எல்லைக்கு அருகில் இருந்த தீவிரவாத முகாமில் இந்தியா தாக்குதல்


இந்தியா - பாகிஸ்தான் எல்லை அருகில் இயங்கி வந்த  தீவிரவாதிகளின் பெரியதொரு முகாம் மீது இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

 

பி்ப்ரவரி மாதம் 14ம் தேதி ஜம்மு கஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில், துணை ராணுவப்படையினர் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 46 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

 

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்ற இந்த சம்பவத்திற்கு பின்னர், இருநாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்து வந்தது.

 

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையோரத்தில் செயல்படடு வந்த தீவிரவாதிகளின் முகாம் மீது இந்திய விமானப்படை செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி அளவில் தாக்குதல் நடத்தியுள்ளது.

 

பாகிஸ்தான் சற்றும் எதிர்பாராத நிலையில் இந்தியாவின் அதிரடியாக இந்த தாக்குதலை நடத்தியுள்ளதால், அங்கு பதற்றம் நிலவுகிறது.

 

இந்தியாவின் எல்லையிலுள்ள சில இடங்களில் பாகிஸ்தான் செல் தாக்குதல் நடத்தி வருவதாகவும், இந்திய படை அவற்றை திறமையோடு சமாளித்து வருவதாகவும் தூர்தர்சன் தொலைக்காட்சி தெரிவிக்கிறது.

 

ஊடி என்ற இடத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா துல்லிய தாக்குதலை நடத்தியபோது, அவ்வாறு நிகழவில்லை என்று பாகிஸ்தான் மறுத்துவிட்டது.

 

ஆனால், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாக்குதல் குறித்து பாகிஸ்தான் குறிப்பிடுகையில், இந்திய விமானங்கள் பாகிஸ்தான் கட்டுப்பாட்டு வான்பரப்பில் பறந்ததை கண்டிப்பதாக தெரிவித்துள்ளது

Add new comment

5 + 3 =