Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
துயரத்தில் இருப்போரின் உடனிருந்து தேற்றுவோமா? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection
பாஸ்கா காலம்-முதலாம் புதன்
I: திப: 3:1-10
II: தி.பா 105: 1-2. 3-4. 6-7. ,8-9
III: லூக்கா: 24: 13-35
துயரத்தில் இருப்போரின் உடனிருந்து தேற்றுவோமா?
ஒரு நாள் நள்ளிரவில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் தன் நண்பனிடமிருந்து ராஜாவுக்கு அழைப்பு வந்தது. அந்நேரத்தில் அழைப்பு வந்தவுடன் பதறிய ராஜா நண்பனிடம் பேச ஆரம்பித்த பொழுது தன் நண்பனுக்கு ஏதோ பிரச்சினை எனப் புரிந்து கொண்டான். ராஜாவின் நண்பன் தன் வீட்டை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்துகொண்டிருந்தான். தனக்கு யாருமில்லை என்ற தனிமை உணர்வில் தன் வாழ்வை முடித்துக்கொள்ள எண்ணிய அவன் இறுதியாக நண்பனிடம் பேசலாம் என்று தன் நண்பனை அழைத்திருக்கிறான். அதை உணர்ந்த ராஜா இரவென்றும் பாராமல் உடனே தன் நண்பன் வீட்டுக்குச் சென்று அன்று முழுவதும் நண்பனோடு இருந்து அவனுக்கு ஆறுதல் கூறி வாழ்வில் நம்பிக்கை ஊட்டினான்.
அன்று தங்களுடைய குரு இயேசு யூதர்களால் கொல்லப்பட்ட பிறகு சீடர்கள் தாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்ற குழப்பத்தில் ஆழ்ந்து கவலையில் மூழ்கி இருந்தனர்.இயேசு உயிர்த்துவிட்டார் என்ற செய்தியை மகதலா மரியா உட்பட்ட சில பெண்கள் தெரிவித்த போதும் அதை சீடர்கள் நம்பவில்லை. இவ்வாறாக தங்கள் வாழ்வை எவ்வாறு தொடர்வது என்ற கவலையில் புலம்பிக்கொண்டே எம்மாவுஸ் சென்ற சீடர்களுடன் ஒரு வழிப்பொக்கன் போல இயேசு நடந்து சென்று, இறைத்திட்டத்தை திருநூலை மேற்கோள் காட்டி எடுத்துக்கூறுவதையும், தன்னை அப்பம் பிடுதல் வழியாக வெளிப்படுத்துவதையும் இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம்.
இயேசு சீடர்களின் நம்பிக்கையின்மையைச் சாடுகிறார். இருப்பினும் "எங்களோடு தங்கும்" என்ற அவர்களின் வேண்டுதலைக் கேட்கிறார்.
நாமும் நம்முடைய வாழ்க்கைச் சிக்கல்களில், வலுவிழந்த நேரங்களில் எங்களோடு தங்கும் என இயேசுவை அழைக்கும் போது அவர் நிச்சயமாக நம்மோடு உடனிருப்பார்.
இன்றைய முதல் வாசகத்தில் பேதுரு இயேசுவின் பெயரால் சுகமளிக்கும் நிகழ்வை வாசிக்கிறோம். பொன்னும் பொருளும் என்னிடமில்லை இயேசுவின் பெயரால் எழுந்து நட என்று கூறி பொன்னையும் பொருளையும் விட இயேசுவின் பெயர் வலிமை வாய்ந்தது என உணர்த்துகிறார்பேதுரு..இவ்வாறாக இயேசுவின் பெயரால் துன்புற்ற அம்முடக்கு வாதமுற்றவரின் உடனிருக்கிறார் பேதுரு.
எனவே நாமும் துயரத்தில் என்னோடு தங்கும் இயேசுவே என நம்பிக்கையோடு அவரை அழைப்போம்.இயேசுவைப் போல, பேதுருவைப் போல துன்புறுவோரின் உடனிருப்போம்.
இறைவேண்டல்
இறைவா! நீர் எங்களோடு இருப்பது போல நாங்களும் துயரருறுவோருக்கு உடனிருந்து தேற்ற வரம் தாரும். ஆமென்.
Add new comment