Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வோமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் பத்தாம் செவ்வாய்; I: 2 கொரி: 1: 18-22; II: திபா: 119: 129-130, 131-132, 133, 135; III : மத்: 5: 13-16
நாம் யாருக்காவது உதவி செய்தோம் என்றால் "கடவுள் மாதிரி எங்களுக்கு உதவி செய்தீர்கள் " என்று உதவி பெற்றவர்கள் கூறுவார்கள். மனிதன் இயல்பிலே நற்செயல்களைப் புரிய படைக்கப்பட்டவன். ஏனெனில் கடவுள் மனிதனை அவரின் சாயலில் படைத்திருக்கிறார். கடவுள் நல்லவராக இருப்பதால் அவரின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர்களும் நல்லவர்களே. ஆனால் பல நேரங்களில் சூழ்நிலைகளும் சுயநலமும் மனிதன் கடவுள் இயல்போடு வாழத் தடையாக இருக்கின்றது. ஆனால் மனிதன் எத்தகையத் தடைகள் வந்தாலும் நற்செயல்கள் புரிய உறுதியாய் இருக்கும்போது, விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ முடியும்.
இன்றைய நற்செய்தி வாசகமானது உலகிற்கு நாம் நற்செயல்கள் புரிபவர்களாக வாழ அழைப்பு விடுக்கின்றது. "நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள் "என்று ஆண்டவர் இயேசு சுட்டிக்காட்டியுள்ளார். உப்பின் தன்மை என்னவென்றால் சுவைக் கொடுப்பது. இயேசு தன்னுடைய இறையாட்சிப் பணிக்காலங்களில் பிறருக்குச் சுவையாக இருந்து வந்தார். இறைவார்த்தையை போதிப்பது வழியாக பிறருக்குச் சுவை கொடுத்தார். தன்னுடைய நலமளிக்கும் பணியின் வழியாக சுவையான நலவாழ்வை பெற்றுக்கொள்ள வழிகாட்டினார். நம்முடைய அன்றாட வாழ்விலும் பிறருடைய வாழ்வைச் சுவையாக மாற்ற அழைக்கப்பட்டுள்ளோம். துன்பத்தின் சுமையைத் தாங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு சுவையான வாழ்வை நம்முடைய நற்செயல்கள் வழியாகக் கொடுக்க அழைக்கப்பட்டுள்ளோம்.
" உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள் "என்று ஆண்டவர் இயேசு நம்மைப் பார்த்து கூறுகிறார். ஒளி என்பது இருளை அகற்றும் ஒப்பற்ற தன்மை கொண்டது. நம்முடைய வாழ்விலும் ஒளியிழந்து எத்தனையோ நபர்கள் இருள் வாழ்வில் வாழ்ந்து கொண்டிருப்பதைக் காண்கிறோம். தங்கள் வாழ்க்கையே முடிந்து விட்டது. இனிமேல் வாழ்வதற்கு ஒன்றுமில்லை என்று எத்தனையோ நபர்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ளும் மனநிலையில் இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை உற்சாகப்படுத்தி அவர்களுக்கு நேர்மறை சிந்தனைகளை வழங்கி வாழ்வு ஒளியூட்டம் பெற வழிகாட்டும் பொழுது, நம்மாலும் பிறர் வாழ்வில் ஒளியேற்ற முடியும். இத்தகைய வாழ்வைத் தான் ஆண்டவர் இயேசு வாழ்ந்து காட்டினார். எனவே இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் வாழும் மக்களை அடையாளம் கண்டு, ஒளி நிறைந்த மலைக்கு வழிகாட்ட நாம் முயற்சி செய்வோம். இத்தகைய செயல்கள் வழியாக கடவுளின் ஒளியை மனிதர்முன் ஒளிர வைக்க முடியும். இதன் வழியாக விண்ணகத் தந்தை மகிழ்ச்சி அடைவார். நம்முடைய செயல்களால் பயன்பெற்ற மக்கள் அனைவரும் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். நற்செயல்கள் வழியாக விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழத் தயாரா? சிந்திப்போம் செயல்படுவோம்.
இறைவேண்டல் :
வல்லமையுள்ள இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் நற்செய்தியின் வழியாக விண்ணகத் தந்தையைப் போற்றி புகழத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment