தீயவைகளிலிருந்துவிடுபடுவோமா? | பணி. திலக ராஜா சி. | Sunday Reflection


இறைவன் படைத்த இவ்வுலகம் அருமையானது. அழகிய சோலைகள், காடுகள், வனவிலங்குகள், தோட்டங்கள், கனிதரும்மரங்கள், கால்நடைகள் என அனைத்தையும் படைத்து, நல்லதெனக்கண்ட இறைவன் அதன் மனிமகுடமாய் மனிதர்களைப் படைத்து அதன் பாதுகாப்பாளர்களாக இருத்தினார். ஆனால் மனிதன் தன்பணியின் தன்மை அறியாமல் செய்த தவறினால் இறைவன் மானிடர்களைத் தண்டித்தார். இதனால் கோபம்கொண்ட மனிதன் இன்றும் தொடர்ந்து இந்த உலகுக்கும் தன்னோடு வாழும் சக மனிதர்களுக்கும் தொடர்ந்து தொல்லை கொடுத்துவருகின்றான். தீங்கு இழைத்துவருகின்றான். இந்த தீங்கின் தொடர்ச்சியை பல நிலைகளில் நாம் இன்றும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த தொடர்ச்சிக்கு காரணம் என்னவாக இருக்கமுடியும்?மனிதனிடம் குற்றவுணர்ச்சியே இல்லாமல் போனதால்தான். புனித திருத்தந்தை இரண்டாம் ஜாண்பால் அவர்களும் இதையே வலியுறுத்துகிறார். எவனொரு தனது செயல் தவறு என எண்ணுகிறானோ அவன் அச்செயலைத்திருத்திக்கொள்கிறான். ஆனால் இங்கு தவறு, தனது தவறை நியாயப்படுத்துவதில்தான் உள்ளது. இதன் நீட்சி பிற தவறுகளில் பார்க்கிறோம்.

ஆனால் இன்றைய இறைவாக்கு வழிபாடு நம் தவறின் தன்மைமையை அறிந்து அதிலிருந்து விலகி இறைவனின் பாதையைபின் தொடர அழைப்புவிடுக்கிறது. ஏனெனில் கடவுள் இரக்கமுள்ளவர். இந்த இரக்கத்தை நாம் சுவைக்கவேண்டுமெனில் நம் தீயவழிகளிலிருந்து நாம் விலகினால் மட்டுமே சுவைத்து பருகமுடியும். இன்றைய முதல்வாசகத்தில் புறவினத்தார்களான அசீரியர்கள்மீது இறைவன் இரக்கம்கொள்கிறார். இஸராயேல் நாட்டுடன் பலமுறை போர்தொடுத்து அதை சூறையாடிய நாடு அசீரியா. அந்த மக்களையும் மீட்க இறைவன் யோனா வழியாக அழைப்புகொடுக்கிறார். இந்த அழைப்பினை ஏற்ற மக்கள் நாற்பது நாட்கள் அன்னம் தண்ணிபருகாமல் சாக்கு உடை உடுத்தி சாம்பலில் இருந்து கடவுளைகூவி அழைத்தனர். உண்மையிலே தங்கள் குற்றத்தை உணர்ந்தவர்களாய் குற்றவுணர்வு கொண்டவர்களாய் தங்கள் வன்முறைகள், தீயவழிகளின் தன்மையை அறிந்தவர்களாய் அவற்றிலிருந்து விலகி கடவுளை நோக்கி தங்கள் குரலை எழுப்புகிறார்கள். இதுதான் உண்மையான மனமாற்றம் என இஸ்ராயேல் சமூகத்திற்கு எடுத்துக்காட்டுகிறார்கள். கடுந்தவம் புரிவதும் கர்த்தரை நோக்கி கதறி அழுவதும் எளிது. ஆனால் உண்மையான மனமாற்றம் இந்த வெளிவேடத்தில் அல்ல்வன் முறைகளையும், தீச்செயல்களையும் விட்டொழிப்பதில்தான் அடங்கியுள்ளது. இதுவே உண்மையான மனமாற்றம்.

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடுக்கும் அழைப்பு இதுவே. காலம் நிறைவேறிவிட்டது. மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள் என்பதே. ஆம், யோனா அறிவித்த அதே அறிவிப்பைதான் இன்று இறைவனும் வழங்குகிறார். நமது தீயவழிகளிலிருந்துவிடுபட்டால் தான் நாம் இறைவனின் சீடர்களாகமாற முடியும் என்பதை உணர்த்துகிறது. சீடர்களை இயேசு அழைத்தவுடன் தங்கள் படகுகளைவிட்டுச் சென்றார்கள் என்பது நமக்கு உணர்த்துவது அவர்களது பழைய வாழ்வை விடுவதே. கடவுளுக்காக தன் வாழ்வை மாற்றிக்கொள்பவர் நிச்சயம்தக்க பிரதிபலனை அடைவார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு உணர்த்துகிறது.

