இயேசுவோடு இணைந்திருப்போமா! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம் -ஐந்தாம் புதன்; I: திப: 15: 1-6; II: தி.பா: 122: 1-2, 3-4ab, 4cd-5; III : யோவான்: 15: 1-8

ஒரு பங்கிலே நம்பிக்கையாளர் ஒருவர் பங்குத் தந்தையிடம் " தன்னு டைய பிரச்சினைகளிலிருந்து மீண்டும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் " என்று சொன்னார். அப்பொழுது பங்குதந்தை " நீர் போய் அமைதியாக ஆலயத்தில் ஒரு மணி நேரம் உட்கார் " என்று கூறினார். உடனே அந்த மனிதரும் பங்கு தந்தையின் வழிகாட்டுதலின்படி ஒரு மணிநேரம் ஆலயத்தில் அமர்ந்திருந்தார். அந்த ஒரு மணி நேரமும் இடைவிடாது இறைவேண்டல் செய்தார். சிறிது நேரம் கழித்து அவருக்கு ஒருவிதமான மன அமைதி கிடைத்தது. அப்போதுதான் அந்த மனிதர் புரிந்துகொண்டார் "மன அமைதி என்பது இயேசுவோடு இணைந்து இருப்பதன் மூலமே பெறமுடியும். இத்தகைய ஆழமான சிந்தனையைத் தான்    இன்றைய நற்செய்தி நம்மைச் சிந்திக்க அழைப்பு விடுக்கின்றது.

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தன்னைத் திராட்சை கொடியாகவும் அவரின் பிள்ளைகளாகிய நம்மை அவரோடு இணைந்திருக்கும் கொடிகளாகவும்  வாழ அழைக்கிறார்.

நாம் இயேசுவோடு இணைந்திருந்தால் மட்டுமே  மிகுந்த கனி கொடுக்க முடியும். இயேசுவோடு உடனிருந்தவர்கள் வாழ்வில் மிகுந்த பலனைக் கொடுத்தனர். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் அன்னை மரியாள்.  அன்னை மரியாள் இயேசுவை கருவில் சுமந்த நாள் முதல் கல்லறை அவரைச் சுமக்கும் நாள்வரை அவரோடு இணைந்து மீட்புத் திட்டத்திற்கு பெரும் உதவி செய்தார். எனவே அன்னை மரியாள் இயேசுவின் வழியாக மிகுந்த கனி தந்தார். அன்னை தெரசா தன்னுடைய ஒவ்வொரு நாள் ஒரு மணிநேர செபத்தின் வழியாக இயேசுவோடு உடனிருந்தார். எனவேதான் அவரால் மிகச்சிறந்த மனிதநேய பணிகளைச் செய்ய முடிந்தது.  கத்தோலிக்கத் திருஅவையின் எண்ணற்ற மறைசாட்சிகள் இயேசுவோடு இணைந்தவர்களாய் இருந்துள்ளனர்.    அவர்களை திருஅவை உயர்த்தி  பார்க்கின்றது. ஏனெனில் அவர்கள் அனைவரும் இயேசுவோடு உடனிருந்து வாழ்வில் துன்பத்தையும் தாண்டி வெற்றி கண்டவர்கள்.

நம்முடைய அன்றாட வாழ்விலும் இயேசுவோடு இணைந்து வாழ்ந்தோம் என்றால், வாழ்வில் வெற்றி அடைய முடியும். இக்கட்டான சூழலில் கூட  கிறிஸ்தவ வாழ்வு  ஆழமாக வேரூன்ற வேண்டும் என்றால் இயேசுவோடு உடனிருக்க வேண்டும். துன்பங்களையும் இடையூறுகளையும் வாழ்வில் சந்திக்க  வேண்டுமெனில் இயேசுவோடு உடனிருக்க வேண்டும் . எனவே இயேசுவோடு உடனிருந்து வாழ்வின் பல நற்பண்புகளை நமதாக்க முயற்சி செய்வோம்.

இறைவேண்டல் :
வல்லமையுள்ள அன்பு ஆண்டவரே!  நாங்கள் உம்மோடு எந்நாளும்  இணைந்திருந்து வாழ்வில் பல நன்மைகளைச் செய்து நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
சிவகங்கை மறைமாவட்டம்

Add new comment

3 + 0 =