துன்பத்தின் வழி மீட்பின் காலமா? | | குழந்தை இயேசு பாபு | Sunday Reflection


தவக்காலம் - ஆறாம் வாரம் (குருத்து) ஞாயிறு - I. எசா: 50:4-7; II. திபா: 22: 7-8. 16-17. 18-19. 22-23; III. பிலி:  2:6-11; IV. மாற்: 14:1 - 15:47

ஒரு சிறுவன் மூளையில் கட்டியால் பாதிக்கப்பட்டிருந்தான். சிறுவன் என்பதால் அவனுக்கு அந்த நோயைப்பற்றி விளக்க இயலாத நிலை பெற்றோருக்கு ஏற்பட்டது. மேலும் அந்நோய்க்கான மருத்துவமும் மிகவும் கடினமானது என்பதையும், வலி மிகுந்தது என்பதையும் எவ்வாறு விளக்குவது என்று அறியாத மனநிலையில் பெற்றோரும் ஒருபுறம் மிகுந்த வேதனை அடைந்தனர். ஒரு நாள் அச்சிறுவனின் தாயானவள் அப்பையனை தன் மடியில் அமர வைத்து அவன் தலைமுடியை வருடிக்கொண்டே "என் செல்லமே உனக்கு சீக்கிரம் உடல் சரியாகிவிட அம்மா உனக்கு சிறந்த மருத்துவ முறையை ஏற்பாடு செய்துள்ளேன். அம்மருத்துவ முறை உன்னை குணமாக்கிவிடும். ஆனால் கொஞ்சம் அதிகமாக வலிக்கும். அவ்வாறு வலிக்கும் போது "நான் குணமாகிவிடுவேன். இதற்கு பின் எனக்கு வலிக்காது" என்று மனதில் நினைத்துக்கொண்டு வலியைத் தாங்கிக் கொள். நாங்கள் எல்லாரும் உன்னோடு இருக்கிறோம்" என்று கூறினார். அதை உள்வாங்கிக் கொண்டான் அச்சிறுவன். தன் தாய் கூறியவாறே என் வலிகளெல்லாம் இத்துடன் மறைந்து விடும் என்று தைரியத்தோடு சிகிச்சை முறைக்கு முழுமையாக ஒத்துழைத்து குணமடைந்தான் அச்சிறுவன்.

இன்று நாம் இயேசுவின் பாடுகளை நினைவு கூறுகிறோம். இயேசு இவ்வுலகத்தை மீட்க பாடுகளை ஏற்றுக்கொண்டார். இன்றைய முதல் வாசத்தில் இறைவாக்கினர் எசாயா இவ்வாறு இயேசுவைப்பற்றி  கூறுகிறார். "அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை." (50:6) ஆம் கடவுள் வழங்கும் மீட்பை அனைவரும் பெரும்பொருட்டு அவமானங்களையும்,இழிசொற்களையும் உடல் வாதைகளையும் அவர் அப்படியே ஏற்றுக்கொண்டார். உடலும் மனதும் அவருக்கு வலித்தது. "என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?" என மனித இயல்பில் கடவுளை நோக்கி கதறினார். ஆனால் அவர் ஓடி ஒளிந்துகொள்ள வில்லை. 

இன்றைய நற்செய்தி வாசகம் இயேசு எவ்வாறு துன்பங்களைச் சகித்துக்கொண்டார் என்பதை நம் மனக்கண்முன் மிக அழகாகச் சித்தரிக்கின்றது. கெத்சமெனித் தோட்டத்தில் இரத்த வியர்வை சிந்தும் அளவுக்கு மனதால் துன்பத்தை அணைத்துக் கொண்டார். தன் அன்புச் சீடர்கள் இருவரால் காட்டிக்கொடுக்கப்பட்டும் மறுதலிக்கப்பட்டும் வலியை அனுபவித்தார். தலைமமைக் குருக்கள், பிலாத்து போன்றோர் முன் விசாரணை என்ற பெயரில் துன்பத்தைத் தழுவினார். சிலுவையின் பயணத்தில் கசையடிகளும் ஏளனமும் அவரின் வேதனைகளைப் பெருக்கின. சிலுவை மரணம் அவரின் துன்பத்தின் உச்ச கட்டம்.

