தந்தைக் கடவுளால் ஈர்க்கபட்டுள்ளதை உணர்வோமா! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம் -மூன்றாம் வியாழன்
I: திப:8:26-40
II: தி.பா: 65:8-9,16-17,20
III : யோவான் 6 :  6:44-51

தந்தைக் கடவுளால் ஈர்க்கபட்டுள்ளதை உணர்வோமா!

நான் சிறுவனாய் இருந்த போது எங்கள்  ஊர்த்திருவிழாயொட்டி திரைகட்டி ஒரு பிரபலமான நடிகரின் திரைப்படம் போட்டுக் காட்டினார்கள். அப்போது தொடக்கத்தில் அந்நடிகரைக் காண்பித்த உடன் தீடீரென நான்கைந்து பேர் முன்னால் வந்து சூடம் காட்டினர். அந்த வயதில் எனக்கு அது வினோதமாகத் தெரிந்தது. இப்பொழுதும் கூட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் ரசிகர் மன்றங்கள் உள்ளன. அவர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது பாலாபிஷேகம் செய்வோர் கூட உண்டு. எதற்காக இதெல்லாம்? அந்த நடிகரைச் சார்ந்த ஏதோ ஒன்று அந்த ரசிகர்களை ஈர்க்கின்றது. ஈர்க்கப்பட்டவர்கள் "தலைவர்" என்று சொல்லிக்கொண்டு கடவுளைவிட மேலாகவே அவர்களை ஆராதிக்கின்றனர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் "
என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்." என்று இயேசு கூறுகிறார். தந்தையால் ஈர்க்கப்பட்டவர்கள் தான் இயேசுவிடம் வந்தனர். சீடர்கள்,அவருடைய போதனையைக் கேட்க அவரிடம் வந்த பெருந்திரளான மக்கள் ,குணம் பெற்றவர்கள் எல்லோருமே தந்தையாம் கடவுளால் ஈர்க்கப்பட்டவர்கள். அதே வரிசையில் திருமுழுக்கு பெற்ற கிறிஸ்தவர்களாகிய நாம் எல்லோருமே தந்தையாம் கடவுளால் ஈர்க்கப்பட்டுள்ளோம். சுழலுகின்ற பூமி தன் ஈர்ப்பு விசையால் அனைத்தையும் தன்னகத்தே வைத்துக்கொள்கிறது. அதேபோலவே கடவுள் தன் அன்பென்ற ஈர்ப்புவிசையால் இயேசுவின் மூலம் நம்மையெல்லாம் தன்னோடு வைத்துக்கொள்ள விரும்புகிறார். நம்மை இழக்க அவர் விரும்பவில்லை.

ஆனால் பல நேரங்களில் நாம் கடவுளால் ஈர்க்கப்பட்டவர்கள் என்ற நிலையை மறந்து போகிறோம். உணராமல் இருக்கிறோம். இதன் விளைவாகத்தான் நாம் உலகத்தால் ஈர்க்கப்பட்டு பல சமயங்களில் அழிவின் பாதைக்குச் சென்றுவிடுகிறோம்.

கடவுளால் ஈர்க்கப்பட்டதை நாம் உணர்ந்து அவரருகில் செல்லும் போதுதான் மற்றவர்களை கடவுள் பால் நாமும் ஈர்க்க முடியும். இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் பிலிப்பு தன்னுடைய போதனையால் எத்தியோப்பிய அலுவலரை இயேசுவின் பால் ஈர்த்து திருமுழுக்குக் கொடுத்தார் என வாசிக்கிறோம்.எனவே நாம் கடவுளால் ஈர்க்கப்பட்டதை உணர்ந்து நம்முடைய அன்பான சாட்சிய வாழ்வால் பலமக்களை கடவுளிடம் கொண்டு வர வரம் கேட்போம்.

இறைவேண்டல்

எங்களை உம் அன்பால் ஈர்த்தவரே நாங்கள் இதை உணர்ந்து பிறரை எம் சாட்சிய வாழ்வால் உம்பால் ஈர்க்க வரம் தாரும். ஆமென்.

Add new comment

3 + 13 =