக்கொள்ளலாம். எளிய மனம், நீதி, துயரங்களை ஏற்றுக்கொள்ளுதல், கனிவு, இரக்கம், அமைதி, தூய்மை போன்ற பண்புகள் நம்மை பேறுபெற்ற நிலைக்கு அழைத்துச் செல்கின்றன என இயேசு தம் போதனையில் கூறியுள்ளார். இவை அனைத்தையும் நம் அன்றாட வாழ்வில் நாம் கடைபிடிக்கும் போது, நாமும் நல்மனிதர்களாகிறோம். அதனால் புனிதர்களாகிறோம்.
நாம் விழா கொண்டாடுகிற புனிதர்கள் அனைவருமே மனிதத்தைப் போற்றினார்கள். ஏழைகளுக்கு உதவினார். சமூகத்தில் ஓரங்கப்பட்ட மக்களுக்காக வாழ்ந்தவர் அன்னை தெரசா.தம்மை அண்டிவந்த அனைவருக்கும் ஆன்ம வழிகாட்டியாக இருந்தார் புனித பியோ.தொழுநோயாளிகளுக்காக தன் வாழ்வை அர்பணித்தார் புனித தமியான். தன்னிடம் உள்ளதை இல்லாதவரோடு பகிர்ந்து அனைவரையும் சகோதர சகோதரிகளாக ஏற்றுக்கொண்டார் புனித அசிசியார். நீதிக்காக பாடுபட்டார் புனித மார்டின் தி போரஸ். இன்னும் கணக்கில் அடங்காதப் புனிதர்கள் நமக்கு முன் மனிதத்தைப் போற்றி வாழ்ந்து சென்றிருக்கிறார்கள். நம்மோடு பலர் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். நாமும் இப்புனிதர்களைப் போல மனிதத்தைப் போற்றி பேறுபெற்றவர்களாக மாற முயற்சிப்போம். நல்மனிதர்களாய் வாழ்ந்து புனிதத்தை நோக்கிப் பயணிக்க நம் புனிதர்கள் வழியாக இறைவனை வேண்டுவோம்.
இறைவேண்டல்
புனிதத்தின் உறைவிடமே இறைவா! உம் சாயலாகப் படைக்கப்பட்ட நாங்கள் அனைவரும் இயேசுவின் போதனையை வாழ்வாக்கிய புனிதர்களின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி நல்மனிதர்களாய் வாழ்ந்து புனிதத்தை நோக்கிப் பயணிக்க அருள்தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment