இயேசுவின் பெயரால் தந்தையிடம் கேட்போம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம் - ஆறாம் சனி; I: திப: 18: 23-28; II: தி.பா: 47: 1-2. 7-8. 9 ; III : யோவான்: 16: 23b-28

சமூகத்தில் ஒருசில முக்கியமானவர்களின் பெயர்களைப் பயன்படுத்தி நாம் காரியங்கள் சாதிப்பதுண்டு. அதுவும் இன்றைய காலகட்டத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் இடம் வாங்குவதற்குக் கூட அதிகாரம் படைத்தவர்கள் ,அந்தஸ்து மிக்கவர்களின் பெயரையும் பரிந்துரையையும் பயன்படுத்த வேண்டிய கட்டாயச் சூழ்நிலை உருவாகியுள்ளதை நாம் அனைவரும் அறிவோம். அப்படி பரிந்துரைக் கடிதங்கள் வாங்கும் போது "நீங்கள் என் பெயரைச் சொல்லுங்கள்.  எல்லாம் தானாக நடந்துவிடும் " எனக் கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் உண்மையான பலம் அவர்கள் பெயரில் அல்ல. மாறாக அவர்களின் பணத்திலும் பதவியிலும் தான். அவை இல்லாமல் போகும் போது அவர்களும் இல்லாமல் போவார்கள். ஆனால் இறைமகன் இயேசுவின் பெயரின் வல்லமை அவ்வாறல்ல.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் "என் பெயரால் நீங்கள் கேட்பதையெல்லாம் தந்தை உங்களுக்கு அருள்வார்" என இயேசு கூறுவதைத் தியானிக்கிறோம். இயேசுவின் பெயருக்கு  வல்லமை உள்ளது.இதற்கு சில விவிலியச் சான்றுகளை நாம் காணலாம்.

புனித பேதுருவும் யோவானும் தொழுதுவதற்கு  கோவிலுக்குச் செல்லும் போது பிச்சையெடுத்துக்கொண்டிருந்த முடக்குவாதமுற்றவரை நோக்கி
பேதுரு “வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்” என்று கூறி,
அவரது வலக்கையைப் பற்றிப் பிடித்துத் தூக்கிவிட்டார்கள். உடனே அவரது காலடிகளும் கணுக்கால்களும் வலுவடைந்தன ." என திருத்தூதர் பணிகள் (3:6-7) ல் நாம் வாசிக்கிறோம்.

 புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதிய மடலில்
(2-9) "கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்" என்று கூறுகிறார்.

நாமும் நம்முடைய தனிச்செபங்களிலும், திரு அவையின் வேண்டல்களிலும் இயேசுவின் பெயரால் கேட்டவை நிறைவேறிய அனுவங்களை பட்டியலிட்டுக் கூறலாம். அவ்வனுபவங்கள்  நம்முடைய நம்பியை இன்னும் அதிகமாக ஆழப்படுத்தியதையும் நம்மால் மறுக்க இயலாது. அதே நம்பிக்கையோடு மீண்டுமாய் இயேசுவின் பெயரால் நம் விண்ணகத் தந்தையிடம் கேட்போம்.

எங்கு பார்த்தாலும் மரண பயம். இறப்புச் செய்திகள். கொரோனாவின் கோரப்பிடியில் நம் நாடு அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நம்பிக்கையோடு நம் இயேசுவின் பெயரால் நம் நாட்டு மக்கள் அனைவரையும் குணமாக்க இறைத் தந்தையை இறைஞ்சுவோம்.

இறைவேண்டல்

இரக்கம் மிகுந்த தந்தையே இயேசுவின் பெயரால் கேட்கிறோம். எங்களைக் காத்தருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

2 + 2 =