ஏன் இப்படி நடக்கிறது?


வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான யூதர்கள் ஹிட்லரால் கொல்லப்பட்ட காலத்தில், அத்தகைய துன்பங்களிலிருந்து தப்பிப் பிழைத்த மக்களை சந்தித்து வாழ்க்கையின் அர்த்தத்தையும் மனதிற்கு வலிமையையும்  ஊட்டி, மனதில் தானாக முடிவு செய்யும்வரை சாவு கூட எனக்கு தோல்வி இல்லை என புது நம்பிக்கை  ஊட்டியவர்கள் பலர். அவர்களில் ஒருவர்தான் விக்டர் பிராங்கிள். அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். 

அந்தப் பகுதியில் மிக அன்னியோன்யமாக வாழ்ந்து கொண்டு வந்த ஒரு முதிர்ந்த  தம்பதியில் ஒரு நாள் அந்த தாத்தா இறந்து விட்டார். அந்த இறந்த வீட்டுக்கு விக்டர் பிராங்கிள் சென்றிருந்தார். எல்லோரும் எவ்வளவு சொல்லியும் அந்த பாட்டி அந்த தாத்தாவை குறித்து விடாமல் அழுது கொண்டே இருந்தார்கள். இதனால் பாட்டிக்கு கூட உடல்நலக்குறைவு ஏற்பட்டுவிடுமோ என பார்ப்போர் மனதில் எல்லாம் மிக  கவலையை ஏற்படுத்தியது.  இதை கவனித்துக் கொண்டிருந்த விக்டர் பிராங்கிள், பாட்டியின் பக்கத்தில் சென்று அவர்களின்  தோள்மீது கை  வைத்தார்.  இப்போது அந்த பாட்டி இன்னும் சத்தமாக அழ ஆரம்பித்தார்.  அழுதுகொண்டே விக்டர் பக்கமாகத் திரும்பி,  “இங்க பாரு விக்டர் அவரு போய் சேர்ந்துட்டாரு எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது.  அவருக்கு பதிலாக அந்த சாமி என் உசுர எடுத்து இருக்கலாமே” என்று கூறிக்கொண்டே கதறி அழுதார்கள்.   பாட்டி அழுவதை பார்த்துக்கொண்டே இருந்த விக்டர் பிராங்கிள்,  மெதுவாக, “ஒருவேளை நீங்கள் சொன்னது போல கடவுள் உங்களுடைய உயிரை  எடுத்திருந்தால் இந்த இடத்தில் தாத்தா  உட்கார்ந்து உங்களை போல அழுது  கொண்டிருப்பார்கள்  அது உங்களுக்கு பரவாயில்லையா”  என்று கேட்டார்.  இதைக் கேட்டவுடன் ஒரு நிமிடம் அதிர்ந்து போன  பாட்டி தன் அழுகையை நிறுத்திவிட்டு விக்டர் பிராங்களின் முகத்தை உற்றுப் பார்த்தார்.  இப்போது  தொடர்ந்த விக்டர் பிராங்கிள்,  “நீங்களே இவ்வளவு கஷ்டப் படறீங்க, நீங்க இறந்து போயிருந்தால் தாத்தா எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்” என்று சொன்னார். உடனே பாட்டி “ஐயோ, அவர்  அழுவதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியாது” என்று சொல்லிக்கொண்டே தன் கண்ணீரைத் துடைத்தார்.  “அதனால்தான் பாட்டி கடவுள் சீக்கிரமாக உங்களுக்கு முன்னாலே எடுத்துக்கொண்டார்.” என்று சொன்னார். 

 ஒரு துன்பம்  வருகிற போது,  “ஐயோ,நான்  மட்டும்  ஏன்  கஷ்டப்படுகிறேன், எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது” என்ற வழக்கமான பாணியில் சிந்திப்பதை விட்டுவிட்டு நாம் மாற்றுக் கோணத்தில் சிந்திக்க வேண்டும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு அருமையான உதாரணம். 

நான் பெங்களூரில் படித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு  மாற்றுத்திறனாளியினுடைய பெற்றோர்  என்னோடு பகிர்ந்து கொண்ட வார்த்தைகள் என்றும் மறக்க முடியாதவை.  “தம்பி,  கடவுளுக்கு, எங்கள் மேல்  எவ்வளவு அன்பு இருந்தால் இந்த குழந்தையை பராமரிப்பதற்கு எங்களை  தேர்ந்தெடுப்பார்.  நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்”. இப்படிப்பட்ட எண்ணங்கள் குறிப்பாக துன்ப காலங்களில் நமக்கு தோன்றுவதில்லை எனவேதான் பல வேளைகளில் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று சொல்லி நம்  துன்பத்திற்கான காரணமாக கடவுளை நோக்கி எளிதாக கரம் நீட்டி விடுகிறோமே!

அருட்தந்தை மரிய  அந்தோணி ராஜன் sdc

உரோம்,இத்தாலி ...

 

Add new comment

6 + 0 =