உண்மை விடுதலை அளிக்குமா! | குழந்தை இயேசு பாபு | Daily Reflection


தவக்காலம் - ஐந்தாம் புதன்; I: தானி: 3: 14-20, 24-25, 28; II:  தானி: 1: 29. 30-31. 32-33; III: யோ: 8: 31-42

உண்மைதான் ஒரு மனிதனுக்கு முழுமையான சுதந்திரத்தை கொடுக்கும். உண்மையாக இருப்பவர்கள் பல நேரங்களில் துன்புறுத்தப் படலாம், சோதிக்கப் படலாம். ஆனால் அவர்கள் உள்ளம் அக விடுதலை பெற்றிருக்கும். நம் ஆண்டவர் இயேசு உண்மைக்குச் சான்று பகரவே இந்த உலகத்திற்கு வந்தார். அவர் உண்மைக்குச் சான்று பகரும் பொழுது பற்பல இடையூறுகளையும் துன்பங்களையும் சவால்களையும் சந்தித்தார். இருந்தபோதிலும் மன உறுதியோடு இறையாட்சியின் மதிப்பீடுகள் வழியாக உண்மையை இந்த உலகிற்குக் கொண்டு வந்தார். அதன் வழியாக அனைவரும் அக விடுதலை பெற்று மீட்புப் பெற வழிகாட்டினார்.

இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் உரோமை அரசின்  அடிமைகளாகத் தன் சொந்த நாட்டிலே மக்கள் இருந்தனர். மேலும் குறுநில மன்னர்களான ஏரோது போன்றவர்களின் கட்டுப்பாட்டிலும் இருந்தனர். உரோமை அரசு யூதர்களை ஆட்சி செய்தாலும்,  யூதர்கள் கடவுள்தான் தங்களை ஆட்சி செய்கிறார். உரோமையர்கள் தங்களை ஆட்சி செய்யவில்லை என்பதில் தெளிவாய் இருந்தனர். இது இயேசுவுக்கும் தெரியும். ஆனால் இயேசு மக்களுக்கு விடுதலை கொடுப்பவராக இருக்கின்றார். இஸ்ரயேல் மக்களுள் விடுதலைக் குழுக்கள்,  திருக்காட்சி குழுக்கள் மற்றும் யூதர்கள், மெசியா உரோமை அரசை வீழ்த்தி தாவீதைப் போன்று சிறந்த ஆட்சி செய்வார் என்று நம்பினர். ஆனால் ஆண்டவர் இயேசு தான் மெசியா  என்பதை வெளிப்படையாக வெளிப்படுத்தாமல்,  தன்னுடைய போதனைகளின் வழியாகவும் வல்ல செயல்களின் வழியாகவும் உண்மையான வாழ்வின் வழியாகவும் வெளிப்படுத்தினார். இதைப் புரிந்து கொள்ளாமல் இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த யூதர்கள் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளத் தயங்கினர்.

இயேசு இன்றைய நற்செய்தியில்  "உண்மை உங்களுக்கு
விடுதலை அளிக்கும்' என்றார்'' (யோவான் 8:31-32) என்று கூறினார். உண்மையான வாழ்வு மட்டும்தான்  விடுதலையைக் கொடுக்கும். சட்டத்தின் பெயராலும் சமயத்தின் பெயராலும் பாமர மக்களை அடக்கி ஒடுக்கிய பரிசேயர்களும் சதுசேயர்களும் மக்களின் அக மற்றும் புற விடுதலைக்குத் தடையாக இருந்தனர். ஆனால் பெரும்பாலான யூதர்கள் இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் ரோமை  அரசின் ஆதிக்கம் இருந்தாலும், புற விடுதலையை அனுபவிக்கத்தான் செய்தனர். அப்பொழுது ஏன் இயேசு உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்? என்ற கேள்வி எழலாம்.

ஏனெனில் புற விடுதலை ஓரளவுக்கு மக்களால் அனுபவிக்கபட்டாலும் அக விடுதலை இல்லாமல் பாவத்தின் பிடியில் சிக்கித் தவித்தனர். மன நிம்மதியும் அமைதியும் இல்லாமல் துன்புற்றனர். இப்படிப்பட்ட மக்களுக்கு ஆரோக்கியத்தை  கொடுப்பவராகவும் மகிழ்ச்சியைக் கொடுப்பவராகவும் நிறைவைக் கொடுப்பவராகவும் உள்ளார்ந்த அமைதியைக் கொடுப்பவராகவும் இயேசு இருந்தார். இயேசு கொண்டு வந்த விடுதலையை அனுபவிக்க அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த விடுதலையை முழுமையாக அனுபவிக்க நம்முடைய  வாழ்வில் உண்மை தேவை. உண்மையோடு வாழும் பொழுது தான் இயேசு தரும் அக  விடுதலையை முழுமையாக அனுபவிக்க முடியும். இன்றைய காலகட்டத்தில் மனச்சிறையில் எண்ணற்ற மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர். அதில் பெரும்பாலானோர் பொய்மை வாழ்வால் மனச்சாட்சியால் குத்தப்பட்டு துன்புறுபவர்கள்.

இயேசு இறையாட்சிப் பணி செய்த பொழுது சமூகத்தில் புறந்தள்ளப்பட்ட பாவிகள், நோயாளர்கள், புறவினத்தார், மற்றும் ஏழைகள் ஆகியோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். காரணம் அவர்கள் பி அக விடுதலை இல்லாமல் துன்புற்றனர். அத்தகைய நிலையிலிருந்து அவர்கள் வெளி வர தன்னுடைய உண்மையான அன்பை இயேசு அவர்களுக்குக் கொடுத்தார். அதேபோல அவர்களும் உண்மையுள்ளவர்களாக வாழ மனம் மாறி நற்செய்தி நம்பிட வழிகாட்டினார். இதன் வழியாக இறையாட்சிக் கனவினை இயேசு வாழ்ந்து காட்டினார். எனவே நம்முடைய அன்றாட வாழ்வில் புற மற்றும் அக விடுதலையை முழுமையாகச் சுவைக்க உண்மையோடும் நேர்மையோடும் இருக்க முயற்சி செய்வோம். அப்பொழுது எத்தனை இடையூறுகள் வந்தாலும் இயேசு கொண்டு வந்த விடுதலையை நம் வாழ்விலே பெறமுடியும்.

இறைவேண்டல் :
விடுதலையின் நாயகனே இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் நாங்கள் இவ்வுலகம் சார்ந்த பாவத்திற்கும் மோகத்திற்கும்  பேராசைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல், தூய்மையான வாழ்வுக்கும் நேர்மையான வாழ்வுக்கும் உண்மையான வாழ்வுக்கும் முக்கியத்துவம் கொடுக்க அருளைத் தாரும். ஆமென்.

Add new comment

1 + 0 =