Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இயேசுவை மறுதலிக்கின்றவர்களா நாம்? | குழந்தை இயேசு பாபு | Daily Reflection
புனிதவாரம் செவ்வாய்; I: எசாயா 49:1-6; II: தி.பா 18 : 70:1-6,15,17; III: யோ: 13:21-33,36-38
சதிஷ் மற்றும் ராஜா இருவரும் நண்பர்கள். ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல் எப்பொதும் ஒன்றாகவே இருப்பார்கள். அவர்கள் இருவரும் வகுப்புத் தோழர்களும் கூட. தேர்வு சமயத்தில் இருவருமே நன்றாகப் படித்துத் தங்களைத் தயாரித்தனர். ஆனால் ராஜா தன் நண்பனுக்குத் தெரியாமல் கடினமான விடைகளைத் தாளில் எழுதி மறைத்துக் கொண்டுவந்திருந்தான். அது அவனுக்கு முதல் தடவை. தேர்வு அறைக்குள் நுழையும் போது ஆசிரியர் ஒவ்வொருவரையும் சோதித்துக் கொண்டிருந்தார். அதைக் கண்டு பயந்த அம்மாணவன் தான் பார்த்து எழுதுவதற்காக எழுதி வைத்திருந்த தாளை கீழே போட்டான். அது சரியாக அவன் நண்பன் சதிஷ் அருகில் விழுந்தது. இதைக் கவனித்த ஆசிரியரோ சதிஷ்தான் தவறு செய்ததாக எண்ணி அவனுக்குத் தண்டனைக் கொடுத்து ஒருமணி நேரம் தேர்வு எழுத விடாமல் அமர வைத்துவிட்டார்.தான் செய்யவில்லை என்று சதிஷ் எவ்வளவோ சொல்லியும் ஆசிரியர் சற்றும் அவன் பேச்சைக் கேட்கவில்லை. ஆனால் ராஜாவோ தன் தவறை ஒப்புக்கொள்ளாமல் அவன் தப்பித்துக்கொண்டதாக எண்ணி தேர்வை எழுதினான். தன் நண்பனைக் குறித்து சிறிதும் கவலை கொள்ளவில்லை.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் சீடர்களில் ஒருவர் தன்னைக் காட்டிக் கொடுக்கப்போவதாக முன்னறிவிக்கின்றார். அதே போல நான் உங்களோடு வருவேன். இறக்க நேர்ந்தாலும் துணிவேன் என்று வீர வசனம் பேசிய பேதுருவைக் கண்டு சேவல் கூவும் முன் இயேசுவை மும்முறை மறுதலிக்கப் போவதையும் கூறுகிறார். தன்னுடனே மூன்று ஆண்டுகள் வெறும் சீடர்களாக அல்ல நண்பர்களாக வாழ்ந்தவர்கள் தன்னைக் காட்டிக் கொடுக்கப் போவதையும் மறுதலிக்கபோவதையும் அறிந்த இயேசு மிகவும் மனவேதனை அடைகிறார் என்பதை நாம் நற்செய்தியில் வாசிக்கிறோம்.
அவ்வாறெனில் அன்பும் நட்பும் அங்கே கேள்விக்குறியாகிறது.
நம்முடைய அன்றாட வாழ்வில் இதுபோன்ற மறுதலிப்புகளும் காட்டிக் கொடுக்கப்படுதலும் தங்கு தடையின்றி நடைபெறுகின்றன. சில வேளைகளில் நாம் மறுதலிக்கப்படுகிறோம். பல வேளைகளில் நாம் பிறரை மறுதலிக்கிறோம்.
இருவர் மூவர்
கூடிப்பேசும் போது அங்கே இல்லாத இன்னொருவரைப் பற்றி குறைகூறுவது மறுதலிப்பதற்கு சமம். சிறு பிரச்சனைகளால் பிரிந்த நண்பர்கள் மீண்டும் சந்திக்கும் போது யாரென்றே தெரியாது என்பது போல் பிதற்றுவது மறுதலிப்பிற்கு சமம். அக்கம் பக்கத்தில் உள்ளோர் பேச்சைக் கேட்டுக்கொண்டு பிறரைக் குற்றம் சுமத்துவதும் ஏன் குற்றவாளியைப் போல் பார்ப்பது கூட ஒருவித காட்டிக்கொடுத்தலும் மறுதலித்தலும் தான். தேவையின் போது நண்பன் என்பதும் தேவை முடிந்த பின் கண்டுகொள்ளாததும் அத்தகைய செயல் தான்.
மேற்குறிப்பிட்ட உதாரணங்கள் மிகக் கொடியவை அல்ல என்பது போல் நமக்குத் தோன்றலாம். ஆனால் அவை செய்யப்படும் இடங்களிலெல்லாம் மறுதலிக்கப்படுவது இயேசுவே.
தவக்காலத்தின் இறுதி நாட்களில் புனித வாரத்தில் இருக்கும் நாம் இத்தகைய குணம் நம்மிடமிருந்தால் அதை நம்மிடமிருந்து அகற்ற முற்படுவோம். பிறரை மறுதலிக்கும் போது இயேசுவை மறுதலிக்கிறோம். இயேசுவை மறுதலிக்கும் போது நம்மை நாமே மறுதலிக்கிறோம் என உணர்ந்து கொள்வோம்.
இறைவேண்டல்
எம்மை மறுதலிக்காமல் ஏற்றுக்கொள்ளும் இயேசுவே,நாங்கள் பிறரை மறுதலிக்காமல் ஏற்றுக்கொள்ளும் வரம் தாரும். ஆமென்.
Add new comment