இறைஉறவில் நிலைத்திருப்போமா? | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம் -ஆறாம் ஞாயிறு; I: திப: 25-26, 34-35, 44-48; II: தி.பா: 98: 1, 2-3, 3-4; III: 1 யோ: 4: 7-10; IV: யோவான்: 15: 9-17
.
வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த தன் தந்தையிடம், மகளானவள் பாசத்தோடு வந்து அமர்ந்து தனக்குப் பிடித்தமான ஒரு பொருளை வாங்கித்தருமாறு கேட்டாள். உடனே தந்தை தன் மகளை பாசத்தோடு அணைத்து "நான் சொல்வது போல நீ செய்தால் தான் வாங்கித் தருவேன் "என்றார். உடனே "சொல்லுங்கப்பா" என்று ஆர்வத்தோடு கேட்ட மகளிடம் "அப்பா அம்மா சொல்வதைக் கேட்டு நல்ல பிள்ளையாக இருக்கணும். நல்லா படிச்சு முதல் மதிப்பெண் வாங்கணும். எப்பவும் அப்பாவோட செல்ல பிள்ளையா இருக்கணும். அப்படி இருந்தால் உனக்குபிடித்ததை நான் செய்வேன் " என்றாராம். வேகமாக சிரித்த முகத்துடன் தலையாட்டினாள் மகள்.

ஆம். அன்புக்குரியவர்களே நாம் எல்லோருமே நமது தாய் தந்தையரிடமிருந்து இவ்வகை அனுபவங்களைப் பெற்றிருப்போம். நம்மை நல்வழிப்படுத்தவும் நாம் வாழ்வில் முன்னேறவும் அவர்கள் தங்கள் அன்புக் கட்டளைகளாலும் அறிவுரைகளாலும் இன்றுவரை நம்மை வழிநடத்திக்
கொண்டிருக்கிறார்கள். இது நாம் மறுக்க முடியாத ஒரு உண்மை.

இத்தகைய ஒரு தந்தைக்குரிய மனநிலையில் தான் இயேசுவும் " என் கட்டளைகளைக் கடைபிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்" எனக் கூறுகிறார்.
அன்றைய இஸ்ரயேல் மக்கள், ஆண்டவர் மோசே வழியாக அளித்த கட்டளையைக் கடைபிடிப்பதில் கருத்தாய் இருந்தனர். ஏனேனில் அக்கட்டளைகளை அவர்கள் இறைவனோடு கொண்டுள்ள உறவில் நிலைத்திருக்க உதவக்கூடிய வழிமுறையாய்க் கருதினர்.

புதிய இஸ்ரயேலராகிய நாமும் இறைவனோடு உள்ள உறவில் நிலைத்திருக்க இயேசு அழைக்கிறார். இயேசு அதற்கான வழிமுறையையும் நமக்கு வகுத்துத் தருகிறார். அன்பு வாழ்வே அவ்வழிமுறை.

இன்றைய இரண்டாம் வாசகத்திலும் அன்பைப் பற்றி தூய யோவான் எடுத்துரைக்கிறார்.
அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செய்வோரும் கடவுளிடமிருந்தே வருகின்றனர். அவ்வாறெனில் நாம் கடவுளோடு அன்புறவில் நிலைத்திருந்தால் மட்டுமே சக மனிதருக்கும் அன்பு செலுத்த முடியும். சக மனிதருக்கு அன்பு செலுத்த வேண்டுமென்பது
தான் இயேசு நமக்குத் தரும் கட்டளை. இக்கட்டளையை நிறைவேற்றி நாம் அன்புறவில் வாழும் போது நமது வாழ்வு கனிகொடுப்பதாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும், அமைதி நிறைந்ததாகவும் இருக்கும். நாமும் கடவுளோடு உள்ள உறவில் ஆழப்பட முடியும். எனவே இறையுறவில் நிலைத்திருக்க அன்பு வாழ்வு வாழ்வோம். அதற்கான இறையருள் வேண்டுவோம்.

இறைவேண்டல்

அன்பு இறைவா நாங்கள் உமதன்புக் கட்டளையைக் கடைபிடித்து உம்மோடும் பிறரோடும் உறவில் வளர்ந்து அதில் நிலைத்திருக்க வரம் தாரும்.  ஆமென்.

Add new comment

1 + 4 =