வெனிசுவேலா: இரு தரப்பும் கேட்டு கொண்டால் மத்தியஸ்தம் செய்ய தயார் – திருத்தந்தை


வெனிசுவேலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோவுக்கும், தன்னைதானே அதிபராக அறிவித்து கொண்டுள்ள ஜூவான் குவைடோவுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

 

ஆனால், இந்த இருதரப்பும் தன்னிடம் உதவி கேட்டு கொண்டால்தான் இதனை செய்வதாக திருத்தந்தை தெளிவுப்படுத்தியுள்ளார்.

 

ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து திரும்புகையில் விமானத்தில் வைத்து பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், மதுரோ தனக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாகவும், அதனை தான் இன்னும் வாசிக்கவில்லை என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

இந்த கடிதத்தை வாசித்துவிட்டு என்ன செய்வது என்று முடிவு செய்வேன். ஆனால், நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம். இருதரப்பும் உதவியை கோர வேண்டும் என்பது தொடக்க நிபந்தனை என்று திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

 

பிப்ரவரி 4ம் தேதி காலையில், வெளிசுவேலா ஆயர்களும், மத மற்றும் தேசிய கவுன்சில் பேரவையும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்களை புகழ்ந்ததோடு, நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர அழைப்புவிடுத்து, காரிதாஸ் வேனிசுவேலா மூலம் உணவு வழங்க தயாராக இருப்பதையும் தெரிவித்துள்ளது.

 

அதிபர் மதுரோ அல்லது எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோவை பெயர் சொல்லி குறிப்பிடாமல், அரசியல், ஜனநாயக மாற்றத்திற்கான தெளிவான நிலைப்பாட்டை இந்த அறிக்கை எடுத்திருப்பது தெரிகிறது.

 

எல்லா சமூகங்களுக்கும் நாங்கள் சேவை புரிகிறோம். தேசிய அளவில் அநீதி நிலைமைகள், ஒழுங்கான, சிறந்த வாழ்க்கைக்கான தேவைகளின் பற்றாகுறை மற்றும் அநீதிக்கு எதிரான பாதுகாப்பு இல்லாததை நாங்கள் அனுபவித்து வருகிறோம் என்று ஆயர்கள் பேரவையின் பொதுச் செயலாளர் கராகஸில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்ட இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

Add new comment

3 + 1 =