Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
உணவு பாதுகாப்பிற்கு அடையாளமான நெல் ஜெயராமன் மரணம்
174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த, நெல் ஜெயராமள் வியாழக்கிழமை காலை காலமானார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள கட்டிமேடு கிராமத்தில் ராமசாமி முத்து லட்சுமி தம்பதியின் மகனாக 1965-ல் பிறந்தவர்தான் இந்த ஜெயராமன்.
அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை படித்த அவர், குடும்ப வறுமையால் படிப்பை தொடர முடியாமல் அச்சக பணி செய்தார்.
அதன் பின்னர், 'கிரியேட்டிவ்' என்ற அமைப்புடன் இணைந்து நெல் குறித்த ஆய்வில் ஈடுபடத் தொடங்கினார்.
விவசாயத்தை பற்றிய அரிய தகவல்களை பெறுவதற்காக, வேளாண் கருத்தரங்குகள் நடக்கும் இடங்களுக்கெல்லாம் சென்றார்.
இவ்வாறு ஒரு கருத்தரங்கிற்கு சென்றபோதுதான் நம்மாழ்வாரின் அறிமுகம் ஜெயராமனுக்கு கிடைத்துள்ளது.
நம்மாழ்வாரை குருவாக ஜெயராமன் ஏற்றார். நம்மாழ்வாரின் வேண்டுகோளை ஏற்று, அழிந்து வரும் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட தொடங்கினார்.
அழிந்து போகும் ஆபத்தில் இருந்த கருப்புக் கவுளி, மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி, குள்ளக்கார், கிச்சடி சம்பா உள்ளிட்ட 174 பாரம்பரிய நெல் ரகங்களை ஜெயராமன் மீட்டெடுத்தார்.
விவசாயிகளால் நெல் ஜெயராமன் என பாசத்தோடு அழைக்கப்பட்ட இவர். 2006 தொடங்கி ஆண்டுதோறும், திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கத்தில் தேசிய அளவிலான நெல் திருவிழாவை நடத்தி வந்தார்.
நெல்தான் உணவு, அதுவே மருந்து என்று கூறி, ஆண்மை அதிகரிப்பு, கரு வளர்ச்சி, சுகப்பிரசவம், நீரிழிவு நோய் என அனைத்திற்கும் நெல் ரகங்கள் உண்டு என உலகறிய செய்து மத்திய, மாநில அரசுகளின் விருதுகளை பெற்றார்.
அத்தகைய சிறந்த மனிதர் காலமாகி விட்ட நிலையில் அவரது பணியை தங்கள் கடமையாக விவாசாயிகள் தொடர்வதே அவர்கள் நெல் ஜெயராமனுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும். .
Add new comment