தவக்காலம் - உறவின் காலமா! | குழந்தை இயேசு பாபு | Sunday Reflection


தவக்காலம் - ஐந்தாம் ஞாயிறு; I: ஏரே:  31: 31-34; II:  திபா: 51: 1-2. 10-11. 12-13 ; III: எபி: 5: 7-9; IV: யோ: 12: 20-33

உறவு மனித வாழ்வுக்கு அடிப்படையான ஒன்றாகும். இந்த உலகத்தில் பிறந்த எல்லா மனிதரும் உறவோடு வாழ்வதில்தான் நிறைவான மகிழ்வைக் கண்டடைய முடியும். இந்த  தவக்காலத்தில் பலவகையில் கடவுளின் பிள்ளைகளாக மாற ஆயத்தப்படுத்தி வருகிறோம். அதிலும் குறிப்பாக கடவுளோடும்  பிறரோடும் நம்மோடும் நல்லுறவு கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். உறவோடு வாழ்வதுதான் மனிதத்தின் இயல்பு. இத்தகைய சிந்தனையை தான் இன்றைய திருவழிபாட்டு வாசகங்கள் சிந்திக்க அழைப்பு விடுக்கின்றன. 

கடவுள் இந்த உலகத்தைப் படைத்து மனிதரை அவரை உருவிலும் சாயலிலும் படைத்ததன் வழியாக இறை மனித உறவுக்கு அடித்தளமிட்டார். கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும் கடவுளோடு நல்லுறவு கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். கடவுளோடு நல்லுறவு கொள்வதென்பது அவரின் சாயலில் படைக்கப்பட்ட எல்லா மனிதரையும் முழு பௌஉள்ளத்தோடு அன்பு செய்வதாகும். கடவுளின் படைப்பை ஒரு வார்த்தையில் சொன்னால் அது அன்பு என்பதாகும். கடவுளின் அன்பின் வெளிப்பாடாகத்தான் இந்த உலகமானது படைக்கப்பட்டது.  எனவே நாம் ஒவ்வொருவரும் கடவுளை முழு உள்ளத்தோடு அன்பு செய்து பிறரையும் அன்பு  செய்து  இறை மனித உறவில் நிலைத்திருக்க அழைக்கப்பட்டுள்ளோம்.

கடவுள் சீனாய் மலையில் நடந்த உடன்படிக்கையின் வழியாகத் தன் மக்களோடு நல்லுறவு கொண்டார்.  ஆனால் இஸ்ரயேல் மக்கள் கடவுளின் உடன்படிக்கையை மறந்து கடவுளுக்கு எதிராகப் பற்பல பாவங்களைச் செய்தனர். அதன் விளைவாக இஸ்ரயேல் மக்கள் கோவிலை இழந்தார்கள். அரசர்களின் ஆட்சியை இழந்தார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக உடன்படிக்கைப் பேழையை இழந்தார்கள். இறைவனின் அருளால் தூண்டப்பட்டு இறைவாக்கினர் எரேமியா இன்றைய முதல் வாசகம் புதிய உடன்படிக்கையின் சின்னமாகிய கடவுளின் மகனான இயேசுவின் கல்வாரி மலையில் கடவுள் ஏற்படுத்திய உடன்படிக்கை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது என்பதை முன்னறிவிப்பதைப் போன்று அமைந்துள்ளது. 

பழைய உடன்படிக்கையில் இஸ்ரயேல் மக்கள் மட்டுமே கடவுளின் மக்களாகக் கருதப்பட்டனர். ஆனால் கடவுள் கொடுத்த வாய்ப்பையும் அருளையும் அவர்கள்  இழந்தனர்.  ஆனால் கடவுளின் உடன்படிக்கையையானது கல்வாரி மலையில் தான் புதிய உடன்படிக்கையாக நிறைவுற்றது. இந்த உடன்படிக்கையில் இஸ்ராயேல் மக்களைத் தாண்டி எல்லா மக்களையும் கடவுள் தன் மக்களாக ஏற்றுக் கொண்டார். எல்லா மக்களிடமும் நல்லுறவு கொள்ள தன் மகனையே கையளித்தார். எல்லா மக்களும் மீட்பு பெற்று புது வாழ்வு பெற இந்தப் புதிய உடன்படிக்கையின் வழியாக வாய்ப்பு கொடுத்தார். கடவுளின் இயல்பே மனிதரோடு உறவுகொண்டு அவரோடு இணைந்திருக்கச் செய்வது தான்.

ஒரு முதியோர் இல்லத்தில் ஒரு அருட்சகோதரர் ஒருவர் சந்திப்புக்கு சென்றிருந்தார். அப்பொழுது ஒரு முதியவரைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தார். அந்த முதியவர் சாலையோரத்தில் படுத்து கிடந்து உண்ண உணவு இல்லாமலும் உடுத்த உடை இல்லாமலும் இருக்க இடமில்லாமலும் இருந்தவர்.  ஒரு தன்னார்வத் தொண்டர் அந்த முதியவரைக் கண்டார். அந்த முதியவரை அருட்சகோதரிகள் நடத்திவந்த ஒரு முதியோர் இல்லத்திற்கு அழைத்து வந்து சேர்த்தார். அந்த அருள்சகோதரிகளும்அந்த முதியவரை அன்போடும் பாசத்தோடும் தன் சொந்த  தந்தையை போல  கவனித்து வந்தனர்.  ஒரு மாதம் கழிந்த பிறகு முதியவரை முதியோர் இல்லத்தில் சேர்த்த அந்த தன்னார்வ தொண்டர் முதியவரிடம் "உங்களுடைய அனுபவம் எப்படி இருக்கின்றது? "என்று கூறினார்.  அதற்கு அந்த முதியவர் "எனக்கு அனைத்தும் நிறைவாக இருக்கின்றது.உறவுக்காக இவ்வளவு நாள் ஏங்கிக்  கொண்டிருந்தேன். ஆனால் நான் இழந்த  உறவை இப்பொழுது நிறைவாகப் பெற்று வருகிறேன். என்னை அன்பு செய்வதற்கு இந்த உலகத்தில் யாருமே இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் உங்கள் வழியாக கடவுள் எனக்கு நல்ல உறவினைக் கொடுத்துள்ளார். உண்மையிலேயே இந்த அருள்சகோதகரிகளி வழியாக கடவுள்   மிகவும் அன்பானவர். உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வழிகாட்டியவர் என்பதை    அறிந்துகொள்ள முடிகின்றது " என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்து  கொண்டார்.

