உதவி செய்யக் கற்றுக்கொள்வோமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் ஒன்பதாம் திங்கள்
அன்னை மரியாள் எலிசபெத்தம்மாளை சந்தித்த விழா 

I: உரோ:12: 9-16; II: எசா: 12: 2-3, 4bcd, 5-6; III : லூக்: 1: 39-56

சிவகங்கை மறைமாவட்டத்தின் நிர்வாகித் தந்தையாகப் அருட்பணி செய்த அருட்பணியாளர் பாக்கியநாதன் அவர்கள் கொரோனா என்ற தீநுண்மியின் காரணமாக ஒரு சில தினங்களுக்கு முன்பாக விண்ணகப் பிறப்பு அடைந்துள்ளார். அவரின் மறைவு தமிழகத் திருஅவைக்கு மிகப்பெரிய இழப்பு. இருந்தபோதிலும் அவர் விட்டுச்சென்ற வாழ்வியல் மதிப்பீடுகள் ஏராளம். ஒரு அருள்பணியாளராக இருந்து கொண்டு பற்பல மக்களுக்கு உதவிகள் பல செய்தவர். இவரால் வாழ்வில் முன்னேற்றம் கண்டவர்கள் ஏராளம். தேவையில் உள்ளவர்களுக்கு உதவி செய்வது இவருடைய இயல்புகளில் ஒன்றாகும். உளவியல் பிரச்சனையால் துன்பப்பட்டு வந்த எண்ணற்ற மக்களுக்கு ஆற்றுப்படுத்துதல் பணிசெய்து,  அவர்களின் வாழ்வை வளமாக்கினார். இறை அனுபவத்தைப் பெற வேண்டும் என்று ஆன்மீகத் தாகத்தோடு தங்கள் தேடலைத் தேடிய எண்ணற்ற மக்களுக்கு ஆன்மிக தாகத்தை தான் நிறைவேற்றும் திருப்பலியின் வழியாகவும் தன்னுடைய பாடலின் வழியாகவும் கருத்துச் செறிவு மிக்க மறையுரையாலும் வழங்கினார். இதன் வழியாக மக்கள் ஆன்மீகத்தில் வளம் பெற உதவி செய்தார்.  பொருளாதர வசதி இல்லாமல் துன்பப்பட்ட எண்ணற்ற மக்களுக்கு புது வாழ்வை வழங்கினார்.  குறிப்பாக ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வியைக் கொடுத்து,  அதன்வழியாக வேலைவாய்ப்பை பெற்று சீரோடும் சிறப்போடும் அவர்கள்  வாழ்ந்திட உதவி செய்தார். திறமையானவர்களைக் கண்டறிந்து அவர்கள் திறமையை வெளிக்கொணர உதவி செய்து உற்சாகப்படுத்தினார். இவர் உருவாக்கிய பல நபர்களில் கிராமப்புற பின்னணி பாடகி சின்னப்பொண்ணு அவர்கள் மிகச் சிறந்த உதாரணம். திரைப்பட நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு அவர்கள் முதன்முதலாக மேடை ஏறி பாட வாய்ப்பு கொடுத்தது இந்த அன்பு தந்தைதான். அவரின் பாடல் திறமையை இந்த உலகிற்கு வெளிக் உணர்ந்ததும் இந்த அன்பு தந்தையே ஆவார் . இவ்வாறாக பல்வேறு நபர்களுக்கு உதவி செய்து உயர்ந்தவராக மாற்றியுள்ளார். அவர் நம்மை விட்டு பிரிந்தாலும் அவர் வாழ்ந்த புனிதத்துவ வாழ்வு இந்த மண்ணுலகில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. உதவி செய்வதில் தான் உண்மையான கடவுளின் சாயல் இருக்கின்றது.

