மலேசியாவின் தலைவர்கள் முஸ்லிம்களாக மட்டுமே இருக்க வேண்டும் – இஸ்லாமிய மத குரு


மலேசியாவில் சட்டப்படியான ஆட்சியை அமல் படுத்தும் முயற்சிகளை அரசியல்வாதியாக மாறிய செல்வாக்கு மிக்க இஸ்லாமிய மதகுரு ஒருவர் குறைகூறியுள்ளார்.

 

ஊழல் மற்றும் நிதி மோசடி குற்றங்கள் புரிந்ததாக மலேசியாவின் முன்னாள் தலைவர்கள் சிறை தண்டனையை எதிர்கொள்ளும் விசாரணைகள் தொடங்கவுள்ள நிலையில் இந்த இஸ்லாமிய மத குருவின் ஃபேஸ்புக் பதிவு வந்துள்ளது.

 

மலேசியாவின் முன்னாள் தலைவர்களின் அறநெறி மற்றும் இங்கிதங்கள் தொடர்பாக விசாரிக்கப்படும்போது, அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மலேசிய இஸ்லாமிய கட்சியின் தலைவர் ஹாதி அவாங் தெரிவித்துள்ளார்.

 

தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஆயிரக்கணக்கான பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள இவர் “சட்டபூர்வ ஆட்சியில் அல்லா எங்கே? என்ற தலைப்பில் பதிவிட்டுள்ள மிக நீண்ட பதிவில், நாட்டை ஆளுவதில் இஸ்லாமிய சட்டஙகளின் முக்கியத்துவத்தை ஹாதி வலியுறுத்தியுள்ளார்.

 

நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கின்ற இந்த இஸ்லாமிய மதகுரு, மலேசிய தலைவர்கள் இழைத்துள்ள குற்றங்களுக்கு அப்பாற்பட்டும் மக்கள் இந்த முஸ்லிம் தலைவர்கள் மீது தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

முஸ்லிம் பெரும்பான்மையாக வாழும் மலேசிய நாட்டை ஆளுவதில் முஸ்லிம் அல்லாதோரை பங்கேற்க அனுமதிப்பது முஸ்லிம்களை நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்று அவர் எச்சரித்திருக்கிறார்.

 

முஸ்லிம்களாலும், மனிதர்கள் உருவாக்கிய சட்டங்களைவிட சிறந்த ஷாரியா சட்டத்தாலும்தான் மலேசியாவை காப்பாற்ற முடியும் என்று ஹாதி தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

 

கடந்த ஆண்டு மே மாதம் தோல்வியடைந்த அரசு தலைவர்களின் குற்றங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்று ஹாதி வலியுறுத்தியுள்ளார்

Add new comment

2 + 3 =