உறவோடு வாழ்வதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு. அந்த உறவு வாழ்விலே   நாம் வாழ்வின் நிறைவை அனுபவிக்க முடியும்.  கிறிஸ்தவ மதிப்பீடுகள் இந்த உலகத்தில் அதிகம் பரவியதற்கு காரணம் உறவு மட்டுமே. பல்வேறு அருள்பணிகள் நம்முடைய திருஅவையில் இருக்கின்றன. அதற்கு அடிப்படைக் காரணம் உறவு மட்டுமே. உறவை உடன்படிக்கையின் வழியாக ஆழப்படுத்த கடவுள் இஸ்ராயல்  மக்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் கடவுளின் உடன்படிக்கையை மறந்து கடவுளுக்கு எதிராக பற்பல பாவங்கள் செய்தனர்.  எனவேதான் எரேமியா இறைவாக்கினர் புதிய உடன்படிக்கையின் அடையாளமான இயேசுவின் உறவை முன்னறிவித்துள்ளார் . 

இன்றைய இரண்டாம் வாசகம் பாடுகள் வழியாகத்தான் இயேசு தன்னை முழுமையான தலைமை குருவாக வெளிப்படுத்தியதை சுட்டிக்காட்டுவதாக இருக்கின்றது. இயேசு பாடுகளை ஏற்றது நம்மோடு புதிய உடன்படிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக. இந்த புதிய உடன்படிக்கை உறவின் அடையாளமாகும்.

இன்றைய நற்செய்தி வாசகம் நம்மை கோதுமை மணியாக மாறி பலன் கொடுக்க அழைப்பு விடுக்கின்றது. "கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால்   அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலைத் தரும் "(யோ: 12:24) என்று இயேசு கூறியுள்ளார்.  இயேசு ஒரு கோதுமை மணியாக இந்த மண்ணுலகத்தில் விதைக்கப்பட்டார். விதைக்கப்பட்ட இறையாட்சி மதிப்பீடுகள் உயிர்ப்பின் வழியாக அனைவருக்கும் சென்றடைந்தது. இன்றும் அவரின் மதிப்பீடுகள் பல்வேறு வகையில் வாழ்வாக்கப்பட்டு வருகின்றது. இயேசுவின் மதிப்பீடுகள் நாம் நல்லுறவோடு வாழ அழைப்பு விடுக்கின்றன.  இயேசுவின் வாழ்வே உறவின் அடித்தளமாக இருக்கின்றது. இதைத்தான் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலில் "பலமுறை பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையர்களிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாட்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார் " (எபி: 1: 1-2)என்று வாசிக்கிறோம்.  கடவுள் தன் மகன் வழியாகப் பேசுவதன் காரணம் நம்மோடு நல்லுறவு கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆகும். அதேபோலதான் ஆண்டவர் இயேசுவும் தன்னுடைய போதனைகளின் வழியாகவும் வல்ல  செயல்களின் வழியாகவும்  பாடுகள் உயிர்ப்பின் வழியாகவும் நம்மோடு நல்லுறவு கொண்டார். இந்த உறவு உடன்படிக்கையின் அடையாளமாக இருக்கின்றது. உறவின் உச்சத்தை நற்கருணையை ஏற்படுத்துவதன் வழியாக இயேசு வெளிப்படுத்தியுள்ளார். 

இந்தத் தவக்காலத்தில் நம்மையே சற்று ஆழமாகச் சிந்தித்து பார்க்க அழைக்கப்பட்டுள்ளோம். நல்லுறவோடு வாழ  புதிய உடன்படிக்கையின் சின்னமாகிய இயேசுவைப் போல நாமும் வாழ அழைக்கப்பட்டுள்ளோம். நல்ல உறவுதான் நம்மை நல்ல ஒரு மனிதராகவும் கிறிஸ்தவராகவும் உருமாற்றும்.  உறவோடு வாழ்வதில்தான் மனித வாழ்வு நிறைவு பெறும். எனவே இந்தத் தவக்காலத்திலிருந்து நாம் இந்த உலகத்தில் வாழக்கூடிய ஏழை-எளிய, ஒடுக்கப்பட்ட கைவிடப்பட்ட அடையாளம் காணப்படாத மக்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்து நல்லுறவு கொள்ள முயற்சி செய்வோம். நாம் பிறரை குறை சொல்வதை நிறுத்திவிட்டு நிறைவான மனநிலையோடு இறையாட்சி பணி செய்திட முயற்சி செய்வோம். உறவின் வழியாக இயேசு நமக்கு விட்டுச்சென்ற இறையாட்சி மதிப்பீடுகளை வாழ முயற்சி செய்வோம்.

இறைவேண்டல் :

வல்லமையுள்ள இறைவா! எங்களுடைய வாழ்வில் உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது உம்முடைய மதிப்பீடுகள் இந்த உலகத்தில் வாழ்வாக்கப்பட அருளைத் தாரும்.  ஆமென்.

Add new comment

6 + 1 =