நம்முடைய அன்றாட வாழ்வில் பிறருக்கு உதவி செய்கின்ற பொழுது நாம் அவர்களுக்குக் கடவுளாக தெரிவோம். உதாரணமாக சாலையோரத்தில் உண்ண உணவில்லாமல் இரண்டு நாட்களுக்கு மேலாக இருக்கக்கூடிய நபருக்கு நாம் உணவு கொடுக்கின்ற பொழுது நாம் அவர்களுக்கு கடவுளாக மாறுகின்றோம். உதவி செய்வது மனித இயல்பு .அதுவும் குறிப்பாக எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்வது இறைத் தன்மையாகும். இன்றைய நாளில் அன்னையாம் திருஅவை  அன்னை மரியா எலிசபெத்தை  சந்தித்த விழாவை நாம் கொண்டாடி மகிழ்கின்றோம்.

"வாழ்வது ஒரு முறை ; வாழ்த்தட்டும் தலைமுறை " என்ற பழமொழியை ஆய்வு செய்து பார்த்தால் இதன் மதிப்பீடுகளை அன்னை மரியாவின் வாழ்வில் காண முடியும். அன்னை மரியாள் பெண்ணாக இருந்தாலும் ஆணாதிக்க சிந்தனை கொண்ட யூத  சமூகத்தில் துணிச்சலோடு கடவுளின்  திருவுளத்தை ஏற்றுக்கொண்டார்.மே மாதம் முழுவதும் அன்னை மரியாவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட மாதம். இந்த அன்பு அன்னை உலகம் மீட்புப் பெற கடவுளின் மகனையே இவ்வுலகிற்கு கொண்டுவர தன்னையே கொடுத்து உதவி செய்தார். கருவுற்ற பிறகு வயதான எலிசபெத் அம்மாளுக்கு உதவி செய்ய விரைந்து சென்றார். தேவையில் இருப்பவளுக்கு உதவி செய்வதுதான் உண்மையான இயல்பு.  

எலிசபெத் அம்மாளின் அன்பும் பாசமும் அன்னை மரியாவை மிகவும் ஈர்த்தது.அன்னை மரியாவும் எலிசபெத் அம்மாளுக்கு தன்னுடைய அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தினார். ஆண்டவரின் தாய் என்று தன்னையே அன்னை மரியாவின் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அன்னை மரியாள் அந்த பெருமை எல்லாம் பொருட்படுத்தாமல், முழு இதயத்தோடும் முழு ஆற்றலுடன் உதவி செய்தார். இப்படிப்பட்ட உதவி செய்யும் மனப்பான்மை நம் அனைவருக்கும் இருக்க வேண்டும்.

நம்முடைய கிறிஸ்தவ வாழ்வைச் சிறப்பாக வாழ அன்னை மரியாவை போல தேவையில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய அடைக்கப்பட்டுள்ளோம். நாம் வாழும் இந்த சமூகத்தில் எத்தனையோ நபர்கள் உதவி வேண்டி ஏங்கித் தவிக்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டுகொண்டு உதவி செய்யும் பொழுது நாமும் அன்னை மரியாவின் வாழ்வியல் பாடத்தை கற்றுக் கொள்ள முடியும்.  இந்த காலகட்டத்தில் எண்ணற்றோர் தலைவர்களாக மேதைகளாக சாதனையாளர்களாக இருக்க காரணம் அவர்களுக்குப் பிறர் செய்த உதவியே ஆகும்.

நாம் வைத்திருக்கும் செல்வமும் பணமும் நிலையற்றது. ஏனெனில் செல்வமும் பணமும் அழிந்து போகும். ஆனால்  நாம் செய்கின்ற பிறர் நலப் பணி,  தான் உண்மையான நற்செய்தி  மதிப்பீட்டு வாழ்விற்கு சான்று பகர்கின்றது. உதவி செய்வதில் தான் உண்மையான பேரானந்தம் இருக்கின்றது. இத்தகைய ஆனந்தத்தை முழுமையாக சுவைத்தவர் நம் தாய் அன்னை மரியாள். அன்னை மரியாளைப் போல பிறருக்கு உதவி செய்ய கற்றுக்கொள்வோமா!

இறைவேண்டல் :
அன்பான இறைவா !நீர் எங்களுக்குக் கொடுத்த வாழ்விற்காக  நன்றி செலுத்துகின்றோம். உம்மிடம் பெற்ற நன்மைகளை பிறருக்கும் கொடுக்கத் தேவையான நல்ல மனநிலையைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

1 + 1 =