ஆனால் அத்தனை துன்பங்களும் நமக்கு மீட்பைக் கொண்டுவந்தன. இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதிய மடலில் மிகத் தெளிவாகவும் ஆழமாகவும் இச்செய்தியை விளக்குகிறார். கடவுள் வடிவில் அவர் விளங்கினாலும் மீட்புத் திட்டத்திற்காய். மனிதனாய்ப் பிறந்து தன்னை முற்றிலும் தாழ்த்தி சிலுவைச் சாவை ஏற்கின்ற அளவிற்குத் தன்னைக் கீழ்படுத்திக்கொண்டார் இயேசு. ஆனால் அவர் ஏற்ற துன்பங்கள் அவரை அப்படியே ஆழ்த்திவிடவில்லை. மாறாக உயர்த்திவிட்டது.

ஆங்கிலத்தில் "No pain no gain" என்ற பழமொழியை நாம் கேட்டிருப்போம். துன்பத்தின் வழியாகத்தான் நாம் நம் வாழ்வில் பல நன்மைகளை  அடைய முடிகிறது. உடல் வலிக்க உழைத்தால்தான், ஊதியம் கிடைக்கும். நேரத்தைச் செலவிட்டு கேளிக்கைகள் பொழுதுபோக்குகள் சிற்றின்ப ஆசைகளையெல்லாம் கடந்து படித்தவர்கள் இன்று நல்ல IAS அதிகாரிகளாகவும், மருத்துவர்களாகவும் இன்னும் பல அரிய துறைகளில் முன்னேறியவர்களாகவும் இருக்கிறார்கள். ரேசன் கடையில் கால் வலிக்கக் காந்திருந்து பொருட்களை வாங்கும் ஏழைகளைப் பார்த்திருக்கிறோம். ஏன் காய்ச்சல் குணமாக கசப்பான மருந்தையும் ஊசியின் வலியையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம் அல்லவா? வலி இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றாலும்  அந்த வலிகளையும் துன்பங்களையும் இயேசுவைப் போல ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருந்தால்தான் நம்மால் மீட்பை அடைய இயலும்.

பல சமயங்களில் நம் வாழ்வில் நாம் அனுபவிக்கும் இன்பங்களைக் குறித்தத் தெளிவான புரிதல் இல்லாத போதும்  நாம்  துன்ப வாழ்வுக்குத் தள்ளப்படுகின்றோம்.அத்தகைய துன்பங்களை நாம் ஏற்றுக்கொள்ளவும் சிரமப் படுகின்றோம். ஆனால் இயேசு இதைப் பற்றிய மிகத்தெளிவான மனநிலையைப் பெற்றிருந்தார். அவருடைய அருஞ்செயல்களை மட்டும் கண்டு அவர்பால் ஈர்க்கப்பட்ட மக்கள் அவரை ஆரவாரத்தோடும் ஒலிவக்குருத்துக்களோடும் மன்னரைப் போல வரவேற்றார்கள். இயேசு அதை ஏற்றுக்கொண்டாலும் இதே மக்கள் தன்னை துன்பத்திற்கு உள்ளாக்குவார்கள் என முற்றிலும் உணர்ந்திருந்தார். இன்பத்தையும் துன்பத்தையும் சமநிலையான மனநிலையோடு ஏற்றுக்கொண்டார் இயேசு.
 உலக காரியமானாலும் ஆன்மீகக் காரியமானாலும் இயேசுவின் இத்தகைய மனநிலை நமக்கு மிக அவசியம். எனவே துன்பங்களை நல்ல அணுகுமுறையோடு ஏற்று மீட்பினை அனுபவிக்க வரம் வேண்டுவோம்.

இறைவேண்டல் 

மீட்பின் இறைவா! அன்றாட வாழ்வில் உலகம் மற்றும் ஆன்மீக காரியங்களில் நாங்கள் எதிர்கொள்ளும் துன்பங்களை மீட்பை அடையும் வாயில்களாக மாற்ற எங்களுக்கு அருள் தாரும். ஆமென்.

Add new comment

6 + 4 =