நமது பிறப்பின் நோக்கத்தை உணர்ந்து வாழ்வோம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலத்தின் பனிரெண்டாம் வியாழன்
I: எசா 49:1-6
II  :திபா 138:1-3,13-15
III : தி.ப 13:22-26
IV: லூக் 1:57-66,80

பிறப்பும் இறப்பும் அனைவருக்கும் பொதுவானது. ஆனால் இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் நாம் வாழும் வாழ்வைக் கொண்டே பிறர் நாம் இறந்த பின்னும் நம் பிறப்பையும் வாழ்வையும் கொண்டாடுவர். தன் பிறப்பின் நோக்கத்தை உணர்ந்து அதை வாழ்ந்து காட்டிய பலர் இன்றும் மாமனிதர்களாகப் போற்றப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றனர். அவ்வாறாகத் திருஅவையிலும்  இறைதிருஉளத்தை அறிந்து வாழ்ந்து இறந்த பலரின் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாக்களில் பெரும்பாலனவை விண்ணகப்பிறப்பு என்றாலும் மூன்று பேருடைய மண்ணகப் பிறப்பும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அம்மூவரும் உலகின் மீட்பர் இயேசு, இயேசுவின் தாய் அன்னை மரியா மற்றும் இயேசுவுக்காய் பாதையை செம்மையாக்க வந்த திருமுழுக்கு யோவான். 

இன்று நமது தாய் திருஅவையானது திருமுழுக்கு யோவானின் பிறப்பைக் கொண்டாடுகிறது. திருமுழுக்கு யோவான் கடவுளால் முன்குறித்து வைக்கப்பட்டவர் என்பதற்கு அவருடைய பிறப்பே ஒரு சான்றாகும்.  ஆம் சக்கரியா எலிசபெத் தம்பதியருக்கு மிகவும் முதிர்ந்த வயதில் அதாவது அறிவியலும் மருத்துவமும் இயலாத காரியம் என்று எண்ணுகிற வயதில் கடவுளால் வானதூதர் வாயிலாக வாக்களிக்கப்பட்டுப் பிறந்தவரே யோவான். யோவான் என்ற பெயருக்கு "கட வுளின் அருள் " "Graced by God" என்பது பொருள். அப்பெயருக்கு ஏற்ப யோவான் கடவுளின் அருளாலும் வல்லமையாலும் நிறைந்தவராய் இருந்தார். அவர் பிறப்பிலேயே "இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?" என பலர் அச்சம் கொண்டனர் என்பதை இன்றைய நற்செய்தி கூறுகிறது.

திருமுழுக்கு யோவான் இயேசுவுக்கு முன்னோடியாகவே தான் வந்திருப்பதை முற்றிலும் உணர்ந்தவராய் இருந்தார். உண்மையை உள்ளவாறு எடுத்துக் கூறினார். "நான் தான் மெசியா " என்று கூறிக்கொண்டு போலிப் பிரச்சாரம் செய்து தனக்குப் பின் கூட்டம் சேர்க்கவில்லை அவர். மாறாக தன்னைப்பற்றி கேட்பவர்களிடம் தான் மெசியா அல்ல என்பதைப் பகிரங்கமாக எடுத்துரைத்தார். மெசியாவுக்கு முன் தான் ஒன்றுமில்லை. அவரின் மிதியடிவாரை அவிழ்க்கக் கூட தான் தகுதியற்றவன் என தன்னைத் தாழ்த்திக்கொண்டார்.

தவறு செய்பவர் யாராயிருந்தாலும் அது நாட்டை ஆளும் அரசராகவே இருந்தாலும் துணிச்சலாக அத்தவறை சுட்டிக்காட்டினார். அவரின் வாழ்வையும் போதனையையும் கண்டு மனம் மாறி பாவமன்னிப்புக்கான திருமுழுக்கைப் பெற்றவர்கள் ஏராளமானோர் என நாம் விவிலியத்தில் வாசிக்கிறோம்.

திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் இந்நாளில் நமது பிறப்பையும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வையும் எண்ணிப் பார்க்க வேண்டும். நமது வாழ்வுக்கு இறைவன் வகுத்துள்ளத் திட்டத்தை உணர்ந்து வாழ்கிறோமா? என சோதித்து இறைவனை நோக்கிய நமது வாழ்வுப் பாதையை செம்மையாக்குவது நமது கடமை. உண்மை, நீதி, தாழ்ச்சி, துணிச்சல் போன்ற திருமுழுக்கு யோவானின் பண்புநலன்களை நம்மிலே வளர்த்துக்கொண்டு நமது பிறப்பின் நோக்கத்தை உணர்ந்து வாழ கடவுளின் அருளை வேண்டுவோம்.

இறைவேண்டல்

இறைவா! நீர் எமக்களித்துள்ள இவ்வாழ்வை உமது விருப்பப்படி வாழ்ந்து எம் பிறப்புக்கு மேன்மை சேர்க்க வரம் தாரும்.  ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

5 + 0 =