இயேசுவின் இறையாட்சி என்பது எல்லோருக்காமானது என்றாலும், தங்கள் தீயவழிகளிருந்து தங்களை விடுவித்துக்கொள்பவர்களுக்கே முதலிடம் என்பதை இயேவின் போதனைகள் நமக்கு உணர்த்துகிறது. இயேசுவின் இறையாட்சி என்பதில் நாம் நுழைய ஒரே ஒரு தகுதி தேவை. அது நமது தீயவழிகளினின்று வெளிவருவதே. ஆம், நீதிமான்கள் பாவிகள்எனயிருந்தாலும், பாவிகளுக்கே முதலிடம். ஏனெனில் மனுமகன் நீதிமான்களை அல்ல பாவிகளையே அழைக்கவந்தார். காரணம், தியவர்களும் நல்வழிக்கு வரவேண்டும் என்பதே. இதைத்தான் எசேக்கியேல் இறைவாக்கினர் வெளிப்படுத்துகிறார், பொல்லாரின் சாவையா நான் விரும்புகின்றேன்? அவர்தம் வழிகளினின்று திருந்தி வாழவேண்டும் என்பது என் விருப்பம் (எசே 18:23). தீயோர் சாகவேண்டுமென்பது என்விருப்பம் அன்று. அத்தீயோர் தம் வழிகளில் இருந்து திரும்பி வாழவேண்டும் என்பதே என்விருப்பம் (எசே 33:11). அப்படியென்றால் இறைவன் விரும்புவதை அடைய நாம் முதலில் நம்மிடம் பாவவுணர்வு இருக்கவேண்டும். குற்றவுணர்வுஇருந்தால் அதுநிச்சயம் நமது குற்றத்தை கூறுபோட்டுப் பார்த்து நம்மை அதை மீண்டும் செய்யவிடமால் தடுக்கும்.

அப்படியெனில் இயேசுவின் இறையாட்சியில் பங்கெடுக்க சில சின்ன செயல்களை நாம் பயிற்சிசெய்தால் நிச்சயம் நமது தீயவழிகளிலிருந்து தொடர்ந்துவிடுபடலாம். நல்ல மனிதர்களாக வாழலாம்.அதனால் இறையாட்சியில் பங்கெடுக்கலாம்.

1. மாதமொரு முறையாவது ஒப்புரவு அருட்சாதனத்தில் பங்கெடுக்கலாமே. இதை நமது கடமையென நினைத்து பங்கெடுத்து, ஒப்புரவு அருட்சாதானத்தில் நாம் அறிக்கையிடும் பாவங்களை குறைந்தபட்சம் 21 நாட்களுக்கு அதிலிருந்த விலகினால் அதுவே தொடர் பயிற்சியாக மாறும் போது நாம் நமது தீய வழிகளிலிருந்து வெளிவரமுடியுமே!

2. குறைந்த பட்சம் ஞாயிறு திருப்பலியிலாவது முழுமையாக பங்கெடுக்கலாமே! ஞாயிறுத் திருப்பலி என்பது இறைவனுக்கு நன்றி சொல்லும்நாள். நாம் இறைவனின் அருளைப்பெற்றுள்ளோம். தவறுகள் எவ்வளவுதான் செய்தாலும் இறைவனின் அருட்கரம் நம்மை தொடர்ந்து வழிநடத்துகிறதே அதை நினைத்து நன்றி சொல்லலாமே. அது நம்மை மாற்ற நம்மை திறந்து கொடுக்கலாமே!

3. எதை செய்தாலும் உணர்ந்து செய்யலாமே! ஆம். பெரும்பாலும் தவறுகள் உருவாகக் காரணம் என்ன? நாம் செய்வதை ஏனோ தானோ எனச்செய்வதே. அப்படியெனில் செய்வதை உணர்ந்து, என்ன செய்கிறோம் என அறிந்துசெய்தால் நிச்சயம் நாம் செய்பவற்றில் தெளிவு கிடைக்கும். தீயவைகளிலிந்து விழாமல் தடுக்கலாம். இறையரசில் பங்குபெறலாம்.

இறைவனின் அருள் இவ்வுலகில் நம்மீதுபொங்கிவருகிறது. ஆனால்நமதுபாவநிலைகள் அதனை சாலையில் உள்ளவேகத் தடைகளைப்போல கடவுளின் அருளைத்தடுப்பவைகளாக உள்ளன.இறைவனின் அருளைப்பெற நமது தீயநிலைகளிலிருந்து விடுதலை பெறுவோம். இறைவனின் அரசில் நமது இருத்தலை பதிவுசெய்வோம்.

Add new comment

3 + 16 =