Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ஒடிசாவில் தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்தவரின் உடல் கண்டெடுப்பு
இந்தியாவின் ஒடிஸா மாநிலத்திலுள்ள தொலைதூர கிராமத்தில் கிறிஸ்தவர் ஒருவரின் உடல் ஏறக்குறைய தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொலை என்று அவரது குடும்பத்தினரும், பிறரும் நம்புகின்றனர்.
அரசியல் ரீதியாக மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் இவரை கொன்றுவிட்டதாக காவல்துறையினர் கூறுவதை குடும்பத்தினர் நிராகரித்துள்ளனர்.
நான்கு பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் என மொத்தம் ஐந்து குழந்தைகளுக்கு தந்தையான 40 வயதான அனாந்ட் ராம் கிராண்ட்டின் உடல் நபாரான்காபூர் மாவட்டத்திலுள்ள பினாஸ் கிராமத்திலுள்ள சாலை ஒன்றில் பி்பரவரி 11ம் தேதி கண்டெடுக்கப்பட்டது என்று உள்ளூர் ஊழியர் சந்தான் ஜானி தெரிவித்தார்.
கொலை செய்யப்பட்டவரின் தொண்டை வெட்டப்பட்டிருந்தது. தலை பெரியதொரு பொருளால் தாக்கப்பட்டு சிதைக்கப்பட்டிருந்தது. தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து அகற்றப்படாத நிலையில் அங்கேயே அவர் இறந்ததாக தெரிகிறது என்று அவரது உடலை நல்லடக்கம் செய்ய உதவிய மறைபரப்பு ஊழியர் ஜானி தெரிவித்தார்.
அவர் கொல்லப்பட்ட இடம் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட இடமாக இருந்ததால், இந்த செய்தி பரவலாக தெரியவர ஒருவாரத்திற்கு மேலாக ஆகிவிட்டது என்று இந்த ஊழியர் கூறினார்.
கொலை செய்யப்பட்ட கிராண்ட்டும், அவரது குடும்பத்தினரும் இயேசுவின் மீதான இறைநம்பிக்கையை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்றுக்கொண்டவர்கள்.
கிறிஸ்தவ இறைநம்பிக்கையை கைவிட வேண்டுமென உள்ளூர் இந்து மதத்தினர் அவர்களுக்கு அழுத்தங்கள் கொடுத்து வந்தனர்.
எனவே, இந்த கிராமத்தின் வெளிபுறத்தில் வாழ இவர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். சில வேளைகளையில் கைக்கலப்பும் ஏற்பட்டு, கிராண்ட் தாக்கப்பட்டுள்ளார்.
ஆனாலும், கிறிஸ்துவின் மீதான இறைநம்பிக்கையை இந்த குடும்பத்தினர் கைவிடவில்லை.
இந்த கொலை நடைபெறுவதற்கு முன்னால், இந்த கிராமத்தை சேர்ந்த ஏழு பேர் கிறிஸ்தவத்தை விட்டுவிட வேண்டும் அல்லது கொலையை சந்திக்க வேண்டும் என்று ஏழு நாட்கள் கெடு விதித்திருந்தனர் என்று இந்த ஊழியர் தெரிவித்துள்ளார்.
ஒடிஸா மாநிலத்தின் இந்த பகுதியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்ற மாவோஸ்டுகள் இந்த கொலையை செய்துள்ளதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அந்த பகுதிகளில் இணையான நிர்வாகம் நடத்துவதற்கு அதிகாரிகளோடு மோதுகின்ற மாவோஸ்டுகள், அதிகாரிகளுக்கும், பாதுகாப்பு படைப்பிரிவுகளுக்கும் உதவி செய்வதாக சந்தேகப்படும் கிராமத்தினரை கொன்றுவிடுகின்றனர்.
இந்த சம்பவத்தை பொறுத்தவரை மாவோஸ்டுகள் ஈடுபடவில்லை என்று தெளிவாக தெரிகிறது என்றும் கிராமத்தினர்தான் கிராண்டை கொலை செய்துள்ளனர் என்று ஊழியர் ஜானி தெரிவித்துள்ளார்.
மாவோஸ்டுகள் மீது கொலை பழியை போட்டு விடுவதன் மூலம் இந்து கிராம மக்களுக்கு எதிராக முறையான நீதிமன்ற நடைமுறைகளை நடத்தாமல் இருப்பது காவல்துறையினருக்கு எளிதாகிவிடும் என்றும் ஊழியர் ஜானி கூறியுள்ளார்.
கிராண்டின் மனைவி சுக்பாதி கிறிஸ்தவராக இருப்பதால் குடும்பத்தினரிடம் இருந்து பெரும் அழுத்தங்களை எதிர்கொண்டு வருகிறார். அவரது குடும்பத்தில் கிறிஸ்தவத்திற்கு மாறியுள்ள ஒரே நபர் இவர்தான் என்று இன்னொரு ஊழியர் பி. எஸ் நகுல் கூறியுள்ளார்.
ஆனால், சாகும் வரை கிறிஸ்துவின் இறைநம்பிக்கையில் நிவைத்திருக்க இந்த குடும்பம் உறுதிபூண்டுள்ளதாக ஊழியர் நகுல் தெரிவித்து்ளளார்.
Add new comment