கடலை பன்னாட்டு பெரு நிறுவனங்களுக்கு தரை வார்க்க மோடி ஒப்புதல்


மாநிலங்களின் உரிமையைப் பறித்துவிட்டு, மீனவ மக்கள் தலைமுறை தலைமுறையாக கொண்டுள்ள வாழ்வு உரிமையை மறுப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள கடலோர ஒழுங்குமுறை அறிவிப்பு ஆணை 2018 வழி செய்வதாக கண்டனம் எழந்துள்ளது.

 

கடலையும். கடற்கரையையும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெரு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் முயற்சிதான் இந்த ஆணை என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

 

இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி தலைமையில் டிசம்பர் 28-ம் தேதி நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில். கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு ஆணை 2018க்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவிடம் இருக்கின்ற 7 ஆயிரத்து 500 கி.மீ. நீளக் கடற்கரையில் இருந்து மீனவ சமூகத்தை ஒட்டுமொத்தமாக வெளியேற்றும் எதேச்சாதிகாரமான முடிவு இதுவென வைகோ தெரிவித்துள்ளார்.

 

மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இந்த ஆண்டு ஜூலை 2ம் தேதி கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு ஆணை 2011-ல், 16-வது முறையாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, கருத்துக் கேட்புக்கு இணையதளத்தில் வெளியானது.

 

பெயரளவுக்கு நடத்தப்பட்ட கூட்டங்கள் அனைத்திலும் மீனவர் அமைப்புகள், சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் எல்லோரும் மத்திய அரசின் கடலோர மேலாண்மை வரைவுத் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

ஆனால், இந்த எதிர்ப்புகள் பற்றி எந்தவொரு கலாந்தாய்வும் நடத்தாமல், கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு ஆணை 2018 ஐ நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

கடலோரப் பகுதி 4 மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

 

2004-ம் ஆண்டு சுனாமி பேரழிவுக்குப் பின்னர். புதிய விதிகளை உள்ளடக்கி கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு ஆணை 2011 வெளியானது.

 

அதன்படி, கடற்கரையில் இருந்து 200 மீட்டர் வரை எந்தவிதமான வளர்ச்சித் திட்டங்களுக்கும் அனுமதி இல்லை.

 

தற்போது திருத்தப்பட்ட கடலோர மேலாண்மைத் திட்டத்தில் அலை ஏற்றத்திற்கும். அலை இறக்கத்திற்கும் இடைப்பட்ட பாதுகாக்கப்பட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டலப் பகுதியை ரியல் எஸ்டேட் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.

 

அலை ஏற்றத்தால் பாதிக்கப்படும் நீர் நிலைகளில் இருந்து 100 மீட்டர் வரையில் பாதுகாக்கப்பட்ட பகுதி என்று வரையறுக்கப்பட்டு இருந்ததை, தற்போது 50 மீட்டர் என்று குறைத்துவிட்டனர். இதனால் பாதுகாக்கப்பட வேண்டிய கடலோரப் பகுதியில், தொழிலகங்கள், சுற்றுலா விடுதிகள், கட்டடங்கள், உணவகங்கள் அமைக்க அனுமதி வழங்கப்படும்.

Add new comment

7 + 2 =