மீண்டும் மீண்டும் தன் அழைப்பை உறுதிப்படுத்தும் இறைவன்! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


பாஸ்கா காலம்-முதலாம் வெள்ளி
I: திப: 4:1-12
II: தி.பா: 118: 1-2,4. 22-24. 25-27a 
III : யோவான் 21: 1-14

 

இன்றைய நற்செய்திப் பகுதி நம்மை இறைவன் தேடி வந்து அழைக்கிறார். மீண்டும் மீண்டும் அவருடையவர்களாக வாழ அழைக்கிறார் என்ற செய்தியை உறுதிப்படுத்துவதாய் இருக்கிறது.

லூக்கா நற்செய்தியில் 5 ஆம் அதிகாரத்தில் இயேசு தனது பணிவாழ்வின் தொடக்கத்தில் முதல் சீடர்களை அழைத்த நிகழ்வை வாசிக்கிறோம். இரவெல்லாம் பாடுபட்டும் மீன்பாடு இல்லை என வருத்தத்தோடு கூறிய சீமோனிடம் ஆழத்தில் வலைவீசச் சொன்னார் இயேசு. மீன் அதிகமாகக் கிடைத்ததைக் கண்ட பேதுரு "ஆண்டவரே நான் பாவி. என்னை விட்டுப் போய்விடும் "என்ற கூறிய போதும் அவரைத் தன் தலைமைச் சீடனாக உருவாக்கினார் இயேசு. தன்னைப் பின்தொடர அழைத்தார்.

இன்றைய நற்செய்தியிலும் இதையொத்த நிகழ்வைத்தான் நாம் வாசிக்கிறோம். ஆனால் இப்பொழுதோ பேதுரு இயேசுவின் இறப்புக்குப் பின் தலைமைச் சீடனுக்குரிய வலுவிழந்து தன்னுடைய பழைய வாழ்க்கையைத் தொடர நினைத்து மீண்டும் மீன் பிடிக்கச் சென்றார். அங்கே உயிர்த்த இயேசு அவருக்குத் தோன்றி தன்னுடைய முதல் அழைப்பை மீண்டுமாக சீமோனுக்கு நினைவு படுத்துகிறார்.அதனால் மீண்டும் வலுப்பெற்று இயேசுவுக்கு சான்றுபகர்வதையும் இயேசுவைக் கொன்ற யூதர்களிடம் துணிவுடன் பேசுவதையும் முதல் வாசகத்தில் நாம் காண்கிறோம்.

நாம் அனைவருமே இயேசுவின் வழிநடக்க அழைக்கப்பட்டுள்ளோம். அவ்வாறு நாம் முயற்சிகள் மேற்கொள்ளும் வேளைகளில் பல தடுமாற்றங்கள் ஏற்படும். மேலே ஏறமுடியாமல் தொடங்கிய இடத்திற்கே திரும்பிச் சென்று நம்மையே பாதுகாத்துக் கொள்ள நினைத்து தளர்ந்த மனநிலையோடு முடிவுகளை எடுக்கின்றோம். நமக்கு வழிகாட்டும் இறைவனையும் நம்மோடு நடந்தவர்களையும் மறந்து அனைவரின் முயற்சிகளையும் வீணாக்கி விட்டு பழைய பழகிய வாழ்வைத் தொடர விழைகிறோம். ஆனால் இயேசு நம்மை அப்படியே விட்டுவிடுவதில்லை. அவர் நமக்குக் கொடுத்த அழைப்பை மீண்டும் நினைவூட்டுகிறார். சீமோன் ஆடையின்றி இருந்ததைப் போல நாமும் அனைத்தையும் இழந்து வெறுமையாய் உணரும் வேளையில் தன்னுடைய அழைப்பு எனும் ஆடையை மீண்டும் உடுத்துகிறார் இயேசு. இயேசுவின் அழைப்பை உணர்ந்தவர்களாய் நம்முடைய இயலாமையைப் பொருட்படுத்தாமல் அவர் பின் தொடர்ந்து செல்ல முடிவெடுப்போம்.

இறைவேண்டல்.

அழைத்தலின் நாயகனே! உம்முடைய அழைப்பை மறந்து பழைய வாழ்க்கைக்குள் செல்லும் நேரங்களில்  மீண்டுமாய் உம் அழைப்பை நினைவூட்டி உம்மைப் பின் தொடர அருள் தாரும். ஆமென்.

Add new comment

3 + 13 =