கஜா புயல் பாதிப்பு – ஆமைகளின் வருகை குறைவு


வழக்கமாக முட்டையிடுவதற்கு வருகின்ற ஆமைகளைவிட இந்த ஆண்டு ஆமைகளின் வருகை குறைந்துள்ளதாக வனத்துறையினர் கூறியுள்ளனர்.

 

கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பால் கடற்கரைப் பகுதிகளில்  ஏற்பட்ட மாற்றங்களே இதற்கு காரணம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

 

இந்திய கடல் பகுதியில் 5 வகையான ஆமைகள் வாழ்வதாக கூறப்படுகிறது.

 

இவற்றில் இதய வடிவில், ஆலிவ் வண்ணத்தில் இருக்கும் ஆலிவ் ரெட்லி டர்டில் எனப்படும் சிற்றாமை வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடற்பகுதியில் அதிக அளவில் காணப்படுகின்றன.

 

தமிழக கடற்கரைப் பகுதிகளுக்கு பங்குனி மாதத்தில் இத்தகைய ஆமைகள் அதிகம் வருவதால், இதை பங்குனி ஆமைகள் என உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர்.

 

கடல் சுற்றுச்சூழல் சமன்பாட்டில் கடல் ஆமைகளின் பங்கு மிகவும் முக்கியமானது.

 

மீன் குஞ்சுகளை உணவாக உட்கொண்டு மீன்வளத்தை அழித்துவிடுகின்ற ஜெல்லி மீன்களை கடல் ஆமைகள் உணவாக உட்கொண்டு அழித்துவிடுகின்றன.

 

இவ்வாறு மீன்வளத்தை பாதுகாக்க ஆமைகள் உதவுகின்றன.

 

பருவநிலை மாற்றம், கடல் மாசுபாடு, தடை செய்யப்பட்ட மீன்பிடித்தல் ஆகியவை கடல் ஆமைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன.

 

ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களில் ஆமை இனப்பெருக்க பகுதிகளாக 90 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

 

இனப்பெருக்கக் காலமான நவம்பர் முதல் ஏப்ரல் வரை, ஆமைகள் கடற்கரைக்கு வந்து இரவில் கரையை நெருங்கி, ஆழக் குழிதோண்டி முட்டையிட்டுச் செல்கின்றன.

 

இந்த ஆண்டு இனப்பெருக்கக் காலத்தின் இரண்டு மாதங்கள் நிறைவடைந்த நிலையில், ஆமைகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது.

 

இந்நிலை இயற்கை ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

 

கஜா புயல் தாக்கத்தால் கடற்கரை பகுதிகளில் ஏற்பட்ட மாற்றத்தால் ஆமைகள் முட்டையிட வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Add new comment

7 + 8 =